இந்தியாவில் பல்வேறு காரணங்களால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மனித இதயத்தின் தசைகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் மூன்று கரோனரி ரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிந்து, அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.
இவ்வாறு செல்லும் மூன்று கரோனரி ரத்தக் குழாய்களில் 70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் அடைப்பு ஏற்பட்டால் நெஞ்சு வலி ஏற்படுகிறது. திடீரென ஒரு ரத்த நாளத்தில் 100 சதவீதம் அடைப்பு ஏற்படும் போது மாரடைப்பு உருவாகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சை முறையிலும் படிப்படியாக முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஆஞ்சியோ பிளாஸ்ட்டி-ஸ்டென்ட் சிகிச்சையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
உயிர் காக்கும் ஆஞ்சியோ பிளாஸ்ட்டி-ஸ்டென்ட் சிகிச்சை: மாரடைப்பை எளிதாக நீக்க ஆஞ்சியோ பிளாஸ்ட்டி மற்றும் ஸ்டென்ட் பொருத்துதல் சிகிச்சை முறை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
மாரடைப்பு ஏற்பட்டால் 3 முதல் 6 மணிநேரத்துக்குள் உயிர் காக்கும் அவசர ஆஞ்சியோ பிளாஸ்ட்டி-ஸ்டென்ட் சிகிச்சை செய்யப்பட வேண்டும். இது, இதயத் தசை மேலும் பலவீனமடைவதைத் தடுக்கும். இதன் மூலம், பல நடுத்தர வயது, வருவாய் ஈட்டக்கூடிய குடும்பத் தலைவர்களின் உயிர் காக்கப்படுகிறது.
இதில், காலதாமதம் செய்தால் இதயத் தசை பலவீனமடையும். எனவே, தாமதமாகச் செய்யும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை வெற்றிகரமாக அமைந்தாலும், நோயாளிகளுக்கு முழுப் பலனும் கிடைக்காது. எனவே, உரிய நேரத்தில் ஆஞ்சியோ பிளாஸ்ட்டி-ஸ்டென்ட் சிகிச்சை செய்வது அவசியம்.
ஆஞ்சியோபிளாஸ்ட்டி-ஸ்டென்ட் சிகிச்சையின் முன்னேற்றம்: ஆஞ்சியோ பிளாஸ்ட்டி சிகிச்சையில் 2003-ஆம் ஆண்டு வரை உலோக ஸ்டென்ட்டுகள் பொருத்தப்பட்டன. அவற்றில் மறு அடைப்பு ஏற்பட 20 சதவீதம் வரை வாய்ப்பு இருந்தது. 2003-ஆம் ஆண்டு முதல் மருந்து கோட் செய்யப்பட்ட (ஈதமஎ இஞஅபஉஈ) ஸ்டென்ட்டுகள் பொருத்தப்பட்டன. இவற்றில் மறு அடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தாலும், வாழ்நாள் முழுவதும் மருந்துகள் சாப்பிட வேண்டிய கட்டாயம் இருந்தது.
இவை அனைத்துக்கும் மாற்றாக 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கரையும் (ஈஐநநஞகயஐசஎ) ஸ்டென்ட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை பல காலமாக அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் பயன்படுத்தும் கரையும் பொருளால் செய்யப்படுகின்றன. இந்தக் கரையும் ஸ்டென்ட் பொருத்துவதன் மூலம் 6 மாதங்களில் அந்த ஸ்டென்ட் இதய ரத்தக் குழாய்களை விரிவடைய வைக்கிறது.
இவ்வாறு அடைபட்டிருந்த இதய ரத்தக் குழாய்கள், முன்பு இருந்தபடி இயல்பாக மாறி அடைப்பு நீங்கி விடுகிறது. இதன் மூலம் ரத்தக் குழாய்கள் ஆரோக்கியமடைகின்றன. இத்தகைய நோயாளிகளுக்கு மருந்துகளையும் நிறுத்திவிட முடிகிறது. எனவே கரையும் ஸ்டென்ட்டுகள் மருத்துவ உலகில் ஒரு புரட்சி என்றுதான் கூற வேண்டும்.
கரைந்த ஸ்டென்ட்டுகள்: தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு டெல்டா பகுதியைச் சேர்ந்த பல நோயாளிகளுக்குக் கரையும் ஸ்டென்ட் சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது பொருத்தப்பட்ட ஸ்டென்ட் இப்போது முழுவதுமாகக் கரைந்துவிட்டது. இதன் மூலம், சம்பந்தப்பட்ட நோயாளிகளின் இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்கள் இயல்பான ரத்தக் குழாய்களாக மாறிவிட்டன. ஸ்டென்ட்டுடன் அடைப்பும் சேர்ந்து கரைவதால் ரத்தக் குழாய் இயல்பான நிலையை அடைகின்றன.
டாக்டர் பி. கேசவமூர்த்தி,
இதய மருத்துவ நிபுணர்,
மீனாட்சி மருத்துவமனை தஞ்சாவூர்
தினமணியின் மருத்துவ மலர் (2014 - 15)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.