தமிழகத்தில் பாலாற்றின் தொடக்க இடமாகவும், தெற்கு ஆசியாவிலே மிகப்பெரிய தொலைநோக்கியுடன் கூடிய காவலூர் வைணுபாப்பு வாண்வெளி ஆராய்ச்சி மையம், ஆண்டியப்பனூர் அணை, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, அன்னிய செலவாணியை அதிகம் பெற்று தரும் தோல் தொழிற்சாலைகள் மற்றும் சுவையான பிரியாணிக்கும் வாணியம்பாடி தொகுதி பெயர் பெற்றுள்ளது.
தொகுதியில் இடம்பெற்றுள்ள பகுதிகள்
வாணியம்பாடி நகரம், ஆலங்காயம், உதயேந்திரம் பேரூராட்சிகள், ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகள் (17) - பீமகுளம், நாயக்கனூர், நரசிங்கபுரம், நிம்மியம்பட்டு, 102 ரெட்டியூர், வெள்ளக்குட்டை, கொத்தகோட்டை, பெரியகுரும்பதெரு, விஜிலாபுரம், பெத்தவேப்பம்பட்டு, வள்ளிப்பட்டு, கோவிந்தாபுரம், வளையாம்பட்டு, நெக்னாமலை, தேவஸ்தானம், பள்ளிப்பட்டு, ஜாப்ராபாத்,
திருப்பத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகள்(8) - பூங்குளம், பெருமாபட்டு, பல்லவள்ளி, குரிசிலாப்பட்டு, இருணாப்பட்டு, ஆண்டியப்பனூர், மிட்டூர், மரிமாணிக்குப்பம்,
நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகள் (12) - நாராயணபுரம், திம்மாம்பேட்டை, புல்லூர், ராமநாயக்கன்பேட்டை, ஆவராங்குப்பம், மல்லகுண்டா, தகரகுப்பம், சிக்கனாகுப்பம், அம்பலூர், கொடையாஞ்சி, வடக்குபட்டு, தெக்குபட்டு.
வாக்காளர் விவரம்
ஆண்கள் - 1,22,012, பெண்கள் - 1,25,845, மூன்றாம் பாலினத்தவர் - 37 பேர், மொத்தம் - 2,47,894.
தொகுதி சமூக நிலவரம்
வாணியம்பாடி தொகுதி மக்களின் பிரதான தொழிலாக தோல் பதனிடும், தோல் பொருள்கள் தயாரிப்பு, தென்னை, கரும்பு உள்ளிட்ட வேளாண்மை, கோரைப் பாய் தயாரிப்பு, பீடி சுற்றும் தொழில் உள்ளிட்டவை முக்கிய தொழிலாகும். வாணியம்பாடி தொகுதியில் 30 சதவீதத்திற்கும் மேலாக இஸ்லாமியர்கள் உள்ளனர். அடுத்தப்படியாக வன்னியர்களும், பட்டியல் இன மக்கள், இதர ஜாதியினரும் உள்ளனர்.
கடந்த தேர்தல்கள்
கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வரும் வாணியம்பாடி தொகுதியில் அதிகபட்சமாக அதிமுக, திமுக, காங்கிரஸ் தலா 4 முறையும், சுயேச்சை வேட்பாளர்கள் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் முக்கியத் தலைவராக இருந்த எம்.அப்துல்லத்தீப் 3 முறை சுயேச்சை வேட்பாளராகவும், திமுக சார்பில் 1 முறையும் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.
இதுவரை எம்எல்ஏக்கள்
1952 - ஏ.கே.ஹனுமந்தராயகவுண்டர் - சுயேச்சை
1957 - ஏ.ஏ. ரசீது - காங்கிரஸ்
1962 - எம்.பி.வடிவேல் - திமுக
1967 - ராஜமன்னார் - காங்கிரஸ்
1971 - எம்.அப்துல் லத்தீப் - சுயேச்சை
1977 - எம்.அப்துல் லத்தீப் - சுயேச்சை
1980 - என். குலசேகரபாண்டியன் - அதிமுக
1984 - எச்.அப்துல்மஜீது - காங்கிரஸ்
1989 - பி.அப்துல்சமது - திமுக
1991 - இ.சம்பத் - காங்கிரஸ்
1996 - எம்.அப்துல்லத்தீப் - திமுக
2001 - எம்.அப்துல்லத்தீப் - சுயேச்சை
2002(இடைதேர்தல்) - எம்.வடிவேல் - அதிமுக
2006 - எச்.அப்துல்பாசித் - திமுக
2011 - கோவி.சம்பத்குமார் - அதிமுக
2016 - நிலோபர் கபீல் - அதிமுக
2016 தேர்தல் நிலவரம்
நிலோபர் கபீல் (அதிமுக) - 69,588
சையத்பாருக் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) - 55,062
வாக்கு வித்தியாசம் - 14,526
தேர்தலில் வெற்றி பெற்ற நிலோபர் கபீல் அமைச்சரவையில் இடம் பெற்று தற்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள்
வாணியம்பாடி, ஆலங்காயம், உதயேந்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் காவேரி கூட்டு குடிநீர்த் திட்டம் வழங்கப்பட்டு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. வாணியம்பாடி நகரம் முழுவதும் தார், சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளது. வாணியம்பாடி - ஆலங்காயம் சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், குடிசை மாற்று வாரிய குடியிருப்புக் கட்டடம், மாவட்டத் தொழிலாளர் அலுவலகம், அரசு தோல் பயிற்சி நிலையம், வாணியம்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசுப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டங்கள் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டுள்ளன.
மக்களின் பிரச்னைகள்
வாணியம்பாடி நகரின் முக்கியப் பிரச்சனையான நியூ டவுன் சுரங்கப் பாதை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். பாலாற்றின் குறுக்கே சிறிய மற்றும் பெரிய தடுப்பணைகள் அமைத்து நிலத்தடி நீர் மேம்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்டவை நீண்ட காலமாக நிறைவேற்றப்படவில்லை.
வாணியம்பாடியில் தொகுதியில் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேளாண்மை கல்லூரிகள் வேண்டும், நிதிகள் ஒதுக்கப்பட்டும் வாணியம்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்றம், தொழிலாளர் நல மருத்துவமனை பணிகள் முடிக்கப்படவில்லை. வாணியம்பாடி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட வேண்டும். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளதால் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிறப்பு அறுவை சிகிச்சை மையம் உருவாக்கப்பட்ட வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா பகுதியில் தொழிற்பேட்டை(சிப்காட்) தொடங்கப்பட வேண்டும் உள்ளிட்டவை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
போட்டியிடவாய்ப்புகள் உள்ள கட்சிகள்
அதிமுகவைப் பொருத்தவரை அமைச்சரின் தொகுதி என்பதால் நிலோபர் கபீல் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த 2011ல் வெற்றிப பெற்ற முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாரும் வேட்பாளர் போட்டியில் உள்ளார். திமுகவைப் பொருத்தவரை கடந்த 1996 திமுக போட்டியிட்டது. அதனையடுத்து வந்த அனைத்துத் தேர்தலிலும் கூட்டணி கட்சிகளான முஸ்லீம் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு வந்தது. இதனால் இம்முறை திமுகவே போட்டியிட வேண்டும் என தொகுதியில் உள்ள திமுகவினர் உறுதியாக உள்ளனர். அவ்வாறு கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படாமல் திமுகவிற்கு சீட் ஒதுக்கப்பட்டால் மாவட்ட பொறுப்பாளர் க.தேவராஜி போட்டியிடுவார். நகர திமுக பொறுப்பாளர் சாரதிகுமாரும் சீட் கேட்டு வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.