செய்திகள்

கேரளம்: வைரஸ் காய்ச்சலுக்கு 6 மாதங்களில் 103 பேர் சாவு

தினமணி

கேரளத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பல வகையான காய்ச்சலுக்கு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே, போர்க்கால அடிப்படையில் அரசின் துப்புரவுப் பணிகளில் மக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மாநில சுகாதாரத் துறையின் சமீபத்திய தகவல்படி, கடந்த ஜனவரி மாதம் முதல், பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், எலி காய்ச்சல் போன்ற பல வகையான விஷக்காய்ச்சல்களுக்கு பெண்கள், குழந்தைகள் உள்பட 103 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், முதல்வர் பினராயி விஜயன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
குப்பைகள் தேங்குவதால், கொசுக்கள் பெருகுவதே, இந்த காய்ச்சலும், தொற்றுநோய்களும் பரவுவதற்கு முதன்மைக் காரணங்களாகும். நோய்கள் பரவாமல் தடுப்பதற்கு, தூய்மையைப் பராமரிக்க வேண்டியது அவசியமாகும். எனவே, இந்தச் சூழலை எதிர்கொள்வதற்கு, போர்க்கால நடவடிக்கையாக, அரசியல் கட்சிப் பிரமுகர்களும், தன்னார்வ அமைப்பினரும், அரசு ஊழியர்களும் ஒன்றிணைந்து அரசின் துப்புரவுப் பணிகளில் ஈடுபட வேண்டும். ஏற்கெனவே மாநில அரசு மேற்கொண்ட தூய்மைப் பணிகளின் காரணமாக, காய்ச்சல் பரவுவது குறைந்துள்ளது.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், போதிய மருத்துவர்கள் உள்ளனர். போதிய அளவில் மருந்துகளும் உள்ளன என்று பினராயி விஜயன் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காக சில ஆலோசனைகளைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
காய்ச்சல் காரணமாக, அரசு மருத்துவமனைகளுக்குச் சராசரியாக 20,000 பேர் சிகிச்சைக்காக வருகிறார்கள். இந்த அவசரகால சூழலை எதிர்கொள்வதில், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜாவும், அவரது துறையும் தோல்வியடைந்து விட்டனர் என்று ரமேஷ் சென்னிதலா கூறினார்.
இதனிடையே, அவரது குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்த அமைச்சர் சைலஜா, இந்தப் பிரச்னையை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதற்கு ரமேஷ் சென்னிதலா முயலுகிறார் என்றார்.
மேலும், இந்தப் பிரச்னையில் இருந்து மீள்வதற்கு கூட்டு முயற்சி அவசியம் என்றும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT