செய்திகள்

உங்கள் வயிற்றில் இந்தப் பிரச்னைகள் இருக்கிறதா?

தினமணி

உணவுப் பழக்கத்தில் தொடங்கி சில பழக்கவழக்கங்களால்தான் வயிற்றில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுகின்றது. இதிலிருந்து விடுபடுவது எப்படி?

உணவு சாப்பிடும் போது வேறு எந்த வேலையும் செய்யக் கூடாது. சிலர் புத்தகங்கள் படித்துக் கொண்டோ, டிவி பார்த்துக் கொண்டே ஏனோ தானோவென்று சாப்பிடுவார்கள். அது தவறு. சிலர் சாப்பிடும் போது கோழி விழுங்குவதைப் போல அவசர அவசரமாக மொத்த உணவையும் விழுங்கி வைப்பார்கள். இதுவும் தவறு. இதனால் அவர்கள் உணவுடன் சேர்த்து காற்றை வயிற்றுக்குள் அனுப்புவதால் வயிறு உப்புசம் அடையும்.  உணவை கவனத்துடன் நன்றாக மென்று விழுங்க வேண்டும். 

உடலின் நீர்ச்சத்து எப்போதும் சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு திரவ உணவும் சரிசதவிகிதம் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்கவேண்டும். உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் வயிற்றில் பிரச்னைகள் உண்டாக்கி, வீக்கத்தை ஏற்படுத்திவிடும்.

க்ளூட்டன் நிறைந்த உணவுப் பொருட்களான கோதுமை, பார்லி, சோயா ஆகிய உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் சிலருக்கு வயிறு வீங்கிவிடும். எனவே இவற்றை தவிர்த்து காய்கறிகள், பழங்களை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

சிலருக்கு வாயுக் கோளாறுகள் இருக்கும். உருளைக் கிழங்கு, துவரம் பருப்பு, கொண்டைக் கடலை, பன்னீர், சீஸ் போன்ற கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாமல் சாப்பிட்டுவிட்டால், நீராக கரைத்த மோரில் சிறிதளவு சீரகப் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து குடித்தால் வயிற்றில் சேர்ந்த வாயு வெளியேறி வீக்கம் குறையும்.

வேலை நேரத்தில் சிறுநீர் வரும்போது சிலர் அப்புறம் போகலாம் என்று அடக்கிக் கொள்வார்கள். இது தவறு. சீரான இடைவெளியில் தவறாமல் சிறுநீர் அல்லது மலத்தை வெளியேற்றாமல் இருந்தால், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும்.

மனத்தை லகுவாக வைத்திருக்க வேண்டும். தேவையில்லாத டென்ஷன், சண்டை என கோபமாக இருக்கும் போது அது மன அழுத்தத்தில் போய் முடியும். இதனால் உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகள் பாதிப்படையும். உளப் பிரச்னை உடல் பிரச்னையாக மாறி முதலில் பாதிப்படையும் உறுப்பு வயிறு தான். மன அழுத்தம் ஏற்பட்டால் உணவில் நாட்டமில்லாமல் போகும். நேரம் தவறி உணவினை உட்கொள்ளுதல் அல்லது அதிகப்படியான உணவினை உட்கொள்ளுதல் போன்ற பழக்கங்கள் ஏற்பட்டு, அது செரிமானப் பிரச்னையை ஏற்படுத்திவிடும். இதைத் தவிர்க்க ஆரம்பத்திலேயே கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தத்தை போக்க தினமும் காலை அல்லது மாலை ஒரு மணி நேரமாவது யோகா மற்றும் தியானப் பயிற்சிகளை செய்ய வேண்டும்.

எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்றாலும் வயிறும் பிரதானமான ஒரு உறுப்பு என்பது உண்மைதானே? இவ்வளவு உழைப்பும், ஓட்டமும் எதற்காக? அரை சாண் வயிற்றுக்கு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனவே வயிற்றை குப்பைத் தொட்டியாக பாவித்து கண்ட உணவை எல்லாம் உள்ளே தள்ளாமல் உடல் ஆரோக்கியத்துக்கான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அப்போதுதான் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நெருங்காது. உடலைப் பாதுகாத்தால் உயிர் பாதுகாக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT