பார்வையிழப்பை ஏற்படுத்தும் யூவிஐட்டிஸ் எனப்படும் கண் அழற்சி நோய் குறித்த 3 நாள் சர்வதேச கருத்தரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் மருத்துவ-பார்வை ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள இந்தக் கருத்தரங்கு தொடர்பாக டாக்டர்கள் ஜோதிர்மயி பிஸ்வாஸ், சுதா கே.கணேஷ், மம்தா அகர்வால், அமெரிக்க மருத்துவ நிபுணர் ஜேம்ஸ் ரோஸன்பாம் ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:-
வெளி அடுக்கு, நடு அடுக்கு, உள் அடுக்கு என கண்ணின் பாகங்களில் நடு அடுக்கில் யூவியா எனும் பகுதி அமைந்துள்ளது. கண்ணின் பல பாகங்களுக்கும் ரத்தம் மூலம் தேவையான ஊட்டச் சத்தை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை யூவியா செய்கிறது. இந்தப் பணியைச் செய்ய யூவியாவில் சிரைகள், தமனிகள், நுண்ணிய ரத்தக் குழாய்கள் உள்ளன.
கண் அழற்சி நோய் ஏற்படுவது ஏன்? காச நோய் உள்ளிட்ட நோய்த் தொற்று, கண்களில் காயம் ஏற்படுதல், கண்களில் வீக்கம் ஆகியன யூவிஐட்டிஸ் எனப்படும் கண் அழற்சி நோய்க்குக் காரணங்களாகும்.
இதற்கான அடிப்படைக் காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் 50 சதவீத நோயாளிகளுக்கு காச நோய், தொழு நோய், டெங்கு, சிக்குன்குன்யா, எய்ட்ஸ் போன்ற பிரச்னைகளின் காரணமாக கண் அழற்சி நோய் பாதிப்பு ஏற்படுவது மருத்துவப் பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அறிகுறிகள் என்ன? கண்கள் சிவப்பாகக் காணப்படுவது, தெளிவற்ற பார்வை, வெளிச்சத்தைக் கண்டு கண்கள் கூசுவது, நமது பார்வைக் களத்தில்-பார்க்கும் பகுதியில் கருமை கலந்த புள்ளிகள் மிதப்பது போலத் தெரிவது, கண் வலி, கண்ணின் கரு விழியின் கீழ்ப் பகுதியில் தெளிவற்ற வெண்மையாகத் தோற்றம் அளிப்பது ஆகியவை யூவிஐட்டிஸ் எனப்படும் கண் அழற்சி நோயின் அறிகுறிகளாகும். பொதுவாக கண்கள் சிவப்பாக மாறினால் உடனடியாக ஒரு கண் மருத்துவரைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுவது அவசியம்.
வயது வரம்பு உண்டா? 20 முதல் 40 வயது உள்ளவர்களையே நோய் அதிகம் பாதிக்கிறது. நோயின் தீவிரத் தன்மையைப் பொருத்து, மீண்டும் மீண்டும் வரலாம். இதற்கு ஸ்டீராய்டு, சைக்ளோ ப்ளெஜிக் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தொடர் மருத்துவ ஆலோசனை: உடலின் மற்ற பாகங்களில் உள்ள நோய்களோடு தொடர்புடையனவாக இருப்பதால் நோயினால் பாதிக்கப்பட்டால் தொடர் மருத்துவ ஆலோசனை அவசியம்.
ஏனெனில் இந்த நோய் தீவிரமடையும் நிலையில் கண் நீர் அழுத்த நோய் (க்ளாக்கோமா), விழித்திரை பிரிதல் பாதிப்பு போன்ற பிரச்னைகள் உருவாகி பார்வையிழப்பை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.