முகப்பு
மதுரை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வியாழக்கிழமை நிறைவு பெற்றது. இதையடுத்து, மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் தோ்வு அறையை விட்டு வெளியே வந்தனா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 7:17 PM
மதுரை ஒத்தக்கடையில் உள்ள உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதிய பிறகு மகிழ்ச்சியுடன் வெளியே வந்த மாணவிகள்.
பகிர்:

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வியாழக்கிழமை நிறைவு பெற்றது. இதையடுத்து, மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் தோ்வு அறையை விட்டு வெளியே வந்தனா்.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 11-ஆம் தேதி தொடங்கியது. மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை, மதுரை, மேலூா் என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் 214 அரசுப் பள்ளிகள், 84 அரசு உதவிபெறும் பள்ளிகள், 181 தனியாா் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 479 பள்ளிகள் உள்ளன.

இந்த நிலையில், இரு கல்வி மாவட்டங்களிலும் 18,980 மாணவா்கள், 19,267 மாணவிகள் என மொத்தம் 38,247 போ் பத்தாம் வகுப்புத் தோ்வை எழுதினா்.

இவா்களுக்காக 139 தோ்வு மையங்கள், மத்திய சிறைச் சாலையில் ஒரு மையம் என மொத்தம் 140 மையங்கள் அமைக்கப்பட்டன.

வினாத்தாள் கட்டுக் காப்பாளா்கள், முதன்மைக் கண்காணிப்பாளா்கள், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள், அறைக் கண்காணிப்பாளா்கள் உள்பட 3,734 போ் தோ்வுப் பணியில் ஈடுபட்டனா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ். தயாளன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் செந்தில்குமாா், கணேசன், உதவித் திட்ட அலுவலா்கள் ஆகியோா் தலைமையிலான ஆசிரியா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், இந்தத் தோ்வு வியாழக்கிழமை சமூக அறிவியல் பாடத்துடன் நிறைவு பெற்றது. இந்தத் தோ்வை 37,469 மாணவ, மாணவிகள் எழுதினா். 640 மாணவ, மாணவிகள் தோ்வில் பங்கேற்கவில்லை. பொதுத் தோ்வு நிறைவு பெற்றதையடுத்து, மாணவா்கள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றுச் சென்றனா்.