கல்யாண சமையல் சாதம்

அத்தியாயம்-23. மழைக்கால உணவுகள்

வடகிழக்குப் பருவமழை ஊற்றிக்கொண்டிருக்கும் நேரம். வெளியே எங்கும் செல்ல இயலவில்லை.

அருணா ஷ்யாம்


வடகிழக்குப் பருவமழை ஊற்றிக்கொண்டிருக்கும் நேரம். வெளியே எங்கும் செல்ல இயலவில்லை. வீட்டுக்குள்ளேயே அடைபட்டு, முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை. ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. கொசுக்களின் தீவிரமும் அதிகமாகிவிட்டது.

எங்கு பார்த்தாலும், சளி, தொண்டை வலி, காய்ச்சல் என்று பரவிக்கொண்டிருக்கிறது. உணவுப் பொருள்களை வாங்கக்கூட வெளியே செல்ல கடினமாக இருக்கிறது. எச்சரிக்கையாக இருக்க வேண்டி உள்ளது.

இந்த நேரத்தில்தான், கவனக்குறைவால் பல நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம். சில எளிய வழிமுறைகளை கடைப்பிடித்தால், நோய்கள் வருவதையும் பரவுவதையும் தடுக்கலாம்.

கொசுக்கள் மூலமாகப் பரவும் மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல்களைத் தடுக்க, கொசுக்கடியில் இருந்து காப்பாற்றிக்கொள்வது அவசியம். துணிகள் காய்ந்தவுடன், மடித்து மூடிய அறைக்குள் வைக்க வேண்டும். துவைத்த துணிகளை அப்படியே போட்டுவிட்டு, பிறகு அதை எடுத்து பயன்படுத்தக்கூடாது. முழு கை உடைய துணிகளை அணிய வேண்டும். வீட்டில் ஓர் அகல் விளக்கில் வேப்ப எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வைத்தால், கொசுக்களைத் தவிர்க்கலாம்.

நாம் உண்ணும் உணவின் மூலமும், குடிக்கும் தண்ணீர் மூலமும் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். ஆறு மணி நேரத்துக்கு மேல் சமைத்து வைத்த உணவுகளைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. குளிர்சாதனப் பெட்டியில் உணவை வைத்து, அதை பலமுறை சூடுபடுத்திச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குறைந்தது, இந்த மழைக்காலத்திலாவது அவ்வாறு செய்யாமல் இருக்க வேண்டும்.

தண்ணீரை நன்கு காய்ச்சிய பின்னரே குடிக்க வேண்டும். தண்ணீரை குறைந்தபட்சம் 20 நிமிடமாவது காய்ச்ச வேண்டும். அதன்மூலம் டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை நோய் போன்றவை வராமல் தடுக்கலாம். முட்டை, இறைச்சி வகைகளை இந்த மழைக்காலத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

கீரை வகைகள், பூசணிக்காய், காலிஃபிளவர் போன்ற காய்கறிகளைத் தவிர்ப்பது நல்லது. இஞ்சி, பூண்டு, மிளகு, பச்சை மிளகாய், தேன், மஞ்சள், சீரகம் ஆகியவற்றை சமையலில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனால், சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகளில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ளலாம்.

கண்டந்திப்பிலி சேர்த்து ரசம் வைத்துச் சாப்பிட்டால், காய்ச்சல் மற்றும் காய்ச்சலால் ஏற்படும் உடல் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். இது வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நன்மை தரும். சளி, இருமல் போன்ற பாதிப்புகள் வராமல் தடுக்க, கொள்ளு சாம்பார் மற்றும் கொள்ளு ரசம் வைத்துச் சாப்பிடலாம். கொள்ளு விதைகளை முந்தைய நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் உபயோகித்தால், மிருதுவாக வேகும், எளிதில் ஜீரணமாகும்.

காய்ச்சல் ஏற்படுவதுபோல் இருந்தால், ஒரு தேக்கரண்டி மலைவேம்புத் தூளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, இரண்டு மூன்று நாள்களுக்கு காலை மாலை இரு வேளையும் எடுத்துக்கொண்டால், காய்ச்சலில் இருந்து முழுமையான விடுதலை கிடைக்கும். காய்ச்சல் மூன்று நாள்களுக்கு மேலும் நீடித்தால், மருத்துவரிடம் சென்று சரியான மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

சமையலுக்கும் உளுத்தம் பருப்புக்குப் பதிலாக காராமணியை அதிகம் உபயோகப்படுத்தலாம். காராமணியை ஆறு மணி நேரம் ஊறவைத்து வடைமாவு போல் மிருதுவாக அரைத்து, வடை செய்து சாப்பிடலாம்.

இரவு நேரத்தில் படுக்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் பாலில் அரை தேக்கரண்டி கறிமஞ்சள் சேர்த்துக் குடிக்கலாம். இந்த மஞ்சள் நம் உடம்பில் கிருமிநாசினியாகச் செயல்பட்டு பல நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.

சர்க்கரைக்குப் பதிலாக, வெல்லம், பனங்கற்கண்டு, தேன் என்று பயன்படுத்தலாம். சர்க்கரை நோயாளிகளும் இவற்றைப் பயன்படுத்தலாம்.

மழைக்காலங்களில் ஏற்படும் ஜலதோஷத்தில் இருந்து உடனடி நிவாரணம் பெற, ஒரு மேஜிக் கஷாயம் இதோ –

ஒரு அகலமான பாத்திரத்தில், இரண்டு டம்ளர் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்து வரும்போது, மூன்று கருநிற வெற்றிலையை கிழித்து தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். அத்துடன், நான்கு மிளகு, நான்கு லவங்கம் போட்டு, தண்ணீர் பாதி அளவு சுண்டும் வரை கொதிக்க விடவும்.

பின்னர் அந்த நீரை வடிகட்டி, அதில் சிறிதளவு தேன் சேர்த்து வெதுவெதுப்பாக இருக்கும்போது குடிக்க வேண்டும். அவ்வாறு மூன்று வேளை குடித்தால், மூக்கடைப்பு, ஜலதோஷம் ஆகியவற்றில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். செய்து பாருங்கள்.

குழந்தைக்கு ஒரு வயது ஆகும் போது எல்லா உணவுகளையும் பழக்கி விடலாம்.

தொடர்புக்கு - அருணா ஷ்யாம் : 9884172289

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT