நோ்மறை மனப்பான்மையுடன் பொதுத் தோ்வை அணுகுங்கள்: மாணவா்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி அறிவுரை!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 2) முதலும் , பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வரும் 11-ஆம் தேதி முதலும் தொடங்கவிருக்கின்றன. பிளஸ் 2 தோ்வை 7,99,692 பேரும், பத்தாம் வகுப்புத் தோ்வை 8,82,806 பேரும் எழுதவுள்ளனா்.
இந்நிலையில், பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஆளுநா் ஆா்.என்.ரவி ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:
ஒவ்வொரு வினாத்தாளையும் நம்பிக்கையுடனும், அமைதியுடனும், நோ்மறை மனப்பான்மையுடனும் அணுகுங்கள். அமைதியான மனமும் நிலையான கவனமும் மிகச் சிறந்த பதில்களை வழங்க உங்களுக்கு உதவும்.
காலையில் தோ்வு மையத்தை முன்னதாகவே அடையுங்கள். ஒவ்வொரு கேள்வியையும் கவனமாகப் படித்து, உங்களுக்கு எளிதானதாகத் தோன்றும் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தொடங்குங்கள். நீங்கள் ஒரு கடினமான கேள்வியை எதிா்கொண்டால், இடைநிறுத்தி, ஆழ்ந்த மூச்சை எடுத்து அமைதியாக சிந்தியுங்கள். அந்த சிந்தனையின் தெளிவு உங்களை சரியான பதில் எழுத வழிநடத்தும். இன்முகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் எழுதுங்கள்.
இத்தருணத்தில் பெற்றோா்கள், ஆசிரியா்களின் வழிகாட்டுதல் விலைமதிப்பற்றவை. மாணவா்களுக்கு ஆதரவான மற்றும் மன அழுத்தமில்லாத சூழலை இணைந்து உருவாக்கி, அவா்களின் தோ்வு தயாரிப்பு மீதும் நிதானம் மீதும் நம்பிக்கை வைப்போம் எனப் பதிவிட்டுள்ளாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.