தவெக வேட்பாளர் அறிமுகம் எப்போது? வெளியான புதிய அறிவிப்பு!
தவெக வேட்பாளர் அறிமுகம் எப்போது? வெளியான புதிய அறிவிப்பு பற்றி...
தவெக வேட்பாளர் அறிமுகம் எப்போது? தொடர்பான புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
ஆளும் திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. புதுவரவான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது.
முதல்முறை தேர்தலில் களமிறங்கும் விஜய்யின் தவெக தனித்துப் போட்டியிடும் நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் வேட்பாளர்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மார்ச் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தவெக பொதுச் செயலர் புஸ்ஸி என். ஆனந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக விளங்கும் தமிழக வெற்றிக் கழகம் தனது அரசியல் பயணத்தில் மிக முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழ்நாட்டு மக்களைப் பல்வேறு வார்த்தை ஜாலங்களால் தொடர்ந்து ஏமாற்றி வரும் அரசியல் இயக்கங்களுக்கு இடையே மக்களுக்கான உண்மையான ஜனநாயக அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் முன்னெடுத்து வருகிறது.
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம், வரும் 29ஆம் தேதி காலை 11 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக மக்களின் வெற்றித் தலைவர் விஜய் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் 30 தொகுதிகள் ஆகியவற்றுக்கான வெற்றி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், வேட்பாளர்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட கழகத்தினர் 500 பேரைத் தவிர்த்து வேறு எவருக்கும் அனுமதி இல்லை.
தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்நிகழ்ச்சி உள்ளரங்க நிகழ்ச்சியாக நடைபெறும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில் வெற்றிச் சின்னமான விசில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் வகையில் கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்புடன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.