இது வரை எழுதிய விஷயங்கள் பொதுவாக எல்லா வயதினரும் மேற்கொள்ளும் விஷயங்களாக இருந்தது. இனி குறிப்பாக அந்தந்த வயதினருக்கும், பருவத்திற்கும் ஏற்ற உணவுகளைப் பற்றியும், அவர்களுடைய உணவு மற்றும் ஊட்டச்சத்து தேவைகளைப் பற்றியும் பார்ப்போமா?
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலைத் தவிர வேறு சிறந்த உணவு எதுவும் இல்லை. தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்குத் தண்ணிர் கூட தேவையில்லை. தேன், சர்க்கரை, தண்ணீர், ஆகியவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை சரிவிகிதத்தில் அமைத்துக் கொடுத்துள்ளது இயற்கை. இந்த இயற்ஐ வரப்பிரசாதம் தான் குழந்தையின் வாழ்க்கையின் அடிப்படை போஷாக்கை அளிக்கிறது. ஆறு மாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த திட உணவும் தேவையில்லை. ஆறு மாதத்திற்குப் பிறகு தாய்ப்பால் சுரப்பதும் ஓரளவு குறைய வாய்ப்பு உண்டு. குழந்தையின் கலோரி தேவையும், புரதத்தின் அளவும் அதிகரிக்கிறது. தாய்ப்பாலில் வைட்டமின் C, வைட்டமின் D போதுமான அளவு காணப்படுவதில்லை. குழந்தை பிறக்கும் போது 5 மாதத்துக்குத் தேவையான இரும்புச் சத்து ஈரலில் சேமித்து தான் பிறக்கின்றது. ஆறு மாதத்துக்குப் பிறகு இந்த அளவு ஈரலில் குறைவதாலும், பாலில் இயற்கையாக இரும்புச் சத்து குறைவாக இருப்பதாலும், குழந்தைகளுக்கு வேறு திட உனவுகளின் மூலம் இந்த ஊட்டச் சத்துக்களை தர வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
பேபி புட்ஸ் என்று தயார் செய்து விற்கப்பட ஆரம்பிக்கும் வரை தாய்ப்பால் மட்டுமே 9 மாதம் வரை கொடுத்தார்கள். பேபி புட்ஸ் என்று டப்பாக்கள் விற்பனை ஆரம்பமானதும், அந்தப் பழக்கம் விடப்பட்டது. ஆறு மாதம் முடிந்ததும் கேழ்வரகு கஞ்சி, பொட்டுக்கடலை கஞ்சி ஆகியவற்றை குடுக்கத் தொடங்குவார்கள்.
நான்கு மாத முடிவில் பழச்சாறுகள் குடுக்க ஆரம்பிக்கலாம். ஆரஞ்சு, சாத்துக்குடி, தக்காளிப் பழச்சாறுகளை குடுக்கலாம். முதலில் குடுக்கும் போது சம அளவு தண்ணீரைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும். பிறகு தண்ணீர் அலவை சிறிது சிறிதாக குறைத்து 30 நாட்களுக்குள் பழச்சாற்றினை தண்ணீர் சேர்க்காமல் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஒரு 75 – 80 ml (100 ml வரை குடுக்கலாம். பழச்சாறுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து ஊட்டலாம். கீரை வகைகளை, அல்லது காரட் போன்ற காய்கறிகளை சூப் செய்து மெல்லிய துணியில் வடிகட்டி குடுக்கலாம்.
7 –வது மாதத்திலிருந்து சாதத்தை நன்கு மசித்து பால் சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். கேழ்வரகு கஞ்சியை முதல் திட உணவாக குடுக்கலாம். கஞ்சியில் இரண்டு சொட்டு நெய் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால், எளிதாக முழுங்கவும், கலோரிச் சத்து அதிகமாகக் கிடைக்கும். நெய்யில் இருக்கும் கொழுப்புச் சத்து மூளை வளர்ச்சிக்குத் தேவையான ஒரு ஊட்டச்சத்து. கஞ்சி செய்வதற்கான மாவை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். கேழ்வரகை முளை கட்டி மாவை தயாரித்தால் கஞ்சி எளிதில் கட்டி ஆகாமல் இருக்கும்.
இன்று பெரும்பாலும் கடைகளில் ரெடிமேட் பேபி ஃபுட்ஸ் என்று குறிப்பிட்ட வயதுக்கேற்ப கிடைக்கும் உணவுகளே உபயோகிக்கப்படுகிறது. தாய்மார்களின் நேரத்திற்கும், வசதிக்கும் ஏற்ப உபயோகிக்கிறார்கள். முதல் முதலில் திட உணவை குழந்தைகளுக்கு ஊட்டும் போது குழந்தை உணவை முழுங்கத் தெரியாமல் நாக்கால் தள்ளி துப்பிவிடும். உணவை திணிக்கக் கூடாது. பொறுமையாக ஊட்ட வேண்டும்.
ஏழு மாதத்திலிருந்து வேக வைத்த காய்கறீகள் (உருளைக் கிழங்கு, கேரட் போன்ற காய்கறிகள்) கீரை வகைகளை சாதத்துடன் சேர்த்து குழந்தைக்கு ஊட்டலாம். வாழைப்பழம் மசித்து பால் அல்லது தண்ணீர் சேர்த்து கொடுக்கலாம். பழங்களுடன் சர்க்கரை சேர்க்க தேவையில்லை. சர்க்கரை அதிகம் சேர்த்துக் குடுப்பதால் அந்த இனிப்பு சுவைக்கு பழகிவிடும். அதற்குப் பிறகு பழங்களின் இயற்கையான சுவையை ரசிக்கத் தெரியாமல் போய்விடும்.
8 மாதத்தில் முட்டையின் மஞ்சள் கருவை நன்றாக வேக வைத்து கொடுக்கலாம். வெள்ளைக் கருவை 9 – 10 மாதத்தில் தான் வெள்ளைக் கருவை குடுக்க ஆரம்பிக்க வேண்டும். வெள்ளைக் கரு உட்கொள்வதால் நிறைய குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படலாம். பருப்பை உணவில் தினமும் சேர்க்க வேண்டும். பருப்பு சேர்க்காத நாட்களில் அசைவ உணவுகளைத் தரலாம். பல் முளைக்க ஆரம்பிக்கும் போது, இட்லி, சப்பாத்தி, இடியாப்பம் என்று எல்லா திட உணவையும் சிறிது சிறிதாக சேர்த்துக் குடுக்கலாம்.
எந்த ஒரு புது உணவை குழந்தைக்கு குடுக்கும் போதும், அதை சேர்க்க ஆரம்பித்த ஒரு வாரம் வரை வேறு எந்த புது உணவையும் சேர்க்காமல் ஒவ்வாமைக்கான அறிகுறிகளை கவனிப்பது நல்லது.
குழந்தைக்கு ஒரு வயது ஆகும் போது எல்லா உணவுகளையும் பழக்கி விடலாம்.
தொடர்புக்கு - அருணா ஷ்யாம் : 9884172289
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.