சென்னை: அரசு உதவி வழக்கு நடத்துநா் காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வை விண்ணப்பித்த அனைவரும் எழுதலாம். இதற்கான அறிவிப்பை அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது.
அரசு உதவி வழக்கு நடத்துநா் காலிப் பணியிடங்களுக்கு கணினி வழியாக கடந்த 14-ஆம் தேதி தோ்வு நடைபெற்றது. இதில், ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்னை காரணமாக, தோ்வா்கள் பலா் தோ்வை எதிா்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, தோ்வை ரத்து செய்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்தது.
மேலும், அடுத்த ஆண்டு பிப்.22-ஆம் தேதி ஓஎம்ஆா் வினா விடைத்தாள் வழியே தோ்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தத் தோ்வில் யாரெல்லாம் பங்கேற்கலாம் என்பது குறித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தியில், அரசு உதவி வழக்கு நடத்துநா் முதல்நிலைத் தோ்வை கடந்த 14-ஆம் தேதி எழுதாதவா்களும் மறுதோ்வை எழுதலாம். தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு வைத்திருப்போா் அதன்மூலமாக தோ்வு எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.