சென்னை, ஜன. 21 - தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 13 (ஆம் தேதி) முதல், தமிழ்நாட்டில் உள்ள ஹைக்கோர்ட்டின் கீழ் இருக்கும் எல்லா கோர்ட்டுகளிலும் டிரிபியூனல்களிலும் தமிழ் மொழி, அலுவல் மொழியாக்கப்படுகிறது.
இது சம்பந்தமாக தமிழ்நாடு அரசு இன்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது என்று சட்ட மந்திரி திரு. எஸ். மாதவன் தெரிவித்தார். இதன்படி, அந்தக் கோர்ட்டுகளில் தீர்ப்புகளும் மற்ற உத்தரவுகளும் தமிழ் மொழியில் எழுப்படும். ஆனால், ஆங்கில மொழியின் உபயோகம் முற்றிலும் தடை செய்யப்படவில்லை என்றார்.
தமிழை தாய்மொழியாகக் கொண்டிராத நீதிபதிகள், தங்கள் தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் தொடர்ந்து ஆங்கிலத்தில் எழுதலாம். தமிழை தாய் மொழியாகக் கொண்ட, ஆனால் தமிழில் தீர்ப்புகளை எழுத இயலாத நீதிபதிகளும், ஆங்கிலத்தில் தொடர்ந்து தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழில் எழுதப்படும் தீர்ப்புகளில் அவசியமானால் ஆங்கிலச் சொற்களையும் சொற்றொடர்களையும் எழுதலாம் என்று திரு. மாதவன் மேலும் கூறினார்.
தமிழை கோர்ட் அலுவல் மொழியாக்கும் அரசு கொள்கை அமலின் 3-அது கட்டமாக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, தமிழியில் மாதிரி தீர்ப்புகளை எழுதிய நீதிபதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இரண்டாவது சட்டமாக, சாட்சியங்கள் தமிழில் பதிவு செய்யப்பட்டன.
பம்பாய், ஜன. 20 - டெலிபோன் இணைப்புகள் பெற்றுத் தருவதாக பலரிடம் பணம் பெற்று மொத்தம் ரூ. 37,000 மோசடி செய்ததாக பம்பாய் டெலிபோன் ஆலோசனைக் கமிட்டி மெம்பர் சுரேஷ் ரதிலால் மேத்தா கைது செய்யப்பட்டு பிரதம மாஜிஸ்டிரேட் முன் இன்று ஆஜர் செய்யப்பட்டார். அவரை ரூ. 10000 ஜாமீனில் விடுதலை செய்ய மாஜிஸ்டிரேட் உத்தரவிட்டார்.
சுரேஷ் திலால் மேத்தா பம்பாய் யுனெஸ்கோ கிளப்பிலும், சர்வதேச சமாதான நட்புறவு சங்கத்திலும் மற்றும் பல்வேறு சங்கங்களிலும் மெம்பர் என்றும் ஒரு நிறுவன முதலாளி என்றும், பலரிடம் டெலிபோன் இணைப்பு போலி உத்தரவுகளை காட்டிப் பணம் பெற்றார் என்றும், பின்னர் டெலிபோன் இணைப்பு கிடைக்காது போகவே பணம் தந்தோர் கேட்டதற்கு போலி செக்குகளைத் தந்தார் என்று போலீசார் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.