முகப்பு
தொகுதியும் வேட்பாளர்களும்

குமாரபாளையம் : ஐந்தாவது வெற்றியை எதிர்நோக்கும் பி.தங்கமணி!

நாமக்கல்-ஈரோடு மாவட்ட எல்லையில், காவிரி ஆற்றங்கரை ஓரத்தில், புகழ்பெற்ற வட்டமலை முருகன் கோயில் அமைந்துள்ள தொகுதி குமாரபாளையம்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 6:11 AM
பி. தங்கமணி (அதிமுக), செ.பாலு (திமுக), சி.விஜயலட்சுமி (தவெக), கே.யுவராணி (நாதக)
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 6:06 AM

நாமக்கல்-ஈரோடு மாவட்ட எல்லையில், காவிரி ஆற்றங்கரை ஓரத்தில், புகழ்பெற்ற வட்டமலை முருகன் கோயில் அமைந்துள்ள தொகுதி குமாரபாளையம்.

தொழில்... பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் 50,000-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய விசைத்தறி பட்டறைகள், விவசாயம், ஜவுளி உற்பத்தி, நூற்பாலை, சாய ஆலைகள், கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன.

நிறைவேற்றப்படாத கோரிக்கைகள்... நூல் சாயமிடும் தொழிலுக்கு பெயர்பெற்ற இத்தொகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் உள்ளது. சாய கழிவுநீர் காவிரி ஆற்றில் கலப்பதால் மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு உருவாகிறது. ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக கிடப்பில் உள்ளது. அரசுப் பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை. அடிப்படை வளர்ச்சித் திட்டப் பணிகளில் குமாரபாளையம் தொகுதி புறக்கணிக்கப்படுவதாக மக்களிடையே பரவலான குற்றச்சாட்டு உள்ளது.

Advertisement

சமூக நிலவரம்: செங்குந்த முதலியார், கன்னட செட்டியார், வேட்டுவக் கவுண்டர், கொங்கு வேளாளக் கவுண்டர், பட்டியலினத்தவர் பரவலாக உள்ளனர். இதில், வெற்றியை தீர்மானிப்பது நெசவாளர்களான முதலியார் சமூகத்தினரும், விவசாயிகளான கொங்கு வேளாளர் சமூகத்தினரும்தான்.

2026-இல் களம் காணும் வேட்பாளர்கள்: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி (குமாரபாளையம் தொகுதியில் நான்காவது முறையாக போட்டி), திமுக சார்பில் செ. பாலு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சி. விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி சார்பில் கே. யுவராணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பி. தங்கமணி (அதிமுக): நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே கோவிந்தம்பாளையத்தை பூர்விகமாகக் கொண்ட தங்கமணி, பள்ளிபாளையம் ஒன்றிய அதிமுக செயலராகவும், அதன்பிறகு மாவட்டச் செயலராகவும் உயர்ந்தவர். முதல்முறையாக 2006 தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2011 தேர்தலின்போது தொகுதி மறுசீரமைப்பில் குமாரபாளையம் தொகுதி புதிதாக உருவானது. இதனால், திருச்செங்கோட்டை தவிர்த்து சொந்தத் தொகுதியான குமாரபாளையத்தில் களமிறங்கினார் தங்கமணி. இந்தத் தேர்தலில் 26,887 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், அதிமுக அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராகவும், பிறகு தொழில் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

2016 தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு 47,329 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைய, அவருக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 2021 தேர்தலில் குமாரபாளையம் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிட்டு 31,646 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை தோற்கடித்தார். இவ்வாறு திருச்செங்கோடு தொகுதியில் ஒருமுறை, குமாரபாளையம் தொகுதியில் 3 முறை என 4 முறை எம்எல்ஏவாக, அமைச்சராக இருந்த பி. தங்கமணி, தொகுதியில் தன்னால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் தனக்கு சாதகமாக இருக்கும் என மிகுந்த நம்பிக்கையில் உள்ளார்.

திமுக ஆட்சி மீதான மக்களின் அதிருப்தி, அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள புதிய திட்டங்கள் உள்ளிட்டவை தனக்கு கைகொடுக்கும் என நம்புகிறார். தொடர்ந்து, ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்பில் தீவிர களப் பணியாற்றி வருகிறார்.

செ.பாலு (திமுக): குமாரபாளையம் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிபாளையம் அக்ரஹாரம் நத்தக்காடு பகுதியைச் சேர்ந்தவர். 40 ஆண்டுகளாக திமுகவின் அடிப்படை உறுப்பினராக உள்ளார். கடந்த 1996- 2001, 2006- 2011 உள்ளாட்சித் தேர்தலில் திருமுறை பள்ளிபாளையம் ஒன்றியக் குழுத் தலைவராகப் பதவி வகித்தார். அப்போது கொக்கு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் இவரை கொக்கு பாலு என்று கட்சியினர் அழைக்கின்றனர்.

2001-2006, 2011-2016 ஆகிய தேர்தல்களில் பள்ளிபாளையம் ஒன்றியக் குழு உறுப்பினராகப் பதவி வகித்தார். நூற்பாலை தொழில் செய்து வரும் இவர், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் என்பதாலும், செல்வாக்குமிக்கவர் என்பதால், அதிமுகவின் தங்கமணிக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகால திமுக அரசில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், தற்போதைய திமுகவின் தேர்தல் அறிக்கை போன்றவை தனக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் பாலு, மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்துவேன் எனக் கூறுகிறார்.

குமாரபாளையம் தொகுதியை பொருத்தமட்டில், பள்ளிபாளையத்தில் சாயக் கழிவுநீர் பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும்; தொகுதி முழுவதும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற கூறி, பாலு வாக்கு சேகரித்து வருகிறார்.

சி.விஜயலட்சுமி (தவெக): தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலராகப் பதவி வகித்து வரும் சி. விஜயலட்சுமி, குமாரபாளையம் ஜேகேகே சுந்தரம் நகர் பகுதியில் வசிக்கிறார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை பூர்விகமாக கொண்ட இவர், ஓராண்டுக்கு முன்பு தவெகவில் இணைந்து துணைப் பொதுச் செயலர் பதவியை ஏற்றதுடன், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். மக்களிடையே போதிய அறிமுகம் இல்லாதது பின்னடைவாக இருந்தாலும், தவெக தலைவர் விஜய் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை தனக்கு ஆதரவாக இருக்கும் என்று நம்புகிறார்.

கே.யுவராணி (நாதக): சொந்த தொகுதியில் போட்டியிடுவது இவருக்கு பலமாக உள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்பதை தவிர பின்புலம் ஏதுமில்லை. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கொள்கைகள், திட்டங்களைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 21 பேர் களத்தில் உள்ளனர். இருப்பினும், அதிமுக- திமுக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.