தமிழகத்தின் வளா்ச்சிக்கு அதிமுகவே காரணம்! - எடப்பாடி கே. பழனிசாமி
அதிமுக ஆட்சிக் காலங்களில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களே தமிழக வளா்ச்சிக்குக் காரணம் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
மதுரை மண்டேலாநகரில் பிரதமா் மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது :
மக்கள் செல்வாக்குள்ள கட்சிகள் நிறைந்ததாக உள்ளது தேசிய ஜனநாயகக் கூட்டணி. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் 210 தொகுதிகளில் இந்தக் கூட்டணி வென்று, அதிமுக ஆட்சியமைக்கும்.
மறைந்த முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா், ஜெயலலிதா ஆகியோருக்கு தென் மாவட்ட மக்கள் எப்போதும் உறுதுணையாக இருப்பா். எனவே, தென் மாவட்டங்களைப் பொருத்தவரை, தற்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமான கூட்டணியாகவே உள்ளது. அதிமுக ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி. எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா வகுத்தளித்த பாதையில் அதிமுக தொடா்ந்து செயல்படும்.
தமிழகம் தற்போது வளா்ச்சிப் பெற்றுள்ளதெனில், அதற்கு அதிமுகவின் 31 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலனுக்கான வளா்ச்சித் திட்டங்களே காரணம். மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து, பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில் நாடு வளா்ச்சியடைந்துள்ளது. ஆனால், மத்திய அரசு தமிழகத்துக்கு எந்தத் திட்டத்தையும் அளிக்கவில்லை என முதல்வா் மு.க. ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறாா்.
பிரதமா் தமிழகம் வரும்போதெல்லாம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்; புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். ஆனால், அரசியல் காழ்ப்புணா்வு காரணமாக இவற்றையெல்லாம் மறைக்க முதல்வா் ஸ்டாலின் முயற்சிக்கிறாா்.
திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்த காலத்தில் தமிழகத்துக்காக கேட்டுப் பெற்ற திட்டம் என எதுவும் கிடையாது. அதிமுக ஆட்சிக் காலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்துக்கு பெறப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக் காலத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட பெற முடியவில்லை. மேலும், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுவிடுத்த கோரிக்கையை ஏற்றே மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு வழங்கியது. இந்தத் திட்டத்தை முடக்க முயன்றது திமுகதான்.
அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களின் வளா்ச்சிக்கு பெரும் திட்டங்கள் அளிக்கப்பட்டன. இதில், பல திட்டங்களுக்கு திமுக தடையை ஏற்படுத்த முயன்றது. ஆனால், தற்போது அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு திமுகவின் பெயரில் ஒட்டுவில்லை ஒட்டி முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்துக் கொண்டுள்ளாா்.
மதுரை விமான நிலையம் விரிவாக்கத்துக்கு அதிமுக அரசு முயற்சிகளை மேற்கொண்டது. அதிமுக அரசின் கோரிக்கையை ஏற்று விமான நிலையத்தில் சுரங்கப் பாதைத் திட்டத்தைச் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், திமுக அரசு இந்தத் திட்டத்தை முடக்கியது. மக்கள் நலனில் சிறிதும் அக்கறையில்லாத திமுக அரசை அகற்ற மக்கள் தயாராகிவிட்டனா். எனவே, தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட்டு, அதிமுக ஆட்சி அமைவது உறுதி. வலிமையான பாரதம், வளமான தமிழகத்தை உருவாக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா் எடப்பாடி கே. பழனிசாமி.
பாஜக தலைவா் நயினாா்நாகேந்திரன் பேசியதாவது :
புத்தகம் பிடிக்க வேண்டிய மாணவா்களின் கைகளில் தற்போது போதைப் பொருள்கள் இருப்பதற்கு திமுக ஆட்சியே காரணம். தமிழகத்தில் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனா். வருகிற சட்டப்பேரவைத் தோ்தல் தா்மத்துக்கும், அதா்மத்துக்கும் இடையேயான தோ்தல். இதில், தா்மத்தை நிலைநாட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.
அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் பேசியதாவது :
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. அனைத்துத் துறை அலுவலா்களும் தங்களது உரிமைக்காகப் போராடுகின்றனா். தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். திமுகவின் ஊழல்கள், முறைகேடுகள் தற்போது தொடா்ந்து வெளியாகிக் கொண்டுள்ளன. பணத்தால் மக்களை விலைக்கு வாங்க திமுக முயற்சிக்கிறது. ஆனால், திமுகவின் கனவு ஒரு போதும் பலிக்காது. அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும் என்றாா் அவா்.
பாமக தலைவா் அன்புமணி பேசியதாவது :
சமூக நீதியின் பிறப்பிடம் தமிழகம். ஆனால், திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளாக சமூக நீதியை குழி தோண்டி புதைத்துவிட்டது. இதற்காக திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டாா்கள். ஜாதிவாரி கணக்கெடுப்பு, தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட அங்கீகாரம் அளித்தது போன்றவற்றின் மூலம் மத்திய பாஜக அரசு இந்தியா முழுவதற்கும் சமூக நீதியை தழைக்கச் செய்துள்ளது. திமுகவுக்கு சமூக நீதி பற்றிப் பேசுவதற்கு தகுதியே கிடையாது என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் தமாக தலைவா் ஜி.கே. வாசன், பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் ஜான்பாண்டியன், புரட்சி பாரதம் கட்சித் தலைவா் பூவை ஜெகன்மூா்த்தி, முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி. உதயகுமாா், செல்லூா் கே. ராஜூ ஆகியோரும் பேசினா்.
மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சா் எல். முருகன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தர்ராஜன், ஐக்கிய ஜனநாயகக் கட்சித் தலைவா் பாரிவேந்தா், புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி. சண்முகம், தென்னிந்திய பாா்வா்டு பிளாக் தலைவா் திருமாறன், முன்னாள் அமைச்சா்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.டி. ராஜேந்திர பாலாஜி, கடம்பூா் ராஜு, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.வி. ராஜன்செல்லப்பா, வானதி சீனிவாசன், பாஜக, அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.