செய்திகள்

கழுத்து தண்டுவட வலிக்கு அரிய அறுவை சிகிச்சை மூலம் நிவாரணம்

DIN

பல்வேறு காரணங்களால் கழுத்து தண்டுவடத்தில் தீராத வலியினால் அவதிப்பட்டு வந்த மூன்று பேருக்கு நரம்புகளில் அரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த ரமேஷ் சாலை விபத்தில் சிக்கி தண்டுவடத்தில் பாதிப்பு, பெங்களூரைச் சேர்ந்த கிரண் சாலை விபத்தில் சிக்கியதால் கழுத்து தண்டுவடத்தில் 14 ஆண்டுகளாக தீராத வலி, அனந்தன் என்பவர் விபத்தில் சிக்கியதால் 27 ஆண்டுகளாக தண்டுவடத்தில் வலி என அவதியுற்று வந்த மூன்று பேருக்கு அரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 
இந்தியாவில் வெகு சில அறுவை சிகிச்சை நிபுணர்களே இதனைச் செய்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சையில் சிறிது குளறுபடி ஏற்பட்டாலும் நோயாளிக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக காவேரி மருத்துவமனையின் செயல் தலைவர் டாக்டர் அரவிந்தன், நரம்பியல் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் பாலமுரளி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
இதுபோன்ற பிரச்னைகள் பொதுவாக சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு, அதிக உயரத்தில் இருந்து கீழே விழுபவர்களுக்கு ஏற்படக் கூடும். தண்டுவடம் பாதிப்பதால் மின்சாரம் தாக்கியது, தீக்காயம் ஏற்பட்டது போன்ற வலிகள் காணப்படும். இந்த வலியானது தொடர்ந்து அதிகரித்தால் அந்த நபருக்கு தற்கொலை எண்ணம் கூட எழுக்கூடும். சில நோயாளிகள் 20 ஆண்டுகள் வரை வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடப்பர்.
ஆனால் இந்த அரிய அறுவைச் சிகிச்சையின் மூலம் வலி முற்றிலுமாக அகலும். அதன்படி, கழுத்து தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள நரம்புகளின் தொகுப்பில் தீராத வலிக்கு காரணமாக உள்ள நரம்புகள் செயலிழக்கச் செய்யப்படும்.
அதாவது அந்த நரம்புகள் மூளைக்குத் தகவல் அனுப்புவது நிறுத்தப்படும். அவ்வாறு செய்யும்போது வலி இருப்பதை மூளை உணராது.
சுமார் 9 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கு முன்னரும் இரண்டு நோயாளிகளுக்கு இதுபோன்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. தற்போது அந்த நோயாளிகள் நலமுடன் உள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT