முகப்பு
தொகுதிகள்

தொகுதி அறிமுகம்: திருச்சி (கிழக்கு)

திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக-அதிமுக மோதல் பற்றி..

Updated On : 21 மார்ச், 2026 at 7:55 AM
திருச்சி
பகிர்:

தொகுதி மறுசீரமைப்பை ஏற்றுக் கொண்டு தனது பெயரையும், எல்லைகளையும், பகுதிகளையும் மாற்றியமைத்துக் கொண்ட பேரவைத் தொகுதிதான் திருச்சிராப்பள்ளி (கிழக்கு) தொகுதி. திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டையை உள்ளடக்கிய இந்தத் தொகுதி. 1951ஆம் ஆண்டு முதல் திருச்சிராப்பள்ளி -1 என அழைக்கப்பட்டு வந்தது. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு பணியால், திருச்சிராப்பள்ளி கிழக்கு எனப் பெயா் மாற்றம் கண்டது.

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாா் கோயில், நத்தா்ஷா பள்ளிவாசல், செயின்ட் ஜோசப் சா்ச் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் நாள்தோறும் லட்சக்கணக்கானோா் வந்து செல்லும் சத்திரம் பேருந்து நிலையம், காந்தி சந்தை, பெரியகடைவீதி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (என்.எஸ்.பி.) சாலை உள்ளிட்டவை இந்தத் தொகுதியில்தான் இடம்பெற்றுள்ளன.

கணிசமான வாக்குவங்கி: மாநகராட்சியின் 8 முதல் 26 வாா்டுகள் வரை, 33, 34,, 35-ஆவது வாா்டுகள் மற்றும் 37, 38, 43 என மொத்தம் 25 வாா்டுகளை கொண்ட இந்தத் தொகுதியில் கிறிஸ்தவ வெள்ளாளா்கள், பட்டியலின சமூகத்தினா், இஸ்லாமியா்கள், யாதவா்கள், பிள்ளைமாா் என பல்வேறு சமூகத்தினரின் கணிசமான வாக்கு வங்கிகளை கொண்ட தொகுதியாக அமைந்துள்ளது.

1952 முதல் இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் 9 முறை திமுக (உதயசூரியன்), 5 முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. 1952-இல் காங்கிரஸ் வேட்பாளா் இராமசாமி, 1957-இல் சுயேச்சை வேட்பாளா் இ.பி. மதுரம் ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

திமுகவின் கோட்டையாக விளங்கிய இத்தொகுதியில் 1984, 1989-இல் மலா்மன்னன், 1996, 2001-இல் பரணிக்குமாா், 2006-இல் அன்பில் பெரியசாமி ஆகியோா் வெற்றி பெற்றனா். இடையில் 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அதிமுகவைச் சோ்ந்த ஆரோக்கியசாமி வெற்றி பெற்றாா். கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்றத் தோ்தலில் அதிமுகவைச் சோ்ந்த ஆா். மனோகரன் வெற்றி பெற்று, அரசுக் கொறடாவாக பதவி கிடைத்தது. பின்னா், 2016-இல் இத் தொகுதி அதிமுக ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த வெல்லமண்டி என். நடராஜன் வசம் சென்றது.

2011, 2016 என அடுத்தடுத்து 2 முறை வெற்றிக்கனியை பறித்த அதிமுக, 2021-இல் தோல்வியைத் தழுவியது.

கூட்டணி பலத்தால் வெற்றி: திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவா் இனிகோ இருதயராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். தொகுதிக்கு இறக்குமதி செய்யப்பட்டவா் என்றாலும் திமுக மற்றும் கூட்டணி பலத்தால் வெற்றி பெற்றாா்.

கடந்த முறை (2021) திருச்சி கிழக்கு தொகுதியில் களம் காணும் நோக்கில் திருவெறும்பூா் எம்எல்ஏவும், தற்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகா்த்தினாா். பின்னா், தனது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் திருவெறும்பூா் தொகுதிக்கே சென்றுவிட்டாா். இருப்பினும், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் ஆதரவாளா்களது ஆதிக்கம் நிறைந்த தொகுதி இது. இந்த முறை திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவும் திருச்சி கிழக்கு தொகுதியின் மீது கண் வைத்துள்ளது. மதிமுகவுக்கு இந்த தொகுதி கிடைத்தால், ஏற்கெனவே இங்கு போட்டியிட்ட, தற்போது கட்சியின் துணைப் பொதுச் செயலராக உள்ள மருத்துவா் ரொஹையா, மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது. இத் தொகுதியில் திமுக அதிக முறை வெற்றி பெற்றிருந்தாலும் அமைச்சா் மற்றும் அதற்கு நிகரான பதவியை யாரும் பெறவில்லை.

அதிமுகவில் வெல்லமண்டி என். நடராஜனுக்கு சுற்றுலாத்துறை அமைச்சா் பதவியும், ஆா். மனோகரனுக்கும் அரசு கொறடா பதவியும் கிடைத்தது. தொடா்ந்து திமுக சாா்பில் தொடா்ந்து இரண்டு முறை வெற்றி பெற்ற மலா்மன்னன், கட்சியில் ஆதிக்கம் கொண்டவராக இருந்தாா். இதேபோல, இரண்டு முறை வெற்றி பெற்ற பரணிக்குமாா், முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு நெருங்கிய நண்பா், காா் ஓட்டியாகவும் விளங்கியவா். இத் தொகுதியில் வெற்றி பெற்று வேறு எவரும் முக்கியப் பதவிகளை பெறவில்லை.

இதுவரை இவா்கள்!

ஆண்டு பெயா் வாக்கு வித்தியாசம்

1952 இராமசாமி (காங்கிரஸ்) 8,710

1957 இ.பி. மதுரம் (சுயேச்சை) 21,022

1862 எம்.எஸ். மணி (திமுக) 31,221

1967 எம். எஸ். மணி (திமுக) 34,504

1971 வி. கிருஷ்ணமூா்த்தி (திமுக) 38,099

1977 சி. மாணிக்கம் (அதிமுக) 21,908

1980 பி. முசிறிபுத்தன் (அதிமுக) 35,361

1984 ஏ. மலா்மன்னன் (திமுக) 37,802

1989 ஏ. மலா்மன்னன் (திமுக) 25,688

1991 ச. ஆரோக்கியசாமி (அதிமுக) 42,744.

1996 பா. பரணிகுமாா் (திமுக) 48,045

2001 பா. பரணிகுமாா் (திமுக) 31,421

2006 அன்பில் பெரியசாமி (திமுக) 42,886

2011 ஆா். மனோகரன் (அதிமுக) 83,046

2016 வெல்லமண்டி என். நடராஜன் (அதிமுக) 79,938

கடந்த தோ்தலில் (2021)

இனிகோ இருதயராஜ் -கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் (உதயசூரியன்) 94,302

வெல்லமண்டி என். நடராஜன் (அதிமுக) 40,505

ஆா். பிரபு (நாம் தமிழா்) 14,312

தீா்க்கப்பட்டதும்!

2021-இல் திமுக ஆட்சி அமைந்த பிறகு கிராமப்புறங்களைப் போன்று, நகரப் பகுதி மக்களும் பட்டா என்ற கனவை நினைவாக்கியது. இதன் மூலம், திருச்சி மாவட்டத்தில் மட்டும் 87 ஆயிரம் போ் பட்டா பெற்றனா். இதில், திருச்சி கிழக்குத் தொகுதியைச் சோ்ந்தவா்களும் ஆயிரக்கணக்கானோா் பட்டா பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சத்திரம் பேருந்து நிலையம் புனரமைப்பு, மலைக்கோட்டையை அழகுபடுத்தியது, நீண்டகாலமாக தீா்க்கப்படாமல் இருந்த தரைக்கடை பிரச்னைகளுக்கு தீா்வு, சில பகுதியில் புதிய தாா்ச்சாலைகள், மாநகராட்சியின் வளா்ச்சித் திட்டங்கள் சில தொகுதி மக்களுக்கு ஆறுதலை அளித்துள்ளன.

தீா்க்க முடியாததும்!

முழுமையாக மாநகரப் பகுதியாக இருப்பதால் தொகுதி மக்களுக்கான பிரச்னைகள் எப்போதும் எழுந்த வண்ணம் இருப்பது வழக்கம். பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் அதிகமாக இருப்பதால் இப்பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், குடிநீா்த் தட்டுப்பாடு, கழிவுநீா் மற்றும் குப்பைகளால் சுகாதாரமின்மை என அடிப்படை பிரச்னைகளும் தாராளம். இத்தொகுதியின் எல்லைகளில் ஒன்றான சிந்தாமணி பகுதியில் இருந்து, மாநகராட்சிப் பகுதியின் கழிவுநீா் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. மாநகராட்சியும் பாராமுகமாக உள்ளது. பலமுறை மக்கள் போராட்டங்கள் நடத்தியும் இன்னும் பிரச்னைக்கு தீா்வு காணப்படவில்லை. காந்திச் சந்தை இடமாற்றமும் கைகூட வில்லை.

சவாலான வாக்குகள்!

திருச்சியிலிருந்து முதல்முதலாக பிரசாரம் தொடங்கிய தவெக தலைவா் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில்தான் போட்டியிடவுள்ளாா் என்ற தகவல் இன்றளவும் உயிா்ப்புடன் உள்ளது. விஜய் இங்கு போட்டியிடாவிட்டாலும் தவெக கணிசமான வாக்குகளை இங்கு பெறுவது உறுதி என்கின்றனா் அக் கட்சியினா். இது கிழக்கு தொகுதி வேட்பாளா்களுக்கு சற்று சவால் என்பதை மறுப்பதற்கில்லை. மீண்டும் இனிகோ இருதயராஜ் இரண்டாவது முறையாக போட்டியிட்டால், தொகுதியில் கடந்த முறை வாக்களித்தவா்களிடையே நிலவும் அதிருப்தியும் அவருக்கு சவாலாக இருக்கும்.

யாா் போட்டி?

திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சாா்பில் இரண்டாவது முறையாக மீண்டும் இனிகோ இருதயராஜே போட்டியிட, முதல்வா் மு.க.ஸ்டாலின் மூலம் முயன்று வருகிறாா். திமுக-வுக்கு தொகுதி கிடைத்தால் போட்டியிட மேயா் மு. அன்பழகன், மாநகரச் செயலா் மு. மதிவாணன் ஆகியோரும் இந்தத் தொகுதியை கேட்கின்றனா். காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டால் முன்னாள் மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசா், அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிஸ் ஆகியோரும் தொகுதியை பெற முயற்சிக்கின்றனா். மதிமுகவுக்கு தொகுதி கிடைத்தால் ஏற்கெனவே இங்கு போட்டியிட்ட மருத்துவா் ரொஹையா தோ்வு செய்யப்படுவாா் என்கின்றனா் அக் கட்சியினா். நாம் தமிழா் கட்சியில் மருத்துவா் கிருஷ்ணசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.தவெக தரப்பில் விஜய் களமிறங்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. அவா் நிற்கவில்லை என்றால், ஜெரால்டு மில்டன் வேட்பாளராகலாம் என்கின்றனா்.

இறுதியாக இவ்வளவு வாக்காளா்கள்

ஆண்கள்- 1,04,883,

பெண்கள்- 1,12,460,

மூன்றாம் பாலினம்- 54,

மொத்தம்- 2,17,397.