முகப்பு
நேர்காணல்கள்

எங்களது வாக்குறுதிகள் நம்பகத்தன்மையுடையவை! ஆர்.பி. உதயகுமார் சிறப்பு நேர்காணல்

Updated On : 2 ஏப்ரல், 2026 at 12:12 AM
பகிர்:

தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அதிமுகவின் மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தினமணிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்:

 அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் விஜய்யின் தவெக பக்கம் திரும்புவதாகக் கூறப்படுவது குறித்து?

புதிதாக ஒருவர் அரசியலுக்கு வரும்போது இதுபோன்ற கருத்துகள் வெளியாவது வழக்கம்தான். கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசின் தவறுகளை சட்டப்பேரவை, நாடாளுமன்றம் மட்டுமல்லாமல் மக்கள் மன்றத்திலும் சுட்டிக்காட்டியது அதிமுகதான். அந்த வகையில், அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்குதான் 100 சதவீதம் கிடைக்கும்.

 அதிருப்தி வாக்குகள் தவெகவுக்குச் செல்லாது என்று உறுதியாக நினைக்கிறீர்களா?

ஆளும்கட்சிக்கு எதிரான வாக்குகளை அறுவடை செய்ய வேண்டும் என விஜய் கருதியிருந்தால், தவெக தொடங்கப்பட்ட பிறகு நடைபெற்ற தேர்தல்களில் பங்கேற்று, தனது செல்வாக்கை நிரூபித்திருக்க வேண்டும். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. காரணம், தனக்கு இல்லாத செல்வாக்கை இருப்பதாகக் காட்டி கொண்டே அரசியல் செய்யலாம் என்பதுதான் அவரது நோக்கமாக உள்ளது.

 தவெகவின் தாக்கம் இந்தத் தேர்தலில் எப்படி இருக்கும்?

குறிப்பிடத்தக்க அளவில் இருக்க வாய்ப்பில்லை. ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு தருவதாக பொதுமேடைகளில் விஜய் பலமுறை அறிவித்தும், பெயரளவுக்குச் செயல்படும் கட்சிகள்கூட அவருடன் இதுவரை கூட்டணி அமைக்கவில்லை. இது, அவரை நம்பி கூட்டணி அமைக்க யாரும் தயாராக இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. தவெக தற்போது அரசியல் களத்தில் பாலபாடம் படிக்கிறது. மழலையர் பள்ளியில் பயிலும் குழந்தை முனைவர் பட்டம் பெற முயற்சிப்பதைப் போன்றுதான் உள்ளன தவெகவின் தேர்தல் செயல்பாடுகள்.

 அதிமுகவின் தேர்தல் அறிக்கை தாக்கத்தை ஏற்படுத்துமா?

கடந்த 54 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றிய அரசியல் கட்சி என்ற நற்பெயர் அதிமுகவுக்கு மட்டுமே உண்டு. இதன் காரணமாக, அதிமுகவின் வாக்குறுதிகள் மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளனர். அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வெற்றிக்கு மிகப் பெரிய வியூகம்.

 திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிப்பதும், ஆட்சி அமைந்தால் அதுகுறித்து கவனம் செலுத்தாமலிருப்பதும் திமுகவுக்கு வழக்கமான ஒன்று என்பதை மக்கள் அறிந்துள்ளனர். நிலமற்ற பெண்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்பது உள்பட பல வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் 10 சதவீதத்தைக்கூட முழுமையாக திமுக அரசு நிறைவேற்றவில்லை. அந்த வகையில், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நம்ப மக்கள் தயாராக இல்லை.

 அமமுகவின் வருகை பலமா?, பாரமா?

தேசிய ஜனநாயகக் கூட்டணி முழுமையாக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அமமுகவின் தொண்டர்களை தீவிர களப் பணிக்கு முடுக்கிவிட்டுள்ளார் அந்தக் கட்சியின் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன். அமமுகவின் வருகை, செயல்பாடுகள் மிகப் பெரிய நம்பிக்கையை அளிக்கின்றன. இது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப் பெரிய பலம்.

 அதிமுக அமைச்சரவையில் சிறுபான்மையினருக்குப் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்று கூறப்படுகிறதே?

நிலோபர் கபில், பெஞ்சமின், ரஹீம், அன்வர் ராஜா எனப் பலரும் அதிமுக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர். அதிமுக அமைச்சரவையில் அனைவரின் பிரதிநிதித்துவமும் எப்போதும் இருக்கும். சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையவுள்ள அதிமுக அரசின் அமைச்சரவை, ஜாதி-மத-இன வேறுபாடுகளைக் கடந்து ஜனநாயக அடிப்படையில் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் அமைச்சரவையாக இருக்கும்.

 திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை அரசு கையாண்ட விதம் குறித்து?

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு திமுக அரசு மதிப்பளிக்கவில்லை. வாக்கு வங்கி அரசியலுக்காக நீதிமன்ற உத்தரவைக்கூட ஏற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை திமுக அரசு மேற்கொண்டது என்பது மக்களின் குற்றச்சாட்டு. இந்த விவகாரத்தை திமுக அரசு கையாண்ட விதம் சர்வாதிகாரம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியது.

 திமுகவின் ஐந்தாண்டு ஆட்சியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, பாலியல் வன்கொடுமைகள், வாக்குறுதியை நிறைவேற்றாமை, வளர்ச்சியின்மை, கடன் சுமை உயர்வு எனப் பல்வேறு காரணங்களால் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற கோபம் மக்களிடம் தீவிரமாக உள்ளது.

 மகளிருக்கான மாத உதவித் தொகை வாக்குறுதி குறித்து?

முந்தைய தேர்தலின்போது மகளிருக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் என்றுதான் திமுக அறிவித்தது. ஆனால், மாதம் ரூ. 1,500 வழங்கப்படும் என அதிமுக அறிவித்தது. மகளிர் உதவித் தொகை வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றாமல் இருந்ததைக் கண்டித்து, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 9 முறையும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற முறையில் நான் 3 முறையும் பேரவையில் பேசினோம். பின்னர்தான் மகளிர் உரிமைத் தொகை வழங்க திமுக அரசு முன்வந்தது. அதிமுக தொடர்ந்து வற்புறுத்தியிருக்காவிட்டால், மகளிர் உரிமைத் தொகை வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றியிருக்காது. தற்போது, விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டதால் அதிமுக ஆட்சி அமைந்ததும் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 2,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த வாக்குறுதியை அதிமுக அரசு நிறைவேற்றும்.

 தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பாஜகதான் தலைமை வகிக்கிறது என்ற குற்றச்சாட்டு குறித்து?

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே உள்ள முழுமையான புரிதல், திமுக கூட்டணிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகப் பெரிய தேசியக் கட்சியாகவும், 19 மாநிலங்களில் ஆளும் கட்சியாகவும் உள்ளது பாஜக. இந்த நிலையில், அந்தக் கட்சியின் தலைவர்கள் அதிமுக அலுவலகத்துக்கு வந்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசித்து கூட்டணி ஒப்பந்தத்தில் கையொப்பமிடுகின்றனர். இது தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே நிலவும் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.

 இலவச அறிவிப்புகள் விமர்சனத்துக்குள்ளாகி வரும் நிலையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் பல இலவச அறிவிப்புகள் உள்ளனவே?

மக்களுக்குத் தேவையானது எது கிடைக்கவில்லையோ, அதை கிடைக்கச் செய்வதே அரசு. அந்த வகையில், கல்வி, மருத்துவம், சுகாதாரம், உணவு, உடை என அனைத்தையும் அரசு வழங்குகிறது. இது எதையும் இலவசம் எனக் கருதக் கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்குத் தேவையானதை அளிக்க வேண்டியது கடமை. அதை கேட்டுப் பெற வேண்டியது மக்களின் உரிமை. மக்களின் வரிப் பணத்தை எந்த வடிவத்தில் மக்களுக்குத் திரும்ப வழங்குவது என்பதை வகுத்துச் செயல்படுத்துவதுதான் அரசு. எனவே, விலையில்லாத் திட்டங்களை கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல.

நேர்காணல்: எம்.சங்கர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.