குழந்தைகள் நலம்

உடம்புக்கு நன்மை தரும் கடம்ப மரம்!

நான் தான் கடம்ப மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் ஆந்தோசெபாலஸ் கடம்பா என்பதாகும்

தினமணி


நான் தான் கடம்ப மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் ஆந்தோசெபாலஸ் கடம்பா என்பதாகும். நான் ரூபியாசியே (காஃபி குடும்பம்) குடும்பத்தைச் சேர்ந்தவன். நீரோட்டமுள்ள கரைகளில் நான் செழித்து வளருவேன். முருகனுக்கும், திருமாலுக்கும் உரியவன் நான் என சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன. அதோட நன்னன் என்னும் அரசனின் காவல் மரமாகவும் நான் இருந்திருக்கிறேன். கலித்தொகை, திருமுருகாற்றுப்படை போன்ற சங்க தமிழ் இலக்கியங்களில் என் பெயர் இடம் பெற்றுள்ளது. அது மட்டுமா, 1977-ஆம் ஆண்டு இந்திய அரசால், அஞ்சல் தலையில் பொறிக்கப்பட்ட பெருமையுடையவன்.

நான் ஆன்மிகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவன். முற்காலத்தில் கடம்ப மரங்களின் சோலையாகத் தான் மதுரை இருந்தது. நான் அதை எப்படி சொல்வேன், என்னை அழித்துத் தான் மதுரை நகரம் தோன்றியதாம். இந்தக் காரணத்தினாலேயே மதுரைக்கு கடம்பவனம் என்ற பெயரும் உண்டு. மேலும், மதுரை மீனாட்சி அம்மனுக்கு கடம்பவனவாசினி மற்றும் கடம்பவனபூவை என்ற திருப்பெயர்கள் உண்டு என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 முருகனை கந்தா, கடம்பா என்று அழைப்பதன் மூலமும், "கடம்ப மாலையை இனி விட நீ வர வேணும்' என அருணகிரிநாதர் முருகனை வேண்டுவதிலிருந்தும் எனது தெய்வத் தன்மையை நீங்கள் அறியலாம். விஷ்ணு புராணத்தில் கிருஷ்ணருக்கு என் மலர்கள் மிகவும் பிடிக்கும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

நான் வட்டமான தலையுடன் அழகா இருப்பேன். என்னுடைய பூக்கள் மஞ்சள் நிறத்தில் வட்டமாக ஒரு டென்னிஸ் பந்து போல இருக்கும். என் பூக்கள் அருமையான நறுமணம் கொண்டவை. அதனால் இளம் வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள் தேன் உறிஞ்ச வட்டமிட்டு என்னை நாடி வருவாங்க. அப்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். மேலும், நான் அத்தர் தயாரிப்பில் பெரிதும் உதவுகிறேன். என்னுடைய வேர், பட்டை, இலை, காய், கனி, விதை அனைத்துமே மருத்துவ குணம் மிகுந்தவை. நான் சிறுநீரகக் கோளாறுகளைப் போக்குவேன். நான் சிறுநீர் பிரச்னைகள், இரத்த சோகை, தோல் நோய்கள் ஆகியவற்றை போக்க உதவுகிறேன்.

நான் அதிக இலைகளை உதிர்த்து மண்ணில் கரிம வளத்தைக் கூட்டுகிறேன். என்னுடைய இலைச் சாறு வாய்ப் புண்ணை குணப்படுத்துவதோடு, தொண்டை அழற்சியையும் போக்கி, வயிற்றுப் பிரச்னையை தீர்ப்பதுடன், ஜீரண மண்டல உறுப்புகள் சீராக செயல்பட உதவும். இதனுடன் சிறிது சர்க்கரை மற்றும் சீரகத்தை சேர்த்துக் கொடுத்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும். எனது பட்டையைத் தண்ணீரில் போட்டு காய்ச்சி அந்தத் தண்ணீரைக் குடித்தால் காய்ச்சல் குணமாகும். என்னுடைய விதையை அரைத்து நீரித்து கலந்து விஷம் குடித்தவர்களுக்குக் கொடுத்தால் விஷம் முறிந்து விடும். என்னுடைய இலைகளை சிறிது சூடு செய்து ரணம், காயங்கள், புண்கள் மேல் வைத்து கட்டினால் வலி குறைவதோடு புண்களும் ஆறும். என் மரப்பட்டையின் கஷாயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். நான் பென்சில், தீக்குச்சி, காகிதம் தயாரிக்க பெரிதும் உதவுகிறேன். மேல்தள பலகை மற்றும் தேயிலை பெட்டிகள் செய்யவும் பயன்படுகிறேன்.

நான் மதுரை நகரம் அருள்மிகு மீனாட்சி சுந்தரரேஸ்வரர், கரூர் மாவட்டம் குளித்தலை, திருக்கடம்பந்துறை அருள்மிகு கடம்பவனேஸ்வரர், கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர், அருள்மிகு மந்திரகிரி வேலாயுத சுவாமி, கடலுர் மாவட்டம், மேலக்கடம்பூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர், திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி, அகத்தீஸ்வரம் அருள்மிகு சைலநாத சுவாமி ஆகிய திருக்கோயில்களில் தலவிருட்சமாக இருக்கிறேன்.
என்னுடைய நட்சத்திரம் சதயம். மண்ணுக்கும் மரம் தான் உரம். மழைக்கும் மரம் தான் வரம். நன்றி குழந்தைகளே ! மீண்டும் சந்திப்போம் !

 பா.இராதாகிருஷ்ணன்
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT