முகப்பு
செய்திகள்

மழை பெய்தால் நனையணும்...வெயில் அடித்தால் காயணும்!

"ஒரு காலத்தில் நாம் எல்லோரும் சத்துள்ள உணவினை உண்டு வந்தோம். கை குத்தல் அரிசி, சிவப்பு அரிசி, வரகு அரிசி, கம்பங் கூழ்...

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:00 AM
பகிர்:

"ஓரு காலத்தில் நாம் எல்லோரும் சத்துள்ள உணவினை உண்டு வந்தோம். கை குத்தல் அரிசி, சிவப்பு அரிசி, வரகு அரிசி, கம்பங் கூழ்... இப்படிச் சுவையான, சத்துள்ள உணவு வகைகள், நம் உணவில் சேரும். விளைவு, நாமும் நன்றாக இருந்தோம், நம் உடம்பும் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் இன்று எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. உணவே மருந்து, மருந்தே உணவு'' என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் மதிவாணன்.
 
 ""நான் சிறுவயதில் இருந்தே நோயையும் மருந்தையும் அருகில் பார்த்து வளர்ந்தவன். எனது தந்தை பரமேஸ்வரன் சித்த வைத்தியத்தில் விற்பன்னர். அவர் பாளையங்கோட்டை சித்தா கல்லூரியில் உதவி முதல்வராக இருந்தார். அவர்தான் எனக்கு ரோல் மாடல். அவரைப் பார்த்துத்தான் நானும் ஒரு டாக்டராக வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் நான் ஆயுர்வேத மருத்துவம் படித்து இருந்தாலும் அப்பாவினால், சித்தாவும் ஓரளவிற்கு தெரிந்து கொண்டு உள்ளேன். இந்த ஆயுர்வேத மருத்துவத்தில் பல விஷயங்கள் உள்ளன. மழை பெய்தால் நனையணும், வெயில் அடித்தால் காயணும், அதற்கு ஏற்றவாறு நம் உடல் நிலை இருக்க வேண்டும். அப்படி இருப்பதற்கு நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும். அதற்கு பூச நட்சத்திரம் (மாதத்தில் 27 நாட்களுக்கு ஒரு முறை வரும்) அன்று ஸ்வர்ண ப்ராசனம் உட்கொண்டால் நம் உடம்பில் அந்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது கர்நாடகாவிலும், கேரளாவிலும் பிரபலம். அங்கே பலரும் இதை அருந்துகின்றனர். ஆனால் இதை எல்லாம் நாம் எங்கே செய்கிறோம்?

 ஆயுர்வேதம் என்றாலே சமூலம் என்று தான் அர்த்தம். அதாவது மூலிகைகள் மூலம் எந்த நோயையும் ஆயுர்வேத மருந்தால் குணப்படுத்த முடியும். அதிலும் அலோபதி முறையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பின், சரியாகாத பல விஷயங்களை ஆயுர்வேதம் சரி செய்திருக்கிறது. ஆயுர்வேதத்தில் பக்க விளைவுகள் இல்லாததனால் எந்த நிலையிலும் இதை உட்கொள்ளலாம்.

பஞ்சாபிலிருந்து ஒரு நண்பர் சென்னை வந்திருந்தார். அவரது இரு கிட்னிகளும் பழுதாகியிருந்தது. டயாலிசிஸ் செய்து கொண்டு இருந்தார். சென்னையில் மாற்று கிட்னி பொருத்துவதற்காக வந்திருந்தார். வேறு ஒரு நண்பர் சொன்னதால் பாதி மனதுடன் என்னை வந்து பார்த்தார். நானும் அவரைப் பரிசோதித்து விட்டு மருந்து கொடுத்தேன். ஒரு நாள் விட்டு ஒருநாள் என்று இருந்த டயாலிசிஸ் இன்று வாரத்திற்கு இரண்டு என்று ஆகிவிட்டது. இன்று இவர் நன்றாக நடக்கிறாராம். சந்தோசத்துடன் என்னிடம் சமீபத்தில்தான் பேசினார்.

என்னைப் பொறுத்தவரை அதிக பிரச்னை உள்ள மனிதர்களை, அவர்களின் நோய்களைச் சரி செய்யவே விரும்புகிறேன்.

ஒருவர் கிட்டத்தட்ட உணர்வில்லாமல் என்னிடம் எடுத்து வந்தனர். நாடியும் குறைந்து கொண்டே வந்தது. மிகவும் வேகமாக அவருக்கு ஆயுர்வேத மருந்தை அளித்தேன். அரைமணி நிறத்திற்குப் பிறகு அவர் தூங்கி எழுவது போல் எழுந்தார். எனக்கும் உயிர் வந்தது, அவருக்கும்தான். அவர் உடம்பில் ஒரு பிரச்னைக்கு மேல் பல இருந்தது. நாடி பிடித்து பார்த்து எனக்குத் தெரிந்தவுடன், நான் வேகமாக மருந்து கொடுக்க எழுந்தார் என்றாலும், பதினைந்து நாட்கள் மருந்து சாப்பிட வேண்டும் என்று நான் கூற, அவருடன் வந்தவர்கள் மிகவும் சந்தோசப்பட்டனர். இன்று கூட அவர் நடந்து போகும்போது பார்த்தால், "உயிர் கொடுத்த உத்தமர்' என்று கூறி வணங்கி விட்டு செல்வார். இப்படி சவால் விடும் நோயாளிகள் தான் எனக்கு வேண்டும்.அவர்களை குணப்படுத்துவதே என் விருப்பமும் கூட, என்று கூறும் மருத்துவர் மதிவாணன் சாய் ராம் ஆயுர்வேத கல்லூரியின் சமூக பிரிவிற்கு தலைவராக இருந்தார். பல்வேறு யஐட களுக்கு வைத்தியம் பார்த்தவர். இன்று புதிய புதிய நோய்கள் வந்தாலும் எங்களது பழைய மூலிகைகளே, எந்த நோயாக இருந்தாலும் சரி செய்து விடும்'' என்று பெருமை பொங்க கூறுகிறார்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.