முகப்பு
விவாதமேடை

இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகளாக செயல்பட வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் கூறியது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

இந்தியாவும் சீனாவும் பழம்பெரும் கலாசாரம், வர்த்தகத் தொடர்புடைய அண்டை நாடுகள்.

Updated On : 17 மார்ச், 2026 at 9:39 PM
இந்தியா - சீனா
பகிர்:

பகை வேண்டாம்!

இந்தியாவும் சீனாவும் பழம்பெரும் கலாசாரம், வர்த்தகத் தொடர்புடைய அண்டை நாடுகள். 20-ஆம் நூற்றாண்டில் இரு நாடுகளும் மாற்றங்களை நோக்கிப் பயணித்தன. இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்னைகளும் சண்டைகளும் நிகழ்ந்து வருகின்றன. உலக அளவில் இரு நாடுகளையும் ஒப்பிட்டால் சீனா மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. பகையாளிகளானால் இரு தரப்புக்கும் வளர்ச்சி ஏற்படாது. கூட்டாளியானால் இரு தரப்பும் வளர்ச்சி பெறும். எனவே, சீன வெளியுறவு அமைச்சர் கூறியபடி கூட்டாளியாகவே பயணித்து வளர்ச்சியடைவோம்.

சீனி. மணி, திருவாரூர்.

சரியான தருணம்

சீன வெளியுறவு அமைச்சர் கூறியது முற்றிலும் உண்மைதான். தற்போதைய நிலையில் அமெரிக்காவின் நாடு பிடிக்கும் பேராசையால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நல்லுறவு தேவைதான் என்பதை இரு நாடுகளும் அறியும். கிழக்கு பிராந்தியத்தில் இரண்டும் வல்லமை பெற்ற நாடுகளாக இருப்பதால், இரண்டும் இணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம். ஆனாலும், ஒரு நெருடல் நமக்கு ஏற்படுகிறது. சீனாவை எந்த அளவுக்கு நம்புவது என்பதை யாராலும் அளவிட முடியாது. ஏனென்றால் முந்தைய வரலாறுகள் அப்படி. சீனாவும், இந்தியாவும் பரஸ்பர நம்பிக்கை கொண்டு சிலவற்றை விட்டுக் கொடுத்து இணைய வேண்டிய சரியான தருணம் இது.

மகிழ்நன், கடலூர்.

வளர்ச்சியும் பாதுகாப்பும்

ஒரே பொருளாதார நிலையில் இருந்து தொடங்கிய போதும், சீனா இந்தியாவைவிட வேகமாக வளர்ச்சி கண்டது. அண்மையில் சீனா செயல்முறை முனைவர் பட்டங்கள் (பிராக்டிகல் பிஹெச்.டி.) வழங்குவதை நோக்கி முன்னேறி இருக்கிறது. மேம்பட்ட தொழில்நுட்பம், தொழிற்கல்வி, ஆராய்ச்சி போன்ற குறிப்பிட்ட துறைகளில் ஒப்பந்தங்களை விரிவுபடுத்தி சீனாவுடன் கூட்டாளியாகச் செயல்படுவது இந்தியாவுக்குப் பலனளிக்கும். அதேசமயம், சீன ஆதிக்கத்தைத் தடுக்க அரசின் நேரடிக் கண்காணிப்பு, வளர்ச்சியுடன் கூடிய நாட்டின் பாதுகாப்பு என நாட்டின் இறையாண்மைக்கு வலிமை சேர்க்கும்.

மூ. கிருத்திகா, திருப்பூர்.

நேர்மறை சிந்தனை

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்த இந்திய}சீன நட்பு மீண்டும் மலர்வதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இரு நாடுகளின் சாமானிய மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளும் வசதி வாய்ப்புகளை இரு தரப்பு ஆட்சியாளர்களும் ஏற்படுத்த முன்வரவேண்டும். யுவான் சுவாங் போன்ற பண்டைய சீன யாத்ரீகர்கள் போல நவீன சீனாவின் யாத்ரீகர்களும் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் காலம் விரைவில் வரும் என்ற நேர்மறை சிந்தனைகளை சீன வெளியுறவு அமைச்சரின் அறிவிப்பு வெளிப்படுத்துகிறது.

சுப்ர. அனந்தராமன், சென்னை.

எச்சரிக்கை அவசியம்

இந்தியா, சீனா இடையே கலாசார ரீதியிலான பிணைப்பு இருந்தாலும்கூட பன்னெடுங்காலமாகவே எல்லைப் பிரச்னைகள் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. அதே சமயத்தில், சீனாவுக்கும் பாகிஸ்தானுக்குமான உறவு என்பது மிகவும் பலம்வாய்ந்த சகோதரத்துவ உறவாகவும் இருக்கும் நிலையில், காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமான உறவில் எப்போதுமே மோதல் போக்கு நிலவுவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற நிலைப்பாட்டில் பாகிஸ்தானுடன் சீனா நட்புறவு கொண்டிருக்கும் சூழலில், மிகுந்த எச்சரிக்கையுடன் நட்பு பாராட்டுவது நல்லது.

ப.கோவிந்தராசு, ஊத்தங்கால்.

உலகளாவிய வளர்ச்சி

இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகளாகச் செயல்பட்டால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேலும் வேகம் பெறும். சீனாவுடன் தொழில்நுட்பம், முதலீடு மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு அதிகரித்தால் இந்தியாவின் ஜிடிபி உயர வாய்ப்பு உள்ளது. தற்போதைய இந்தியாவின் பொருளாதார மதிப்பும் இந்த ஒத்துழைப்பால் எதிர்காலத்தில் மேலும் உயரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. உலகின் மிகப் பெரிய எஃகு உற்பத்தி நாடான சீனாவுடன் இந்தியா தற்போது இணைந்து செயல்பட்டால், உலகளாவிய வளர்ச்சியில் நாம் பயணிக்கத் தொடங்கி, முதலீடுகள் அதிகரித்து இந்தியாவின் வளர்ச்சி அடுத்த நிலையை அடையும்.

ரமேஷ், ராஜேந்திரன்.

டிராகனும் யானையும்...

தென் கிழக்காசிய சந்தையிலிருந்து இந்தியாவை தொலைவில் வைத்திருக்க சீனா முயற்சிக்கிறது என்றால், உள்நாட்டு சந்தையிலிருந்து சீனாவை விலக்கி வைக்க இந்தியா முயற்சிக்கிறது. சீனாவும் இந்தியாவும் பரஸ்பர அவநம்பிக்கை காரணமாக எலியும் பூனையுமாக இருப்பதை விட்டுவிட்டு, பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தினால் டிராகனும் யானையுமாக நடனமாடலாம். சீன முதலீடுகளுக்கான விதிகளை இந்தியா தளர்த்தியிருப்பதும், இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைக்கு சீனா ஒத்துழைப்பு தந்திருப்பதும் வரவேற்கத்தக்க மாற்றங்களாக அமைந்துள்ளன. தில்லியை சீனாவும், பெய்ஜிங்கை இந்தியாவும் நட்புடன் நோக்குவது நல்ல முன்னெடுப்பு.

கு.ச. மோகன முருகன், சென்னை.

வரவேற்கத்தக்கது

வல்லரசுக்கான அனைத்துத் தகுதிகளையும் இந்தியா அடைய, "தொலைநோக்கு இந்தியா 2050' என்கிற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்துவது, கட்டமைப்புப் பெருக்கம், பல துறைகளில் பெருமுதலீடு செய்தல் உள்ளிட்ட செயல்பாட்டால் உள்நாட்டு உற்பத்தித் திறனைப் பெருக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்படி வளர்ச்சிக்கான கடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் இந்தியாவும், அண்டை வல்லரசு நாடுமான சீனாவும் கூட்டாளிகளாகச் செயல்பட வேண்டுமென்ற கருத்து பெரிதும் வரவேற்கத்தக்கதும், பாராட்டத்தக்கதும் ஆகும். இதனால், இரு நாடுகளுமே பயனடையும் என்பதில் ஐயமில்லை.

மனோகரன் முத்துசாமி, சென்னை.

வெளிப்படைத்தன்மை தேவை

கூட்டாளியாக இருப்பதற்கு முதலில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.

இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் என்னென்ன நடக்கிறது என்பதை வெளிப்படையாகவே உலக நாடுகள் அறிந்து கொள்ளும் வகையில், ஜனநாயகத்தின் எடுத்துக்காட்டு நிலமாக இந்தியா திகழ்கிறது. இதற்கு நேர்மாறானது சீனா. வர்த்தகத்தின் தேவை இரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதால் அதில் பாதிப்பு ஏற்படாத வகையில் பார்த்துக் கொண்டாலே போதும். இரு நாடுகளுக்கும் இப்போதைய முதன்மையானது வர்த்தகத் துறையின் நம்பகத்தன்மை மட்டுமே. அது பாகிஸ்தான் விஷயத்தில் தெளிவாகட்டும்.

சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.

ராஜதந்திர அடிப்படையில்...

சீனாவுக்கு இப்போதைய முக்கியத் தேவை தங்களின் உற்பத்திப் பொருள்களை விற்பதற்கு தகுந்த சந்தை. உலக அளவில் அதிக நுகர்வோரைக் கொண்ட நாடு இந்தியா. மிகப் பெரிய சந்தையான இந்தியாவை தன்வயப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சீனா நம்மை நட்பு வைத்துக் கொள்வதற்காக உதிர்க்கும் பாசாங்கு வார்த்தைகளை நம்பி நாம் ஏமாந்துவிடக் கூடாது. சீனாவுடனான நமது நட்பு என்பது ராஜதந்திர அடிப்படையில் இருக்க வேண்டும். சிறந்த உத்திகளைப் பயன்படுத்தி அவர்களின் அத்துமீறலைச் சமாளிக்கும் ஆற்றலுடன் கூடிய கூட்டு நடவடிக்கையே நமக்கு நீண்ட நாள்கள் பலனை வழங்க வல்லது.

எஸ்.பி. இளங்கோவன், தென்காசி.

கலாசார நட்புணர்வு

சீனாவின் அறிவிப்பு, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் வேத காலத்திலும் மற்றும் பண்டைய தமிழ்ச் சங்க காலத்திலும் நிலவிய கலாசார, ஆன்மிக, இலக்கிய, நுண்கலைகளுடன் பொருந்திய காலத்தை நினைவூட்டும் அறிவுபூர்வமான, விவேகமுள்ள உரத்த சிந்தனை. இப்போதைய சீனாவின் கம்யூனிஸ எதேச்சதிகார மமதை இன்றைய நவீன இந்தியாவின் பலமுனை வளர்ச்சி காரணமாக, நம்முடன் நல்லுறவைப் பேண விரும்புவது காலத்தின் கட்டாயம். இரு நாடுகளுக்கு இடையேயான நட்பு என்பதைவிட இரு தேச மக்கள் பரஸ்பரம் தொடர்பு கொள்வது ஆரோக்கியமான பரிமாணமாகும்.

எஸ். பாலாம்பாள், சென்னை.

தீர்வுகள் ஏற்படட்டும்

இந்தியாவும் சீனாவும் ஒருவரை மற்றொருவர் போட்டியாளர்களாகக் கருதாமல் பரஸ்பர ஒத்துழைப்புடன் இரு நாடுகளும் கூட்டாளிகளாகக் கருதி சிறந்த அண்டை நாடுகளாக நட்புறவை மேம்படுத்தி எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநிறுத்தி வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகின் மிகப் பெரிய வளர்ந்து வரும் நாடுகளான இந்தியாவும் சீனாவும் சேர்ந்து செயல்பட்டால் ஆசியாவின் பொருளாதார சக்தி மேம்படும் என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்தியா } சீனா உறவில் உள்ள எல்லைப் பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்பட்டால்தான் இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகளாகச் செயல்பட வாய்ப்புள்ளது.

கே.ஆர். ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.

நம்ப முடியாது

இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகளாகச் செயல்பட வேண்டும் என்ற சீன வெளியுறவு அமைச்சரின் கூற்று நம்பிக்கைக்கு உரியதுதானா என்று பலமுறை சிந்திக்க வேண்டியது உள்ளது. இந்தியாவின் கடந்தகால கசப்பான அனுபவங்கள்தான் இதற்குக் காரணம். சமீபத்திய லடாக் எல்லை பிரச்னைகூட இதற்கான சான்றுதான். ஏனெனில், எந்தவொரு ஒப்பந்தத்தையும் சீன அரசு முறையாகக் கடைபிடிப்பதில்லை என்பதும், அண்டை நாடுகளை ஆக்கிரமிப்பதும் சீனாவின் வழக்கமான வரலாறு. சீன அமைச்சரின் இப்போதைய இந்தக் கூற்றுக்கு காரணம், இந்தியாவின் தற்போதைய அபரிமிதமான வளர்ச்சியே.

அ. பட்டவராயன், திருச்செந்தூர்.

முழு கட்டுரையைப் படிக்க →