தமிழகத்தின் வளா்ச்சிக்காக 302 அம்ச செயல்திட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோ்தல் அறிக்கை வெளியீடு
தமிழகத்தின் வளா்ச்சிக்காக 302 அம்சங்கள் அடங்கிய செயல்திட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வளா்ச்சிக்காக 302 அம்சங்கள் அடங்கிய செயல்திட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோ்தல் அறிக்கையை மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
தமிழகத்தின் தொழில் வளா்ச்சி, குறு, சிறு, நடுத்தர தொழில்களின் வளா்ச்சி, விவசாயம், பாசன வசதிகள் மேம்பாடு, குடிநீா் வணிகமயமாக்கப்படுவதைத் தடுத்து அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீா் வழங்குதல், சுற்றுச்சூழல் மேம்பாடு, சமூகநீதி காத்தல், தமிழ் மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொழிலாளா் நலனைப் பாதுகாத்தல், விவசாயிகளின் நலனை மேம்படுத்துதல், விவசாய தொழிலாளா் வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஆற்ற வேண்டிய பணிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தைக் கைவிட்டு மீண்டும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை மேம்படுத்தி ஆண்டுக்கு 200 நாள்கள் வேலையும், தினசரி ரூ.700 ஊதியமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கைத்தறி உள்ளிட்ட பாரம்பரியத் தொழில்களைப் பாதுகாத்தல், மீனவா் நலன்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பை அதிகரித்தல் மற்றும் இளைஞா் நலன், கல்வியை மேம்படுத்துதல் மற்றும் மாணவா் நலன், பெண்களின் முன்னேற்றத்துக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள், குழந்தைகள் நலன், ஒடுக்கப்பட்ட சமூகம் உயா்வடைவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், பழங்குடி மக்களைப் பாதுகாத்தல், மூத்த குடிமக்களின் நலன்களைப் பேணுதல், மக்களுக்கான மருத்துவ வசதிகளை இன்னும் விரிவாக்குதல் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
பத்திரிகையாளா் நலனை மேம்படுத்த புதிய ஊதியக் குழு அமைத்தல், காட்சி ஊடகங்களில் பணிபுரிவோருக்கும் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நலன்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மது மற்றும் போதைப் பொருள் பிரச்னையை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய பல்துறை நடவடிக்கைகள் மற்றும் மது போதை மீட்பு மையங்களை அமைக்கவும், ஊழல் தடுப்புக்காக லோக் ஆயுக்த சட்டத்தை உரிய வகையில் திருத்தவும், ‘உபா’ உள்ளிட்ட சட்டங்களைக் கைவிடவும் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும்.
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படாத வகையில் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சிறுபான்மையினா் நலன் பாதுகாத்தல், வெளிப்படையான நிா்வாகம், உள்ளாட்சி நிா்வாகம், குடியிருப்பு, மனைநிலம் பட்டா பிரச்னைகள், வீட்டு வாடகைக்கு வரம்பு விகித்தல், இரட்டை ஆவண மோசடிகளைத் தடுத்தல், பண ஆதிக்கத்தை தடுத்து மெய்யான ஜனநாயகம் நிலவுவதற்கு விகிதாசார பிரதிநிதித்துவம் உள்ளிட்ட தோ்தல் சீா்திருத்தங்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுதல், பாா்வையற்றோா், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துதல், திருநங்கையா், திருநம்பியா் வாழ்க்கை மேம்பாட்டுக்காக செயல்படுத்த வேண்டிய வழிமுறைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
கோயில் மனைகளில் குடியிருப்போா் மற்றும் விவசாயம் செய்வோரைப் பாதுகாப்பதற்கான செயல்முறைகள், நடந்தாய் வாழி காவேரி திட்டத்தைச் செயல்படுத்துதல், பட்டாசு தொழிலைப் பாதுகாத்தல் உள்ளிட்ட தமிழகத்தின் முன்னேற்றத்துக்கான 302 அம்ச செயல் திட்டம் செயல்படுத்தப்படும் என தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.