விஜய்க்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் அறிக்கை!
விஜய்க்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிட்டிருப்பது பற்றி...
தவெக அமைச்சரவை பதவியேற்புக்கு முன்பு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்னும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் இருக்கிறது.
திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் தனது 5 உறுப்பினர்களின் ஆதரவை வழங்கியிருக்கும் நிலையில், இன்னும் 6 பேரின் ஆதரவு தவெகவுக்கு தேவைப்படுகிறது. விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
Advertisement
Advertisement
இதனிடையே, தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில் தமிழ்நாடு ஆளுநரை தவெக தலைவர் விஜய் நேற்று நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், இதுவரை விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காததால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஜய்க்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில், தெளிவான தீர்ப்பை வழங்கவில்லை.
எனினும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 உறுப்பினர்களை வழங்கி, அதனை தனிப் பெரும் முதன்மை எண்ணிக்கை கொண்ட கட்சியாக தேர்வு செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில் தவெக தலைவர் சி.ஜோசப் விஜய், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரியுள்ளார். பதவி ஏற்புக்கு முன்பு தவெக, தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல.
தனிப் பெரும் எண்ணிக்கை கொண்ட தவெக, தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க ஆளுநர், அரசியலமைப்பு சட்டப்படி அவகாசம் தர வேண்டும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த எஸ்.ஆர். பொம்மை வழக்கு உட்பட பல வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஆளுநர், தவெக தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க வாய்ப்பளித்து அரசியலமைப்பு சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் உணர்வை மதித்து நடக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆளுநரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
CPI Issues Statement in Support of TVK and Vijay!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.