விஜய் வெளியிட்ட அறிவிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன விஷயம்!
விஜய் தமது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும்
சேலம் : விஜய் தமது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற மகளிர் நாள் விழாவில் பங்கேற்று பேசிய விஜய், பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அவற்றில், மகளிருக்கு தனித் துறை, அண்ணன் சீர், தாய்மாமன் சீர் உள்ளிட்டவை அடங்கும்.
இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து சேலத்தில் தமது இல்லத்தில் அதிமுக பெண் நிர்வாகிகளுடன் சர்வதேச மகளிர் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களுடன் பேசியதாவது :
“மகளிருக்கு உதவித் தொகை ரூ. 1,000-த்திலிருந்து ரூ. 2,000-ஆக உயர்த்தப்படுமென நான் ஏற்கெனவே அறிவித்திருந்தேன். இந்நிலையில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினும் இப்போது அதேபோன்றதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் தேர்தல் காலத்தில் அவரவருக்கு என்னென்ன முன்னுரிமையாகப்படுகிறதோ அவற்றின் அடிப்படையில் தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கின்றனர். இந்நிலையில், விஜய் தமது கட்சியின் அறிவிப்புகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.
அஇஅதிமுக ஏற்கெனவே பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது. மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து, அதன் அடிப்படையில், நாங்கள் ஆட்சிக்கு வந்த பின், ஒவ்வொரு ரேசன் குடும்ப அட்டைதாரரின் வங்கிக் கணக்குகளுக்கும் நேரடியாக ரூ. 2,000 செலுத்தப்படும். அதேபோல, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அம்மா இருசக்கர வாகனத் திட்டமும் அஇஅதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் திரும்பவும் அமல்படுத்தப்படும். இத்திட்டத்தின்கீழ், 5 லட்சம் பயனாளிகளுக்கு இருசக்கர வகனங்கள் வாங்குவதற்காக ரூ. 25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்” என்றார்.