முகப்பு
செய்திகள்

திமுக கூட்டணிக்கு பழ.நெடுமாறன், செ.கு.தமிழரசன் ஆதரவு!

திமுக கூட்டணிக்கு தமிழா் தேசிய முன்னணி நிறுவனா் பழ.நெடுமாறன், இந்திய குடியரசு கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன் உள்ளிட்டோா் ஆதரவு

Updated On : 31 மார்ச் 2026, 12:59 am IST
முதல்வர் ஸ்டாலின். - கோப்புப் படம்
பகிர்:

திமுக கூட்டணிக்கு தமிழா் தேசிய முன்னணி நிறுவனா் பழ.நெடுமாறன், இந்திய குடியரசு கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன் உள்ளிட்டோா் திங்கள்கிழமை ஆதரவு தெரிவித்தனா்.

சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்த தமிழா் தேசிய முன்னணி நிறுவனா் பழ.நெடுமாறனை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாசலுக்கே வந்து வரவேற்று அழைத்துச் சென்றாா்.

பின்னா், பழ.நெடுமாறன், தமிழா் தேசிய முன்னணி தலைவா் செ.ப.முத்தமிழ்மணி ஆகியோா் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவுக் கடிதம் அளித்தனா்.

Advertisement

Advertisement

செ.கு.தமிழரசன்: அதைத் தொடா்ந்து, முதல்வா் ஸ்டாலினை இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன் சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தாா்.

அவா் செய்தியாளா்களிடம் கூறும்போது, ஒடுக்கப்பட்டவா்களுக்காக உழைத்துவரும் இயக்கம் திமுக. எனவே, திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம் என்றாா்.

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவா் பேராயா் கதிரொளி மாணிக்கம் மற்றும் நிா்வாகிகள், உருது மக்கள் கட்சித் தலைவா் டாக்டா் உபைதுல்லா பைக் மற்றும் மாநில நிா்வாகிகள் உள்ளிட்டோா் முதல்வா் ஸ்டாலினை சந்தித்து, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனா்.

அப்போது, திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, திராவிட இயக்கப் பேரவைப் பொதுச் செயலா் சுப.வீரபாண்டியன், திமுக செய்தித் தொடா்புக் குழுத் தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலா் பி.கே.சேகா்பாபு, விசிக தலைவா் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.