கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி: நேர்காணலில் மாடு மேய்த்த பட்டதாரிகள்
கோவையில் நடைபெற்ற 8-ஆம் வகுப்பை அடிப்படை கல்வித் தகுதியாகக் கொண்ட, கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணலில்
கோவையில் நடைபெற்ற 8-ஆம் வகுப்பை அடிப்படை கல்வித் தகுதியாகக் கொண்ட, கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணலில், ஏராளமான பட்டதாரி இளைஞர்கள் கலந்துகொண்டு மாடு பிடித்தும், சைக்கிள் ஓட்டியும் காட்டினர்.
தமிழகம் முழுவதிலும் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு ஆள்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
சுமார் 700 காலிப் பணியிடங்களுக்கு பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ள நிலையில், இவர்களுக்கான நேர்காணல் தேர்வு மாவட்டங்களில் தொடங்கியுள்ளது.
கோவையில் நியூ சித்தாபுதூர், வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நேர்காணல் தேர்வு புதன்கிழமை தொடங்கியது. கோவை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் தமிழ்ச்செல்வன் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வில் ஏராளமான பட்டதாரிகள் பங்கேற்றனர்.
கோவை மாவட்டத்தில் 49 உதவியாளர் காலிப் பணியிடங்கள் மட்டுமே இருந்தாலும் 5,500-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 5,310 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கலந்தாய்வு வரும் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக்கு வந்திருந்த 765 பேரில் பெரும்பாலானவர்கள் பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப் படிப்புகளை முடித்தவர்களாக இருந்தனர். நேர்காணலுக்கு வந்திருந்தவர்களில் பலரும் பொறியியல் பட்டம், கலை- அறிவியல் பட்டம் பெற்றிருந்ததாகவும், குறைந்தபட்சம் பள்ளி இறுதி வகுப்பை முடித்தவர்களாக இருந்ததாகவும் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் ரூ. 12 ஆயிரம் மாத ஊதியமாக கிடைக்கக் கூடிய இந்த உதவியாளர் பணிக்கான நேர்காணலுக்கு, கால்நடைகளை கையாளத் தெரிந்திருக்க வேண்டும் என்பதும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் என்பதுமே தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன.
அதன்படி, நேர்காணலுக்கு வந்திருந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட தேர்வர்கள் மாடுகளை சற்று தூரம் பிடித்துச் சென்றும், சைக்கிளை ஓட்டிக் காட்டியும் சென்றனர்.
சில இளைஞர்கள் தங்களுக்கு கால்நடைகளை இலகுவாக கையாளவும், கழிவுகளை முறையாக அகற்றவும் தெரியும் என்று தெரிவித்துள்ளனர்.
அரசுப் பணியாக இருப்பதாலும், படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததாலுமே 8-ஆம் வகுப்பை அடிப்படை கல்வித் தகுதியாக கொண்ட இந்தப் பணியில் சேருவதற்காக, கூடுதல் கல்வித் தகுதி கொண்ட ஆயிரக்கணக்கானோர் போட்டியிடுவதாக கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.