ரேகாவின் தாயாருக்குக் கவலையாக இருந்தது. பதினாறு வயது மகள் கண்பார்வை தெரியவில்லை என்கிறாள். டாக்டரானால், முழு பவர் கொடுத்துவிட்டேன் என்று கையைப் பிசைகிறாரே! குழந்தைக்கு ஸ்கூலில் ஏதேனும் பிரச்சினையாயிருக்குமோ என்று வேறு சந்தேகத்தைக் கிளப்புகிறார்.
இன்று மறுபடி கண் பரிசோதனை. ஆனால் வேறு டாக்டர். ரொம்பப் பொறுமையாகப் பார்த்தார். ரேகா அதையே தான் சொன்னாள்,
“எனக்கு பார்வை சரியாக இல்லை டாக்டர். ஒரு பக்கம் டார்க்கா.. மறைக்கிற மாதிரி இருக்கு.”
எப்பவும் போல் சார்ட்டை நன்றாகவே படித்தாள். கண் பாப்பாவை டைலேட் செய்து, பார்வை நரம்பை தீவிரமாகப் பரிசோதித்த டாக்டருக்கு சந்தேகம் வலுத்துக்கொண்டே வந்தது. ரேகாவுக்கு, கண் ப்ரெஷர் டெஸ்ட் செய்ய ஆரம்பித்தார்.
“டாக்டர், இவ்வளவு சின்னப் பெண்ணுக்கு எதுக்கு ப்ரெஷெர் பார்க்கிறீர்கள்?”
“சாதாரணமாகப் பார்ப்பதில்லைம்மா. ஆனால், நான் சந்தேகப்பட்டது சரியாகப் போயிற்று. உங்கள் மகளுக்கு கண் ப்ரெஷர் அதிகமாகத்தான் இருக்கிறது”
“இருபதுக்குள் இருக்க வேண்டிய கண் ப்ரெஷெர் இரண்டு கண்ணிலும் முப்பது கிட்டே இருக்கிறது.”
“உங்கள் வீட்டில் யாருக்காவது கிளக்கோமா இருக்கிறதா?”
“ஆமாம் டாக்டர். ரேகாவின் பாட்டி, சின்னப் பாட்டி, அத்தை எல்லோருக்கும் இருக்கிறது”.
அடுத்தடுத்த பரிசோதனைகளும், ரேகாவிற்கு கிளக்கோமா இருப்பதை உறுதிப்படுத்தின. மருந்து தினமும் போட்டு , நல்ல முன்னேற்றம் என்றாலும், ஒரு கண்ணில், நிரந்தரமாக பக்கப் பார்வை கொஞ்சம் குறைந்து விட்டது
கிளக்கோமா நேரோ ஆங்கிள், ஒப்பென் ஆங்கிள் என இருவகைப்படும்.
குறுகிய கோணம் உடையவர்களுடைய கண்ப்ரெஷெர், அறிகுறிகளுடன் கூடியதாய் இருக்கும். தலைவலி, வானவில்லைப் போன்ற ஒளி வட்டங்கள், திடீரென பனிபோல் மூடும் பார்வை ஆகிய அறிகுறிகள் இருக்கும். சரியான சமயத்தில் கண்டுபிடித்தால் எளிமையானதொரு லேசர் சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம்.
ஒப்பன் ஆங்கிள் கிளக்கோமா தான் நிஜமான வில்லன். இன்றளவும், பலபேரின் பார்வையைப் பறித்துக் கொண்டிருக்கிறது. பரம்பரையாக வரக்கூடிய இந்நோய், முதலில், கீழ்ப்பார்வை, பக்கப் பார்வை ஆகியவற்றைக் குறைத்துக்கொண்டே வரும். நேர்ப்பார்வை, நோய் முற்றும்வரை தெரிந்து கொண்டே இருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள், மிகத்தாமதமாகத்தான் டாக்டரிடம் வருகிறார்கள். தாங்களாகவே கண்புரை என்று நினைத்துக் கொண்டு, முழுவதும் மறைத்ததும் டாக்டரிடம் போய்க் கொள்ளலாம் என்று நினைத்து ஏமாந்து போகிறார்கள்.
கண்ணில் உள்ள அக்வஸ்ஹூயூமர் என்னும் திரவம் இயற்கையாக வெளியேறும் பாதைகள் செயலிழக்கும் போது, திரவ அழுத்தம் அதிகமாகி, ஆப்டிக் நரம்பை [பார்வை நரம்பு] பாதிக்கும். இது ஏன் பலபேர் பார்வைக்கு வில்லனாக இருக்கிறது என்றால், இது முற்றிப் போகும் வரை அறிகுறி இருப்பதில்லை. ரெகுலர் பரிசோதனைகளின் போதே தெரிய வருகிறது.
இதற்கான பரிசோதனைகள் என்ன?
ஃபீல்டு டெஸ்டிங் எனப்படும் பக்கப்பார்வை மற்றும் கீழ், மேல் பார்வைக்கான பரிசோதனை.
நெர்வ் ஃபைபெர் லேயர் ஸ்கான் எனப்படும் பரிசோதனையில், பார்வை நரம்பு, மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின், திண்மை அளக்கப்பட்டு , தேய்மானம் இருக்கிறதா என்று கணக்கிடப்படுகிறது. இந்தப் பரிசோதனைகளின் மூலம் மிகஆரம்ப நிலையிலேயே கிளக்கோமாவைக் கண்டுபிடித்துக் கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.
இது பரம்பரையாக வரக்கூடியதா?
ஆம். கட்டாயமாக வரும் என்பதில்லை. ரத்த சொந்தங்களுக்கு இருந்தால், அதிகப்படி கவனத்துடன் செக்கப் செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும், உங்கள் கண் மருத்துவரிடம், குடும்பத்தில், இந்நோய் உள்ளதென்பதைக் கூற வேண்டும்.
என்ன அறிகுறி?
அறிகுறியே இருக்காது. ஆரம்பத்தில் வலி, கண் சிவத்தல், தலைவலி, பார்வைக்குறைவு எதுவுமே இருக்காது. முற்றிய பின்னர் நடப்பதே தடுமாற்றமாக இருக்கும்.
குணமாக்க முடியுமா?
ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால், மருந்துகளால், நன்றாக மெயின்டைன் பண்ண முடியும். தாமதமாகக் கண்டுபிடித்தால், இருக்கின்ற பார்வையைக் காப்பாற்ற மட்டுமே போராட்டம்.
எந்த வயதில் வரும்?
முன்னரெல்லாம், ஐம்பது வயதுக்கு மேல் வந்து கொண்டிருந்தது. இப்போது, சர்க்கரை நோய் போல, சீக்கிரமே வந்து விடுகிறது. நாற்பது வயதிலிருந்து செக்கப்பில் கண் ப்ரெஷர் பார்க்கிறோம். சந்தேகம் இருப்பின் அதற்கு முன்னரும் பார்ப்போம்.
குழந்தைகளுக்கு வருமா?
பிறவியில் சில குழந்தைகளுக்கு இருக்கும். கருவிழி பெரிதாக, நீர் கோர்த்தாற்போல் இருக்கும். பரம்பரை வியாதியாக உள்ள குடும்பங்களில், சமயத்தில் பதின்பருவத்திலும், இருபது, முப்பதுகளிலும் வருகிறது. இது மிகவும் அரிது.
இதைத் தடுக்க முடியுமா?
முடியாது, ஜெனெடிக் என்பதால், உணவுப் பழக்கங்களாலோ, வாழ்க்கை முறையாலோ, பயிற்சிகளாலோ தடுக்க முடியாது.
பிளட் ப்ரெஷர்- ரத்தக் கொதிப்புக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா?
கிடையாது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குக் கூடுதல் கவனம் தேவை.
மருத்துவம் என்ன?
தொடர்ந்து, அதற்கான கண்மருந்து உபயோகிக்க வேண்டும், சிலசமயங்களில், அறுவை சிகிச்சை தேவைப்படும்.
எச்சரிக்கை:
மருந்துகளை சரியாக உபயோகிக்காமல், “எனக்கு ஒரு முன்னேற்றமும் தெரியவில்லை” என விரக்தியாகப் பேசுபவர்களுக்கு:
‘” தயவு செய்து கண் மருந்துகளைத் தவறாமல் பயன்படுத்துங்கள். இல்லையெனில், இருக்கும் பார்வையையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் அபாயம் உண்டு.”
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.