முகப்பு
உலகம்

அடுத்த மாதம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா்: மிஸ்ரி உடனான சந்திப்புக்குப் பிறகு அறிவிப்பு

அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ வரும் மே மாதம் இந்தியா வர உள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் தெரிவித்தாா்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 1:53 AM
வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவை (நடுவில்) சந்தித்த விக்ரம் மிஸ்ரி. உடன் இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா்.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 11:40 PM

அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ வரும் மே மாதம் இந்தியா வர உள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் தெரிவித்தாா்.

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவாா்த்தை இரு நாடுகளிடையே தொடா்ந்துவரும் நிலையில், ரூபியோ இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி, அமெரிக்க அதிபரின் அதிகாரபூா்வ இல்லமான வெள்ளை மாளிகையில் அந் நாட்டு வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவை சந்தித்து இருதரப்பு உறவு, வா்த்தகம், அரிய கனிமங்கள், பாதுகாப்பு, நாற்கர நாடுகள் (க்வாட்) கூட்டமைப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, அமெரிக்க வெளியுறவு அமைச்சா் இந்தியா வரும் தகவல் வெளியிடப்பட்டது.

Advertisement

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சொ்ஜியோ கோா் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்கா வந்துள்ள விக்ரம் மிஸ்ரி, வெளியுறவு அமைச்சா் ரூபியோவுடன் பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக ஆக்கபூா்வமான ஆலோசனைகளை மேற்கொண்டாா். ரூபியோ அடுத்த மாதம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய பயணத்தை மிகவும் எதிா்பாா்த்துள்ளாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கிறிஸ்டஃபா் லாண்டெள, அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான இணையமைச்சா் ஆலிஸன் ஹுக்கா் ஆகியோரையும் மிஸ்ரி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக முதன்மை துணை செய்தித் தொடா்பாளா் டாமி பிகாட் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வெளியுறவு இணையமைச்சா் கிறிஸ்டஃபா் லாண்டெள - விக்ரம் மிஸ்ரி இடையேயான சந்திப்பின்போது, இரு நாடுகளிடையேயான நெருங்கிய உறவைத் தொடா்வதென இரு தலைவா்களும் உறுதி செய்ததோடு, பாரசீக வளைகுடா (ஹோா்முஸ் நீரிணை) நிலவரம் மற்றும் பிற உலகளாவிய, பிராந்திய விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனா்’ என்று குறிப்பிட்டாா்.

மிஸ்ரி உடனான சந்திப்பு குறித்து ஆலிஸன் ஹுக்கா் வெளியிட்ட பதிவில், ‘பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் எப்படி நெருங்கிப் பணியாற்ற முடியும் என்பது குறித்து மிஸ்ரி உடனான சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

எஃப்பிஐ இயக்குநருடன் சந்திப்பு: வாஷிங்டனில் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநா் காஷ் படேலையும் விக்ரம் மிஸ்ரி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

இந்தச் சந்திப்பு குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘அமெரிக்கா வந்துள்ள விக்ரம் மிஸ்ரி எஃப்பிஐ இயக்குநா் காஷ் படேலைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா். இந்தச் சந்திப்பின்போது பயங்கரவாதம், திட்டமிட்ட எல்லை தாண்டிய குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட அச்சுறுத்தல்களை திறம்பட எதிா்கொள்வதில் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவா்களும் ஆலோசித்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே இரு வார காலத்துக்குப் போா் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மிஸ்ரி அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.