செய்திகள்

பெண்ணின் கழுத்தில் 2 கிலோ கட்டி அகற்றம்: அரசு மருத்துவமனையில் நவீன கருவி மூலம் சிகிச்சை

தினமணி

பெண்ணின் கழுத்தில் வளர்ந்து வந்த 2 கிலோ எடையுள்ள கட்டியை, மதுரை அரசு மருத்துவமனையில் நவீன கருவி மூலம் மருத்துவர்கள் அகற்றி உயிரைக் காப்பாற்றி உள்ளனர்.
இதுதொடர்பாக, மதுரை அரசு மருத்துவமனை டீன் எம்.ஆர்.வைரமுத்து ராஜூ, மயக்கவியல் துறைத்தலைவர் கணேஷ்பிரபு ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் மனைவி ஜமுனா (53). இவருக்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கழுத்துப்பகுதியில் சிறிய அளவில் தைராய்டு கட்டி உருவாகி உள்ளது. அதற்கு சரியான சிகிச்சை எடுக்காததால் அந்தக் கட்டி 2 கிலோ வரை வளர்ந்துள்ளது. கழுத்தில் உள்ள கட்டி மூச்சுக்குழாயை அழுத்தியதால், ஜமுனா மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனை பொது அறுவைச் சிகிச்சைப் பிரிவில் ஜனவரி 15-ஆம் தேதி சேர்க்கப்பட்டார். கடந்த 10-ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
கட்டி காரணமாக, மூச்சுக்குழாய் வழியாக மயக்க மருந்து செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, ரூ.8 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட பைபர்லெஸ் பிராங்கோஸ்கோப் என்ற அதி நவீன கேமரா பொருத்தப்பட்ட கருவி ஜமுனா வாய் மூலமாக உள்செலுத்தப்பட்டது. வெளியில் உள்ள கண்காணிப்புத் திரை மூலம் மூச்சுக்குழாய் கண்டறியப்பட்டு 2 மணி நேர முயற்சிக்குப் பின்பு மயக்க மருந்து செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற அறுவை சிகிச்சையில் 2 கிலோ எடையுள்ள தைராய்டு கட்டி அகற்றப்பட்டது. தொடர்ந்து அவருக்கு டிரக்யாஸ்டமி எனப்படும் கழுத்துத் துளையிடுதல் சிகிச்சை மூலம் சுவாசப்பாதை சரிசெய்யப்பட்டுள்ளது.
பேராசிரியர் சையது இப்ராஹிம், லட்சுமி நாராயணன், கீதா, ஜானகிராமன் ஆகியோரும், மயக்கவியல் துறை இயக்குநர் கணேஷ் பிரபு தலைமையில் மயக்கவியல் நிபுணர்களும் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டனர்.
மருத்துவமனையில் தைராய்டு அறுவை சிகிச்சைகள் பல செய்யப்பட்டு வந்தாலும், 2 கிலோ கட்டியை கழுத்தில் இருந்து அகற்றுவது மிகவும் அரிதானதும் ஆபத்தானதும் கூட. கட்டியை அரசு மருத்துவர்கள் அகற்றி பெண்ணின் உயிரைக் காப்பாற்றி உள்ளனர். அயோடின் பற்றாக்குறை மற்றும் சுரப்பிகளின் சமச்சீரற்ற நிலையாலும் தைராய்டு கட்டி உருவாகும். இந்தக்கட்டியை வளர விட்டால் அது புற்றுநோயாக மாறும் அபாயம் உள்ளது. தைராய்டு கட்டிக்கு உடனடியாக சிகிச்சைப்பெறுவது அவசியம் என்றனர்.
மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ஷீலா ராணி மல்லிகா, அறுவைச் சிகிச்சை துறை மருத்துவர் அமுதா ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT