ஜோலார்பேட்டை: 3 ஆவது வெற்றியைப் பதிவு செய்வாரா கே.சி.வீரமணி?
ஜோலார்பேட்டை தொகுதியில் இதுவரை நடந்த இரு தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. இம்முறையும் அதிமுக சார்பில் அமைச்சர் கே.சி. வீரமணி போட்டியிடவே வாய்ப்புள்ளது.
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளும் திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளன.
இதில் ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி அமைச்சர் கே.சி.வீரமணி பெற்ற தொகுதியாகும்.
ஜோலார்பேட்டை தொகுதியின் முக்கிய தொழில் ஊதுபத்தி தொழிலாகவும், பீடி தொழில், விவசாயமும் அதிகளவில் நடைபெறுகின்றன.
மேலும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகளும், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சிகளும் உள்ளன.
இதில் நாட்றம்பள்ளி ஊராட்சியில் உள்ள 19 ஊராட்சிகள் வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் மீதமுள்ள 7 ஊராட்சிகள் ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தொகுதி சீரமைப்பின் போது மாற்றியமைக்கப்பட்டன.
ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் நாட்றம்பள்ளி பேரூராட்சி மற்றும் ஊராட்சி, ஜோலார்பேட்டை நகராட்சி, ஜோலார்பேட்டை ஊராட்சி ஆகிய தொகுதிகள் உள்ளன.
இந்த தொகுதியில் வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் 50 சதவீதமும், புத்த மதத்தினர் 20 சதவீதமும் அத்துடன் 10 சதவீதம் இதர பிரிவினரும் உள்ளனர்.
இதுவரை நடந்து முடிந்த தேர்தலில் ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கட்சி தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது.
இதில் அதிமுகவை சேர்ந்த கே.சி.வீரமணி தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு,2016-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
முதலில் சுகாதார துறை அமைச்சர், பின்னர் கல்வித் துறை அமைச்சர், அதையடுத்து வணிகவரி மற்றும் பத்திரபதிவு அமைச்சரானார்.
ஜோலார்பேட்டை தொகுதியில் கடந்த முறை 267 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தன. தற்போது 360 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அமைச்சரின் சாதனைகள்
புதுப்பேட்டை அக்ரஹாரம் பகுதியில் தொழில்நுட்பக் கல்லூரியும், நகராட்சிக்கான புதிய கட்டடமும் கட்டப்பட்டது.
பொதுமக்களின் வெகுநாள் கோரிக்கையான ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளன. அதேப்போல் மேம்பாலங்களும் கட்டப்பட்டுள்ளன.
சட்டப்பேரவைத் தொகுதியில் 25 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ஜோலார்பேட்டை மையமாகக் கொண்டு புதிய மின் பகிர்மான வட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கோடியூர் ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றப்பட்டது. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ கல்லூரி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தொகுதியில் உள்ள குறைகள்
ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் இதுவரை போதிய விளக்கு வசதி இல்லை. சுற்றுலாத் தலமான ஏலகிரியில் அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் உள்ளன.
ஏற்கனவே கடந்த 2018-ஆம் ஆண்டு கோடை விழாவில் ஏலகிரிக்கு செல்ல ஒரு பாதையும், கீழே இறங்குவதற்கு ஒரு பாதை வசதியும் செய்து தரப்படும் என வாக்களித்தது கிடப்பில் உள்ளது.
வாக்காளர் விவரம்
மொத்த வாக்காளர்கள்: 2,38,466
ஆண்கள்: 1,18,449
பெண்கள்: .1,20,010
மூன்றாம் பாலினம்: 7
முந்தைய தேர்தல் நிலவரம்:
2011 - கே.சி.வீரமணி(அதிமுக) - 86,723 வாக்குகள்
ஜி.பொன்னுசாமி(பாமக) - 63,337 வாக்குகள்
2016 - கே.சி.வீரமணி(அதிமுக) - 82,525 வாக்குகள்
கவிதா தண்டபாணி(திமுக) - 71534 வாக்குகள்
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-அதிமுக கட்சிகள் நேரடியாக களத்தில் இறங்குகின்றன.