பன்னீர்செல்வம், ராமதாஸ், பிரேமலதா, விஜய்! DNS
சிறப்புக் கட்டுரைகள்

சொல்லப் போனால்... எங்கே செல்லும் இந்தப் பாதை?

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் போதிலும் இன்னமும் கூட்டணி அமையாத கட்சிகளைப் பற்றி...

எம். பாண்டியராஜன்

திமுக கூட்டணியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ஸாரி, அதிமுக கூட்டணியும் தேர்தலுக்குத் தயாராகிவிட்டன. ஆனால், இன்னமும் சில கட்சிகள் என்னதான் முடிவு எனத் தெரியாமல் காத்திருக்கின்றன – தனித்து என்றாலும் தயார் என்கிற தவெக உள்பட.

முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பதிலாக இருந்தபோதும் இறந்தபோதும் என மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றுப் பதவி வகித்தவர் ஓ. பன்னீர்செல்வம். ஆனால், இப்போது  வெறுமனே அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்.

பாரதிய ஜனதா கட்சிதான் இவரை இயக்குகிறது என்று கூறப்பட்டு வந்தாலும், அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட இவரைப் பற்றி, இப்போது அந்தக் கட்சியே கொஞ்சமும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஆனால், அதிமுகவிலிருந்து பிரிந்து புதுக் கட்சி தொடக்கிய  டிடிவி தினகரனைப் பேசி முடித்துக் கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட்டனர். இத்தனைக்கும் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்பதை ஒருக்காலும் ஒப்ப மாட்டேன் என்று கடைசி வரையிலும் கூறிக்கொண்டிருந்தவர் டிடிவி.

உடனிருந்த சில முக்கிய தலைவர்களும் திமுகவில் இணைந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை பற்றித் திட்டமிட, அண்மையில், பெரியகுளம் அருகே தன்னுடைய பண்ணை வீட்டில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம் கொஞ்சம், அல்ல, நிறையவே இறங்கி வந்துவிட்டார்.

“எதிரும் புதிருமாக இருந்த டிடிவி தினகரனும் எடப்பாடி பழனிசாமியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருக்கிறார்கள். இணைய வேண்டும் என்றுதான் நானும் சொல்கிறேன். நாங்கள் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்கிறோம். இந்தக் கோரிக்கையில் தினகரனும் மாறுபட மாட்டார். எனவே, இணைய வேண்டும் என்ற கருத்தைத் தினகரன் அங்கே வலியுறுத்த வேண்டும். நானும் இணைய வேண்டும் என்றுதானே சொல்கிறேன். அந்த வேலையைச் செய்தால் அதிமுக தானாக மாபெரும் வெற்றி பெறும். ஒன்றிணைய நான் தயார், டிடிவி தினகரனும் எடப்பாடி பழனிசாமியும் தயாரா? “ - இதைவிட வெளிப்படையாக இனிமேல் ஓ. பன்னீர்செல்வம் என்ன சொல்லிவிடப் போகிறார்?

ஆனால், என்ன அதிர்ச்சி என்றால், அதிமுக தலைவர்களுக்கு மட்டுமல்ல, பாரதிய ஜனதாவுக்கோ, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலுள்ள பிற கட்சிகளுக்கோகூட யோசிக்கவோ, அழைப்பு விடுக்கவோ சற்றும் நேரம் தராமல் – இடமும் கொடாமல் - அதிரடியாக சில மணி நேரங்களிலேயே சேலம் மாவட்டம் ஓமலூரிலிருந்தவாறு நிர்தாட்சண்யமாக நிராகரித்துவிட்டார் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி!

“கட்சிக்குத் துரோகமிழைத்ததால் அதிமுக பொதுக்குழுவில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர் அவர். கட்சியில் மீண்டும் அவரைச் சேர்க்க எந்த வாய்ப்பும் இல்லை” - ஸ்ட்ரெய்ட் பால்!

ஓ. பன்னீர்செல்வம் விஷயத்தில்தான் இப்படி. ஆனால், அதேவேளையில் கூட்டணியில் மேலும் கட்சிகளைச் சேர்த்துக் கொள்ளும் விஷயத்தில் நெகிழ்வாகத்தான் இருக்கிறார் பழனிசாமி - “சில கட்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைவார்கள்” என்றிருக்கிறார்.

ஆக, ஓபிஎஸ்ஸுக்கு அதிமுக / தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கதவு மூடப்பட்டு விட்டதைப் போலத்தான். இவ்வளவுக்குப் பிறகு கதவைத் திறந்துவிட பா.ஜ.க. முயலுமா என்பது சந்தேகமே  (அல்லாமல், நல்லவர்கள் அனைவரும் எங்களுடன் இருக்கிறார்கள்; ஓ. பன்னீர்செல்வமும் நல்லவர்தான் என்று சின்னதாக ஒரு சங்கதியைப் போட்டு வைத்திருக்கிறார் நயினார் நாகேந்திரன்).

ஏற்கெனவே, உடனிருந்த தலைவர்கள் சிலர் தங்கள் ஆதரவாளர்களுடன்  திமுகவுக்குப் போய்விட்டனர். தவிர, மொத்தமாகச் சென்று திமுகவில் இணைவது  ஓ.பி.எஸ்.ஸுக்கே உடன்பாடாக இருக்குமா எனத் தெரியவில்லை. மிச்சம் இருப்பவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? ஓபிஎஸ்தான் என்ன செய்வார்?

கிட்டத்தட்ட இதே நிலை, ஆனால், அமைப்புரீதியாக ஓரளவு செல்வாக்குடன் இருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

ஒருகாலத்தில் மிக வலுவான கட்சியாகப் பார்க்கப்பட்ட பா.ம.க., தந்தைக்கும் மகனுக்கும் இடையே லேசாக உரசி உரசி விரிசலாகித் தற்போது இரண்டாக உடைந்தேவிட்டது. தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இருவரில் யார் வலுவாக இருக்கிறார்கள் என்பதைக் காலமும் வரும் தேர்தலும்தான் முடிவு செய்யும்.

பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்ச்சியாகக் கொண்டிருக்கும் நெருக்கமும் காரணமாக இருக்கலாம், கிட்டத்தட்ட கட்சியின் கட்டமைப்பைத் தன் பிடியில் வைத்திருக்கும் அன்புமணி, எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் இடம் பெற்றுவிட்டார். சின்னம் பிரச்சினை என்றாலும்கூட, கோடிட்டுக் காட்டும்படியாக, மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய தேசிய ஜனநாயகக் கூட்டணிப் பிரசார மேடையின் பின்னணியில் இடம் பெற்றது மாம்பழம். ராமதாஸால் கண்டனம் மட்டுமே தெரிவிக்க முடிந்தது.

ஆக, டாக்டர் ராமதாஸுக்கு மிச்சமிருப்பது திமுக அணி, த.வெ.க. கூட்டணி அல்லது தனித்து! தனித்துப் போட்டியிட முடிவெடுக்கும் வாய்ப்பு அரிதிலும் அரிது;  அதுவும் கட்சியே இரண்டாகப் பிளவுற்றிருக்கும் தற்போதைய நிலையில்.

திமுக அணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருக்கிறார்கள். இவ்வளவு காலம் உடனிருக்கும் திருமாவளவனா, இனி வரப் போகும் ராமதாஸா என்றால் நிச்சயம் திமுகவின் தேர்வு திருமாவாகத்தான் இருக்கும். அப்படியே இருதரப்பிலும் இணக்கமாகி ஒப்புக்கொள்வதாக இருந்தாலும் கூட்டணிக் கட்சிகளின் நெரிசலுக்கு இடையே எத்தனை தொகுதிகளைத் திமுகவால் ராமதாஸ் பா.ம.க.வுக்குத் தர முடியும்? நோ சான்ஸ் (ஆனாலும், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடன் நேர்காணலைத் தொடங்கிவிட்டது ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி).  

ஒரு காலத்தில் நாளைய முதல்வர் என்று நம்பப்பட்டவர், நடிகராக இருந்து அரசியல் கட்சியைத் தொடங்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்த். நோய்வாய்ப்பட்டுத் தீவிர அரசியலிலிருந்து அவர் ஒதுங்கியிருந்த போதிலும்  அரசியலைத் தாண்டி அவருக்கும் மக்களுக்குமான நெருக்கமும் பிணைப்பும் செல்வாக்கும் கொஞ்சமும் குறையாமல் அவருடைய மறைவின்போது வெளிப்பட்டது. சாதாரண மக்களிடையேதான் என்னவொரு கரிசனம், இரக்கம், எவ்வளவு துயரம்?

ஆனால், விஜயகாந்த் காலத்துத் தேமுதிக அல்ல, இப்போது இருக்கிற தேமுதிக என்ற உண்மையை விளங்கிக் கொள்வது இப்போதைய முக்கியமான தேவையே. கூட்டணிக்காக யாருடனும் தேமுதிக பேரம் பேசவில்லை என்று விஜயகாந்த் மனைவியும் கட்சிப் பொதுச்செயலருமான பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் பேசுகிறார்கள், திமுக கூட்டணியுடன் பேசுகிறார்கள், இவர்கள் கேட்பதைத் தர யாரும் தயாராக இல்லை என்றெல்லாம் அரசியல் வட்டாரங்களில் தொடர்ச்சியான பேச்சுகள்.

தென் மாவட்டங்களுக்குச் சென்றுள்ள அவர், நானும் (தேர்தல்) களத்தில் இறங்கி விளையாடுவேன். எங்களுக்கு உரிய அங்கீகாரம், மரியாதை அளிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம் என்றெல்லாம் கூறியதுடன், தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன்தான் கூட்டணி என்றும் பிப். 3 ஆம் தேதி சென்னை திரும்பிய பிறகு கூட்டணி பற்றி ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார் (கூட்டணியை அறிவிப்பதற்காக என்று கூட்டிய கடலூர் மாநாட்டில், நாங்கள் மட்டும் இப்போதே ஏன் சொல்ல வேண்டும் என்று ஒத்திவைக்கத் தொடங்கியவர் பிரேமலதா; இன்னமும் ஒத்திவைப்புகள் தொடருகின்றன).

நிதி கேட்பதால் கூட்டணி முடிவு பெறவில்லையா? என்றொரு கேள்விக்குச் சொந்த பணத்தில் கட்சி நடத்தி வருகிறோம் என்று ஷார்ப்பாக எதிர்வினையாற்றியிருக்கிறார் பிரேமலதா.

இன்றைய நிலவரப்படி, வந்தால் வரட்டும், நடக்கிறபடி நடக்கட்டும் என்கிற ரீதியில், தேமுதிக பற்றி இரு பெரும் அணிகளும் அலட்டிக் கொள்வதாகத் தோன்றவில்லை. விட்டுப் பிடிக்கலாம் என நினைக்கிறார்கள்போல.

என்றால் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் சரி, ராமதாஸுக்கும் சரி. பிரேமலதாவுக்கும் சரி, மூவருக்குமே மீதியுள்ள ஒரே தேர்வு, நடிகர் விஜய்யின் த.வெ.க. மட்டுமே. த.வெ.க.வும் விஜய்யும் இவர்கள் கூட்டணி பற்றி என்ன நினைக்கிறார்களோ. ஓபிஎஸ்ஸுக்கு முன்னால் தவெகவுக்கே சென்று சேர்ந்துவிட்டார் செங்கோட்டையன். விஜயகாந்த் குடும்பத்திடம் விஜய்க்கு சின்னதாக ஒரு நன்றியுணர்வு இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தொடர்ச்சியாக நடிகர்களைக் கடுமையாக விமர்சித்துவந்தவர் டாக்டர் ராமதாஸ். ம். காலம் என்ன வேண்டுமானாலும் செய்யும்.

“நாட்டின் விடுதலைக்காகப் போராடிய காங்கிரஸ் கட்சி, ஏதோவொரு கட்சிக்கு ஆதரவு கொடுத்து, ஆதரவு கொடுத்துத் தேய்ந்துபோய்க் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு விஜய் பவர் கொடுப்பதாகக் கூறுகிறார். அவ்வாறு செய்தால் காங்கிரஸ் கட்சி மீண்டும் வரலாற்றைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். இந்த வாய்ப்பை காங்கிரஸ்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” – என்று சொல்பவர் நடிகரும் தவெக தலைவருமான விஜய்கூட அல்ல, அவருடைய தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரன்!

பாவம்தானே, காங்கிரஸ்.

காங்கிரஸ் தொண்டர்களை அவமதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது; காங்கிரஸ்காரனுக்கு வந்தே மாதரத்துக்கு ஜே சொல்லவும் தெரியும், திருப்பி அடிக்கவும் தெரியும் என்று எம்பி மாணிக்கம் தாகூர் கூற, இன்னொரு பக்கம், கூட்டணி பற்றிப் பொது வெளியில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவிக்க, காங்கிரசுடன் எந்த மோதலும் இல்லை. எல்லாருக்குமே தன்மானம், சுயமரியாதை முக்கியம்தானே என்றிருக்கிறார் சில நாள்கள் முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்த திமுக எம்பி கனிமொழி!

பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்துக்கு எங்களுக்கு முறையான தகவல் வரவில்லை. பாஜக கூட்டணியைப் புறக்கணிக்க நாங்கள் நினைக்கவில்லை. அவர்களும் அப்படிச் சொல்லவில்லை. தனித்துப் போட்டியிடும் எண்ணமில்லை. எந்தக் கட்சியுடன் கூட்டணி என்று பிப். 14 அல்லது 15 ஆம் தேதி அறிவிப்போம் என்று தெரிவித்துள்ள புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, கூட்டணியைச் சொல்லா விட்டாலும் அந்தக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்!

இவற்றுக்கு இடையே, தவெகவுடன் சில அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கப் போவதாக வெளிவரும் செய்திகள் அனைத்தும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை; அடிப்படை ஆதாரமற்றவை என அதன் துணைப் பொதுச்செயலர் ராஜ்மோகன் குறிப்பிட்டிருக்கிறார். நிச்சயம், வாய்ப்புக் கிடைக்காதவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள் அல்லது நிராகரிக்கப்பட்டவர்கள் என இன்னும் பல தலைவர்கள் எதிர்காலத்தில் தவெகவில் புகலிடம் தேடக் கூடும்.

தேர்தல் தேதி அறிவிக்கும் வரை, இந்தக் கூட்டணிக் குழப்பங்கள் தொடருமா? அல்லது வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறும் வரையிலும்கூட நீடிக்குமா? எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என்று சொல்லும் நிலைக்கு யார் யார் எல்லாம் வரப் போகிறார்களோ? தேர்தலுக்கு முன்னரேகூட சில முடிவுகள் தெரிந்துவிடுமோ?

Regarding the parties that have not yet formed an alliance despite the approaching assembly elections...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: செய்திகள் உடனுக்குடன்!

9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

குடியரசு துணைத் தலைவர் தைப்பூச வாழ்த்து

தேர்தலை மனதில் வைத்தாவது தமிழ்நாட்டிற்கு அறிவிப்புகள் இடம்பெறுமா?

மத்திய பட்ஜெட் : கவனம் ஈர்க்கும் நிர்மலா சீதாராமனின் ஓவியம்!

SCROLL FOR NEXT