முகப்பு
செய்திகள்

'நாடியைப் பரிசோதித்து 4,448 நோய்களைக் கண்டறிய முடியும்'

மனிதர்களின் நாடியைப் பரிசோதித்து 4,448 நோய்களைக் கண்டறிய முடியும் என்று சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் நோயியல் துறைத் தலைவர் எஸ்.கே.சசி

Updated On : 29 ஏப்ரல் 2017, 12:56 am IST
நாடியைப் பரிசோதித்து நோய்களைக் கண்டறியும், சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் நோயியல் துறைத் தலைவர் எஸ்.கே.சசி.
பகிர்:

மனிதர்களின் நாடியைப் பரிசோதித்து 4,448 நோய்களைக் கண்டறிய முடியும் என்று சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் நோயியல் துறைத் தலைவர் எஸ்.கே.சசி கூறினார்.
நாடியைக் கொண்டு நோய்களைக் கண்டறியும் 'நாடி பரிக்ஷா' முறை குறித்த இரண்டு நாள்கள் தேசிய பயிலரங்கம், சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஸ்ரீ ஜயந்திர சரஸ்வதி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பயிலரங்கில் பேராசிரியர் சசி பேசியது: ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பாரம்பரிய மருத்துவம் இருக்கும். ஆனால், நமது நாட்டுக்கு சித்த, ஆயுர்வேதம் என இரண்டு பாரம்பரிய மருத்துவங்கள் உள்ளன. இந்த இரண்டு மருத்துவ முறைகளிலும் நாடியைப் பரிசோதித்து நோய்களைக் கண்டறியும் முறையும், முன்கூட்டியே நோய்களைக் கணிக்கும் முறையும் உள்ளன.
4,448 நோய்கள்: மனித உடலில் 10 நாடிகள் உள்ளன. உடலை 13 கூறுகளாகப் பிரித்து, மூன்று விரல்களைக் கொண்டு நாடியைப் பரிசோதிக்க வேண்டும். நாடியைப் பரிசோதித்த பின்பு, ஒவ்வொரு மனிதரின் தேகநிலையைக் கொண்டு நோய்களுக்கு மருந்து கொடுக்க வேண்டும். இந்தக் கலையின் மூலம் 4,448 நோய்களைக் கண்டறிய முடியும்.
மனிதர்களை 64 வகையான காய்ச்சல்கள் தாக்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இவற்றுக்கு ஆயிரக்கணக்கான மருந்துகள் உள்ளன. நாடியைக் கொண்டு ஒருவரின் தேகநிலையைக் கண்டறிந்து, அதற்கு ஏற்றாற்போல் மருந்துகளைப் பரிந்துரைத்தால் எளிதில் குணமடைய முடியும் என்றார் அவர்.
வர்மானியம் அறக்கட்டளையின் தலைவரும், சித்த வைத்தியருமான அர்ஜுனன் கூறியது: நாடி பரிக்ஷா முறை யாரால், எந்த காலத்தில் உருவாக்கப்பட்டது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் இந்தக் கலையானது சித்தர்கள், முனிவர்கள் மூலம் கற்றுக் கொடுக்கப்பட்டது. அழியக்கூடிய நிலையில் உள்ள இந்தக் கலையை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம், அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.
பயிலரங்கில், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.எஸ்.ராகவன், கல்லூரியின் முதல்வர் ராமதாஸ் மகாந்தி, நிர்வாக அலுவலர் லட்சுமணன், ஆயுர்வேத மருத்துவ பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.