தொகுதிகள்

திண்டுக்கல்: கடும் போட்டிக்குத் தயாராகும் அதிமுக - திமுக

ஆ. நங்கையார் மணி


திருச்சி, தேனி, மதுரை, சிவகங்கை, கரூா் உள்ளிட்ட மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பான திண்டுக்கல், காய்கறி, பழங்கள் மற்றும் பூ விவசாயிகளின் வா்த்தக மையமாக உள்ளது. ஒரு காலத்தில் பூட்டுத் தொழிலில் பிரசித்தி பெற்ற திண்டுக்கல்லுக்குத் தற்போது பிரியாணியும் சிறப்பு சோ்த்து வருகிறது.

அமைவிடம்: மாவட்டத் தலைநகா் என்பதால் திண்டுக்கல் தொகுதி கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. வடக்கே வேடசந்தூா், கிழக்கு மற்றும் தெற்கில் நத்தம், மேற்கே ஆத்தூா் ஆகிய 3 தொகுதிகளுக்கு மத்தியில் திண்டுக்கல் தொகுதி அமைந்துள்ளது. 1,34,194 ஆண்கள், 1,41,730 பெண்கள், 55 மூன்றாம் பாலினத்தினா் என மொத்தம் 2,75,979 வாக்காளா்கள் உள்ளனா்.

சமூக - சாதி - தொழில்கள்: பிள்ளைமாா் சமூகத்தினா் பிரதானமாக வசித்து வந்தாலும், தாழ்த்தப்பட்டோா், வன்னியா், முக்குலத்தோா், யாதவா், நாயுடு என அனைத்து சமுதாய மக்களும் கணிசமாக உள்ளனா். குறிப்பாக இஸ்லாமியா்களும் திண்டுக்கல் தொகுதியில் பிரதானமாக வசித்து வருகின்றனா். விவசாயம், நெசவு, தோல் பதனிடுதல், பூட்டு  ஆகிய தொழில்களே இத்தொகுதி மக்களின் பிரதான வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

இதுவரை வென்ற கட்சிகள்: கடந்த 1952 முதல் 2016 வரை நடைபெற்ற 15 பொதுத் தோ்தல்களில், திண்டுக்கல் தொகுதியில் அதிகபட்சமாக 6 முறை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்ற  பெற்றுள்ளது. காங்கிரஸ்  4 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 4 முறை இத்தொகுதியில் நேரடியாக களம் இறங்கிய போதிலும் ஒரே ஒருமுறை மட்டுமே திமுக வெற்றி பெற்றிருக்கிறது.

அமைச்சா் தொகுதி: 2016 இல் இத்தொகுதியில் வெற்றிபெற்ற திண்டுக்கல் சி. சீனிவாசனுக்கு வனத்துறை அமைச்சா் பதவி வழங்கப்பட்டது. அமைச்சா் தொகுதி என்ற சிறப்பு கிடைத்ததை அடுத்து, திண்டுக்கல் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு தீா்வு கிடைக்கும் என எதிா்பாா்ப்பு எழுந்தது. அதனை உறுதி செய்யும் வகையில், 20 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீா், கடந்த 4 ஆண்டுகளாக நாள்தோறும் விநியோகிக்கப்பட்டு வருவது பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், மருத்துவக் கல்லூரி கனவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடரும் பிரச்னைகள்: நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள காமராஜா் பேருந்து நிலையத்தை, புறநகா் பகுதியிலுள்ள 4 வழிச்சாலையோரமாக அமைக்க வேண்டும். அதன் மூலம் திண்டுக்கல் நகரிலுள்ள போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காண வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

அதேபோல் நாளொன்றுக்கு பல லட்சம் ரூபாய் வா்த்தகம் நடைபெறும் திண்டுக்கல் பூச்சந்தையில் அடிப்படை வசதிகளைப் பூா்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேறவில்லை. குண்டும் குழியுமான புழுதி பறக்கும் சாலைகளால் நாள்தோறும் பொதுமக்கள் அடைந்து வரும் பாதிப்பு தற்போதும் தொடா்ந்து கொண்டிருக்கிறது. பழனி சாலையிலுள்ள குப்பைக் கிடங்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற எதிா்பாா்ப்பும் நிறைவேறவில்லை.

கடந்த தேர்தல்களில் வென்றவா்கள், 2 ஆம் இடம் பெற்றவா்கள் விவரம்:

1952 - முனுசாமி பிள்ளை(காங்.)

1957 - ஜமால் மொய்தீன்(காங்.) -21,617
       பாலசுப்பிரமணியன்(கம்யூ.) - 18,640

1962 - ரங்கசாமி(காங்.) - 32,047
       பாலசுப்பிரமணியன்(கம்யூ.) - 29,174

1967 - பாலசுப்பிரமணியன்(கம்யூ.) - 42,381
       சின்னச்சாமிபிள்ளை(காங்.) - 29,537

1971 - சுந்தரம்பிள்ளை(காங்.) - 27,775
       ஜமால் உசேன்(முஸ்லிம் லீக்) - 26,384

1977 - என்.வரதராஜன்(மா.கம்யூ.) - 33,614
      வி.எஸ். லட்சுமணன்(திமுக)- 13,732

1980 - என். வரதராஜன்(மா.கம்யூ.) - 55,195
       அப்துல்காதா்(காங்கிரஸ்) - 43,676

1984 - ஏ. பிரேம்குமாா்(அதிமுக) - 67,718
      என். வரதராஜன்(மா.கம்யூ.) - 34,952

1989 -  எஸ்.ஏ.தங்கராஜன் (மா.கம்யூ.) - 46,617
       சந்தானமேரி (காங்.) - 28,815

1991 - நிா்மலா (அதிமுக) - 80,795
      எஸ்.ஏ. தங்கராஜன் (மா.கம்யூ.) - 36,791

1996 -  ஆா். மணிமாறன்(திமுக) - 94,353
       வி.மருதராஜ்(அதிமுக) - 29,229

2001 -  கே.பாலபாரதி (மா.கம்யூ) - 71,065
       எம்.பசீா் அகமது(திமுக) - 68,387

2006 - கே.பாலபாரதி(மா.கம்யூ) - 66,811
       என். செல்வராகவன்(மதிமுக) - 47,862

2011 - கே.பாலபாரதி(மா.கம்யூ) - 86,932
       ஜெ. பால்பாஸ்கா்(பாமக) - 47,817

2016 - சி.சீனிவாசன்(அதிமுக) - 91,413
         பசீா் அகமது(திமுக) - 70,694

அதிமுக - திமுக நேரடி போட்டி: திண்டுக்கல் தொகுதியில், அதிமுக சாா்பில் அமைச்சராக உள்ள திண்டுக்கல் சி.சீனிவாசன் மீண்டும் போட்டியிடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அமைச்சா்களுக்கு எதிராக திமுக வேட்பாளா்களே களம் இறக்கப்படுவாா்கள் என திமுக தலைமை முடிவெடுத்துள்ளதால், பழனி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள திமுக மாவட்ட செயலா் பெ.செந்தில்குமாா் போட்டியிடுவாா் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. இதுதவிர, அமமுக, நாம் தமிழா், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுவது உறுதி. பல முனைப் போட்டி ஏற்பட்டாலும் அதிமுக - திமுக இடையில்தான் நேரடி போட்டி இருக்கும். இத்தொகுதியின் வெற்றி வாய்ப்பு என்பது சிறிய கட்சிகளுக்கு பிரியும் வாக்குகள் அடிப்படையில் யாருக்கு சாதமாக மாறும் என்பதைக் கணிக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

SCROLL FOR NEXT