குன்னம் தொகுதி ஊரறிந்த ரகசியம்!
அதிமுக கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி குன்னம் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதோடு, குன்னம் மற்றும் திருக்கோவிலூர் ஆகிய தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில், குன்னம் தொகுதியானது அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தையும் உள்ளடக்கியது. திமுக தலைமைக்கு நெருக்கமானவரும், மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சருமான சா.சி. சிவசங்கர் 3-ஆவது முறையாக போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளதால், எதிர்க்கட்சியினர் இத்தொகுதியில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்டு தனித் தொகுதியாக இருந்த வரகூர் தொகுதியில், அதிமுக 6 முறையும், திமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு இது குன்னம் பொது தொகுதியாக மாற்றப்பட்டு, தற்போது 4 ஆவது முறையாக இத் தொகுதி மக்கள் பேரவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, இத்தொகுதியில் மூன்று முறை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஒரு முறையும், திமுக சார்பில் போட்டியிட்டவரும். தற்போதைய அமைச்சருமான சா.சி. சிவசங்கர் இரண்டு முறையும் வெற்றிபெற்றுள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், இத் தொகுதியில் 3-ஆவது முறையாக அமைச்சர் சா சி. சிவசங்கர் போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ள நிலையில், அதற்கான பணிகளில் திமுகவினரும், அவரது ஆதரவாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட சுமார் 20-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி குன்னம் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதோடு, குன்னம் மற்றும் திருக்கோவிலூர் ஆகிய தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மேலும், குன்னம் தொகுதியில் போட்டியிட டி.ஆர். பாரிவேந்தர் மகன் ரவி பச்சமுத்து, வழக்குரைஞர் வெங்கடேசன், அக்கட்சியின் பொதுச் செயலர் சண்முகம், மணிமங்கை சத்தியநாராயணன் ஆகியோரில் ஒருவர் போட்டியிட உள்ளனர். திமுக சார்பில் போட்டியிடும் சா.சி. சிவசங்கருக்கு நிகராக தேர்தல் பணிகளில் ஈடுபடும் வகையிலும், இத் தொகுதியை கைப்பற்ற வேண்டும் எனும் நோக்கத்தில் அதிமுக தலைமை தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், ஐஜேகே சார்பில் டி.ஆர். பாரிவேந்தர் தலைமையில் ஏற்கெனவே நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, கட்சியினரிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. திமுகவுக்கு நிகராக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், இந்திய ஜனநாயக கட்சிக்கு குன்னம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ரவி பச்சமுத்து போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், தொகுதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஐஜேகே-வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..