கந்தர்வகோட்டை: அதிமுகவுக்கு மூன்றாவது வெற்றி சாத்தியமா?
கந்தர்வகோட்டை (தனி)தொகுதியில் மீண்டும் மூன்றாவது முறையாக அதிமுக வெற்றி பெற அதிமுகவினர் களப்பணியில் உற்சாகமாக உள்ளனர்.
தொகுதி அறிமுகம்: 1974 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் உதயமானது. மாவட்டதில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருந்தன. புதுக்கோட்டை தொகுதியில் கந்தர்வகோட்டை சேர்ந்திருந்தது. 2009 ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பில் கந்தர்வகோட்டை(தனி) தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.
கந்தர்வகோட்டை தொகுதியில் கறம்பக்குடி, கீரனூர் ஆகிய 2 பேரூராட்சிகளும், கந்தர்வகோட்டை ஒன்றியம் முழுவதும் கறம்பக்குடி, குன்றாண்டார் கோவில், அன்னவாசல் ஒன்றியங்களின் சில ஊராட்சிப் பகுதிகளும் இதில் அடங்கியுள்ளன. தொகுதியில் மொத்தம் 239 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
வானம் பார்த்த விவசாயப் பகுதியான கந்தர்வகோட்டையில் கிராமங்கள் அதிகமான தொகுதி. நெல், கடலை, சோளம், கரும்பு உள்ளிட்டவைகள் இருந்தாலும் இந்தப் பகுதிக்கு சிறப்பு முந்திரி காடுகள் மட்டுமே. இங்கு விளையும் முந்திரிக்கு தனி சுவை இருப்பதால் வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து இங்கு விளையும் முந்திரியை போட்டிபோட்டுக் கொண்டு வியாபாரிகள் வாங்கிச் செல்வர். முந்திரி ஏற்றுமதி செய்யப்படுவது தனிச்சிறப்பு.
தொகுதியின் எதிர்பார்ப்புகள்:
கந்தர்வகோட்டை தொகுதிக்கு மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையாக இருப்பது அரசு சார்பில் முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது மட்டுமே. இவைத்தவிர ஆர்டிஓ அலுவலகம், காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், மகளிர் காவல் நிலையம், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தில் கந்தர்வகோட்டைக்கு வாய்க்கால் அமைத்து காவிரி நீர் கொண்டுவருவது ஆகியவை பிற கோரிக்கைகள். கந்தர்வகோட்டை ஊராட்சியை பேரூராட்சியாக அறிவிக்கக் கோருவதும் நிலுவையில் உள்ளது.
கடந்த தேர்தல்கள்: கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட என். சுப்பிரமணியன் வெற்றிபெற்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தார். இரண்டாவது இடத்தை திமுகவைச் சேர்ந்த கவிதைப்பித்தன் பிடித்தார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் நார்த்தாமலை பா. ஆறுமுகம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திமுக சார்பில் மருத்துவர் அன்பரசன் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார்.
தொகுதிக்கு கிடைத்த திட்டங்கள்: கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கந்தர்வகோட்டை தொகுதியில் அரசு மகளிர் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், அரசு போக்குவரத்துப் பணிமனை, நீதிமன்றம், மேலும் அரசு அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டித் தரப்பட்டுள்ளன.
எனவே, கந்தர்வகோட்டை (தனி)தொகுதியில் மீண்டும் மூன்றாவது முறையாக அதிமுக வெற்றி பெற அதிமுகவினர் களப்பணியில் உற்சாகமாக உள்ளனர்.
போட்டியிட வாய்ப்பு: அதிமுகவில் வேட்பாளராக நார்த்தாமலை பா.ஆறுமுகமும், முன்னாள் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். சுப்பிரமணியன் இருவருமே சீட்டுக் கேட்டு மோதி வருகின்றனர். திமுகவில் கீரை. தமிழ்ராஜா, கவிதைப்பித்தன், கந்தர்வகோட்டையைச் சேர்ந்த திமுக மாவட்டக்குழு உறுப்பினர் நா.ஸ்டாலின் ஆகியோர் முனைப்புடன் உள்ளனர்.
தற்போதைய வாக்காளர்கள்: ஆண்- 1,00 810, பெண்- 1,00 241, மூன்றாம் பாலினம்- 20, மொத்தம்- 2,01,071.