ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டை பெறுவதற்கான எளிய வழி! இதோ...!
ஆயுஷ்மான் காப்பீடு அட்டைக்கு விண்ணப்பது தொடர்பாக...
மக்களுக்கு மருத்துவக் காப்பீடு என்பது மிகவும் இன்றியாமையாதது. அதனால்தான் மாநில அரசும் மத்திய அரசும் பலவிதமான மருத்துவ சிகிச்சைகளையும் காப்பீடுத் திட்டங்களையும் இலவசமாக வழங்கி வருகிறது.
70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் ஜன ஆரோக்கிய திட்டம் (ஏபி பிஎம்- ஜெய்) என்ற இலவச மருத்துவக் காப்பீடுத் திட்டத்தை மத்திய அரசு கடந்தாண்டு அக்டோபர் 29-இல் தொடங்கி வைத்தது.
இந்தத் திட்டம், 2018- இல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பிரதமரின் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் (பிஎம்-ஜெய்) விரிவுபடுத்தப்பட்ட திட்டமாகும்.
கடந்த 2018-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின்கீழ்’ தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.
இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த மார்ச் 1-ஆம் தேதி வரை, 8.9 கோடி பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ரூ.1. 26 லட்சம் கோடி மதிப்பிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 1 வரையிலான நிலவரப்படி, நாடு முழுவதும் 30,957 மருத்துவமனைகளில் (13,866 தனியார் மருத்துவமனைகள், 17,091 அரசு மருத்துவமனைகள்) சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் ஜன ஆரோக்கிய திட்டம் (AB PM-JAY) தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டம் மத்திய அரசாங்கத்தால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட சுகாதார காப்பீட்டுத் திட்டமாகும்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயன்கள்
* அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2-ம் மற்றும் 3-ம் நிலை சிகிச்சைக்காக குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
* பயனாளர்களின் மருத்துவ சிகிச்சைக்கு பணமில்லா பரிவர்த்தனையை வழங்குகிறது.
* பயனாளர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு 3 நாள் முன்பிலிருந்து, அனுமதிக்கப்பட்டு 15 நாள்கள் வரையிலான நோய் கண்டறிதல் மற்றும் மருந்துகள் இத்திட்டத்தில் உள்ளடங்கும்.
* குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, வயது, பாலினம் ஆகியவற்றுக்கு எந்தத் தடையும் இல்லை.
* இத்திட்டத்தின் பலன்கள் நாடு முழுவதும் எளிதில் அணுககூடிய வகையில் உள்ளது. ஒரு பயனாளி எந்தவொரு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்குச் சென்று பணிமில்லா சிகிச்சையைப் பெற முடியும்.
எவையெல்லாம் மருத்துவக் காப்பீட்டில் சேரும்?
மருந்துகள், தேவையானப் பொருள்கள், நோய்க் கண்டறிதல் சேவை, மருத்துவர் கட்டணம், அறைக் கட்டணம், மருத்துவ சிகிச்சை கட்டணம், அறுவை சிகிச்சைக் கட்டணம் புறநோயாளி பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டணம் உள்ளிட்ட சிகிச்சை தொடர்பான சுமார் 1,929 சேவைகள் இத்திட்டத்தில் உள்ளடங்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?
படி 1: மத்திய அரசின் https://abha.abdm.gov.in/abha/v3 என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
படி 2: அதில் create ABHA number என்பதை கிளிக் செய்து ஆதார் அல்லது ஓட்டுநர் உரிமம் எண்ணை செலுத்தி உள்ளே செல்ல வேண்டும்.
படி 3: senior citizens aged 70+ என்பதை கிளிக் செய்ய வேண்டும், அதில் உங்களின் மாநிலம், மாவட்டம், ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
படி 4: ஆதார் எண்ணை செலுத்தி உள்ளே செல்லும் போது ஓடிபி கேட்கும், ஓடிபியை பதிவிட்டு உள்ளே செல்ல வேண்டும்.
படி 5: கேஒய்சி சரிபார்ப்பு நடைபெறும், பின்னர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
15 நிமிடங்களில் உங்களுக்கான மருத்துவக் காப்பீடு அட்டை தோன்றும். அதைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆயுஷ்மான் அட்டையை எந்தெந்த மருத்துவமனைகளில் பயன்படுத்தலாம்?
படி 1: மத்திய அரசின் https://pmjay.gov.in என்ற இணையதளத்தில் Find Hopsital என்ற பொத்தானைப் பயன்படுத்தி மாநிலம், மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
படி 2: அடுத்து, எவ்விதமான சிகிச்சையை என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். தொடர்ந்து, SUBMIT பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
படி 3: பின்னர் திரையில் தெரியும் கேப்சா குறியீட்டைப் பதிவு செய்து உங்கள் பகுதியில் ஆயுஷ்மான் அட்டையை ஏற்றுக்கொள்ளும் மருத்துவமனைகளின் பட்டியலைக் காணலாம்.
ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீட்டுக்கு நீங்கள் தகுதியானவரா?
* ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு நீங்கள் தகுதியானவரா என்பதை சரிபார்க்க https://pmjay.gov.in/ என்ற இணையதளத்தில் Am I Eligible என்ற பொத்தானை அழுத்தி வழிமுறைகளைப் பயன்படுத்தி சரிபார்க்கலாம்.
* 14555 கட்டணமில்லா எண்ணைத் தொடர்புகொண்டு சரிபார்க்கலாம்.
* CSC மையத்திற்கு நேரில் சென்று ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீடு அட்டையைப் பெறலாம்.