ஸ்ரீ முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் அரோகரா கோஷங்கள் முழங்க வெகு சிறப்பாக நடைபெற்றது.
சரியாக இன்று (ஜூலை 14) அதிகாலை 5:31 மணிக்கு தேவசேனா உடனுரை சுப்பிரமணியசுவாமி மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹா குடமுழுக்கு நடைபெற்றது.ஸ்ரீ முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 14 ஆண்டுகளுக்குப் பின்பு இன்று (ஜூலை 14) மஹா குடமுழுக்கு நடைபெற்றது.
ராஜகோபுரத்தில் உள்ள 7 தங்க கலசம், அம்பாள் சன்னதியில் 1 கலசம், கணபதி கோவில் 1 கலசம் உள்பட 9 கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.கோயிலில் கம்பீரமாக காட்சியளிக்க கூடிய ராஜ கோபுரம் முழுவதும் கலை நுனுக்கத்துடன் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளித்தது.குடமுழுக்கின் போது பக்தர்கள் முருகா... முருகா... என்றும், கந்தனுக்கு அரோகரா என்றும் பக்திப் பரவசத்தில் கரகோஷம் எழுப்பினர்.குடமுழுக்கு பிறகு ட்ரோன்கள் மூலம் புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.குடமுழுக்கு விழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.