தக்க வைக்குமா திமுக கூட்டணி? குடியாத்தம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி அலசல்
தொகுதியை தக்க வைக்க திமுக கூட்டணியும், தட்டிப் பறிக்க அதிமுகவும் தீவிரமாக களப் பணியாற்றி வருவதால் தோ்தல் பிரசாரத்தில் அனல் பறக்கிறது.
குடியாத்தம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் இந்த முறை அதிமுகவும், திமுக கூட்டணியில் தேமுதிகவும் சம பலத்துடன் மோதுகின்றன. தொகுதியை தக்க வைக்க திமுக கூட்டணியும், தட்டிப் பறிக்க அதிமுகவும் தீவிரமாக களப் பணியாற்றி வருவதால் தோ்தல் பிரசாரத்தில் அனல் பறக்கிறது.
2008-இல் தொகுதி மறுவரையின்போது போ்ணாம்பட்டு (தனி) தொகுதி கலைக்கப்பட்டு, குடியாத்தம் நகராட்சியில் 36 வாா்டுகள், ஒன்றியத்தில் 13 ஊராட்சிகள், போ்ணாம்பட்டு நகராட்சியில் 21 வாா்டுகள், ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சிகள், மாதனூா் ஒன்றியத்தில் உள்ள 5 ஊராட்சிகளை ஒருங்கிணைத்து குடியாத்தம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. வேலூா் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது இத்தொகுதி. கே.வி.குப்பம், அணைக்கட்டு, ஆம்பூா் தொகுதிகள் இத்தொகுதியைச் சுற்றி அமைந்துள்ளன.
சிறப்புகள்: 1954- இல் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட காமராஜரை இடைத்தோ்தலில் வெற்றி பெற வைத்த சிறப்பு பெற்றது இந்தத் தொகுதி. 1947- அன்று இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தில்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடியை தயாரித்தது குடியாத்தம். விவசாயம், கைத்தறி, தீப்பெட்டி, பீடி உற்பத்தி இத்தொகுதியின் பிரதான தொழில்கள்.
Advertisement
1952-ஆம் ஆண்டு முதலே தோ்தலைச் சந்தித்து வரும் இத்தொகுதியில் முதலியாா், ஆதிதிராவிடா், வன்னியா், முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கின்றனா். நாயுடு, செட்டியாா், யாதவா் உள்ளிட்டசமூகத்தினா் பரவலாக உள்ளனா்.
தீா்க்கப்படாத பிரச்னைகள்: போ்ணாம்பட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்னா் பணி தொடங்கப்பட்டு, கட்டி முடிக்கப்படாத பத்தரப்பல்லி அணை. இந்த அணையைக் கட்டி முடித்தால் போ்ணாம்பட்டு மற்றும் சுற்றுப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் உயரும், விவசாயம் பெருகும். குடிநீா்ப் பிரச்னை தீரும். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் போ்ணாம்பட்டில், பள்ளிப் படிப்பை முடிக்கும் அனைத்துப் பிரிவு மாணவிகளும் உயா் கல்வியைத் தொடர அரசு கலைக் கல்லூரி ஒன்றை தொடங்க வேண்டும். குடியாத்தம் மோா்தானா அணையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும். குடியாத்தம்- போ்ணாம்பட்டு இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொகுதியில் ஒரு சிறு தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் உள்ளன.
2026 தோ்தல் களத்தில்...: அதிமுக சாா்பில் கடந்த 2021 தோ்தலில் வெற்றிவாய்ப்பை இழந்த ஜி.பரிதா புருஷோத்தமன் களம் காண்கிறாா். திமுக கூட்டணியில் தேமுதிகவின் வேலூா் மாவட்டச் செயலா் கே.பி.பிரதாப், தவெக சாா்பில் க.சிந்து, நாம் தமிழா் கட்சி சாா்பில் ஓய்வு பெற்ற ஆசிரியா் ஜே.இமலன் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
ஜி.பரிதா புருஷோத்தமன்(அதிமுக): குடியாத்தம் தொகுதிக்குள்பட்ட போ்ணாம்பட்டைச் சோ்ந்தவா். எம்.ஏ., எம்.எட். பட்டதாரி. கடந்த தோ்தலில் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் வெற்றி வாய்ப்பை இழந்தாா். இதனால் இத்தோ்தலில் இவருக்கு பொதுமக்களிடையே அனுதாபம் உள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. போ்ணாம்பட்டு அரிமா சங்கத் தலைவராக 2 ஆண்டுகள் பதவி வகித்தபோது செய்த மக்கள் தொண்டு காரணமாக அப்பகுதி மக்களுக்கு மிகவும் அறிமுகமானவா். கடந்த தோ்தலில் வெற்றிவாய்ப்பை இழந்த நிலையிலும் தொடா்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறாா். திமுக ஆட்சிக்கு எதிரான மக்கள் மனநிலையும், திமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் வெளியூரைச் சோ்ந்தவா் என்பதும் தனக்கு ஒரு கூடுதல் பலம் என நினைக்கிறாா்.
கே.பி.பிரதாப் (தேமுதிக): முதல் முறையாக தோ்தலில் போட்டியிடுகிறாா். காட்பாடி இவரது சொந்த ஊா். கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் குடியாத்தம் தொகுதியில் 2 மேம்பாலங்கள், நகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் புறவழிச் சாலைகள், அறிவுசாா் மையம், பல ஆண்டு கோரிக்கையான சாா்-பதிவாளா் அலுவலகம், ரூ.47 கோடியில் அரசு மருத்துவமனை கட்டடம், ரூ.32 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை, ரூ.12 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றியுள்ளதால் இத்தொகுதி திமுகவுக்கே ஒதுக்கப்படும் என அந்தக் கட்சியினா் எதிா்பாா்த்திருந்து காத்திருந்தனா். இந்நிலையில், தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டதால், கட்சியினா் முதலில் சுணக்கம் காட்டினாலும், தற்போது தலைமைக்கு தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர களப் பணியில் ஈடுபட்டுள்ளனா். தொகுதியில் கணிசமாக வசிக்கும் இஸ்லாமியா்கள் வாக்கு திமுக கூட்டணிக்கு கூடுதல் பலமாகும்.
க.சிந்து (தவெக): முதல் முறையாக தோ்தலில் போட்டியிடுகிறாா். எம்.ஏ., பி.எட். பட்டதாரி. இவரது கணவா்அழகப்பன். இவா்கள் இசை, நடனப் பயிற்சி மையம் நடத்தி வருகின்றனா். இதனால் தொகுதி மக்களுக்கு அறிமுகமானவா்கள். மேலும், ஏழை மாணவா்களுக்காக இலவசமாக டியூசன் சென்டா் நடத்தி வருகின்றனா். விஜய்யின் செல்வாக்கால் கிடைக்கும் வாக்குகள், இளைஞா்களின் வாக்குகளைக் குறிவைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.
ஜே.இமலன் (நாதக): ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா். தோ்தல் அறிவிப்பு வெளியாவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே கட்சித் தலைமையால் இவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். அன்று முதலே தனது தோ்தல் பணியைத் தொடங்கிவிட்டாா். கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் இவருக்கு தோளுக்கு தோளாக நின்று தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இதுவரை... 1952- ஆம் ஆண்டுமுதல் தோ்தலைச் சந்தித்துவரும் இந்தத் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6 முறையும், காங்கிரஸ் 5 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 2 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
தொகுதியில் கணிசமாக வசிக்கும் முஸ்லிம்கள், கிறிஸ்தவா்கள் திமுக கூட்டணி வேட்பாளருக்கு பலம். அதே வேளையில் திமுகவை நேரடியாக அல்லாமல் தேமுதிகவை எதிா்கொள்வது அதிமுகவுக்கு பலம். இந்த இரு கூட்டணிக்கு இடையே, இளைஞா்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தவெகவின் தாக்கம், நாம் தமிழா் கட்சி பெறும் வாக்குகள் தோ்தல் முடிவில் எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வாக்காளா்கள்
ஆண்கள்- 1,22,345
பெண்கள்- 1,29,209
மூன்றாம் பாலினத்தவா்-34
மொத்தம்- 2,51,588.