செய்திகள்

இன்று மே 31, பேஸிவ் ஸ்மோக்கிங் பத்தி நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்க வேண்டிய நாள்!

RKV


உலகில் புகையிலையின் பேராபத்திலிருந்து மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையை அரசு, திரையரங்குகளில்... திரைப்படம் போடத் துவங்கும் முன் சில, பல புகையிலை ஒழிப்பு பிரச்சார விளம்பரங்கள் மூலமாக ஒழித்து விட முடியும் எனக் கருதுகிறது. ஆனால் அப்படி புகையிலையை ஒழிப்பதானால் புகையிலையை பல்வேறு வடிவங்களில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டுமே?! அப்படியொன்றும் குறைந்ததாகத் தெரியவில்லை. சர்வதேச அளவில் நாளுக்கு நாள் புகைபிடிப்போரின், புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறதே தவிர குறையவே இல்லை என்பதே நிஜம். 

அஸ்ஸாமில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தற்போது ஆட்சியமைத்திருக்கும் அரசியல் கட்சியின் முக்கியமான வாக்குறுதியே புகையிலையை மாநிலம் முழுதும் முற்றிலுமாக இல்லாதொழிப்பதே தங்களது முதல் கடமை என்பதாக இருந்தது. தேர்தலில் அந்தக் கட்சியின் வெற்றிக்கு இந்த வாக்குறுதியும் ஒரு காரணமாக அமைந்திருந்ததை சுட்டிக் காட்டில் சமீபத்தில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று மே 31 புகையிலையற்ற உலகை உருவாக்குவோம் எனும் சங்கல்ப தினத்தையொட்டி பொதுமக்களை போராட்டத்துக்கு அழைத்துள்ளது.

வாலண்டரி ஹெல்த் அசோஸியேசன் ஆஃப் ஆஃப் அஸ்ஸாம் ( VHAA)  என்ற பெயரில் இயங்கி வரும் அந்த தன்னார்வ தொண்டு அமைப்பு, அஸ்ஸாம் மாநிலத்தில், மத்திய புகையிலை எதிர்ப்பு நடவடிக்கையை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருக்கிறது. அதன் மூலமாக அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் புகையிலை சார்ந்த லாஹிரி வஸ்துக்களின் பயன்பாட்டை முற்றிலுமாகத் தடை செய்யக் கோரி மாநில அரசை நிர்பந்தித்து வருகிறது. VHAA அமைப்பின் கோரிக்கைகளில் தெளிவாகக் குறிப்பிடப்படும் விஷயங்கள் யாதெனில்,  அஸ்ஸாமில் பொது இடங்களில் புகைபிடித்தலை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என்பதோடு மைனர் சிறுவர்களுக்கு குறிப்பாக 18 வயதுக்கு குறைவாக உள்ள சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வதும், புகையிலை சார்ந்த பொருட்களை உட்கொள்ள ஊக்குவிப்பதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம், அதோடு பள்ளி, கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்கள் இருக்கும் எல்லைகளில் சுமார் 100 கெஜ சுற்றளவில் புகையிலை சார்ந்த பொருட்களின் விற்பனை தடை செய்யப்பட வேண்டும். அந்தத் தடையை சட்டப்பூர்வமாக நிலைநிறுத்த மாநில அரசு COTPA (CIGARETTE AND OTHER TOBACCO PRODUCT ACT) சட்டத்தின் 4 மற்றும் 6 பிரிவுகளைப் பயன்படுத்தி ஆவன செய்ய வேண்டும் என VHAA  அமைப்பு அஸ்ஸாம் மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.

மே 31 ஆம் தேதி சர்வ தேச அளவில், புகையிலை இல்லா உலகை உருவாக்கும் தினமாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. அதன்படி மே 31 ஆம் தேதியன்று புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களினால் ஏற்படக் கூடிய கொடுமையான ஆரோக்யக் கோளாறுகளைப் பட்டியலிட்டு மக்களுக்கு வெளிப்படுத்தி புகையிலையின் தீமையை உலகம் முழுக்க கொண்டு சேர்க்க வேண்டிய வேலையை அரசும் பலவேறு தனியார் தொண்டு நிறுவனங்களும் செய்து வருகின்றன.

புகையிலை என்பது அதைப் பயன்படுத்துகிறவர்களை மட்டுமல்ல, அவர்களைச் சார்ந்தவர்களையும் மிக பாதிக்கிறது. அதற்கு பேஸிவ் ஸ்மோக்கிங் என்று பெயரிட்டிருக்கிறார்கள். உங்களுக்கு புகை பழக்கம் இல்லாவிட்டாலும் கூட உங்களுக்கு நெருங்கியவர்களான அப்பாவோ, கணவரோ, சகோதரனோ, நண்பர்களோ புகை பழக்கத்திற்கு அடிமையானவர்களாக இருந்தால் அவர்கள் மூலமாக நீங்கள் பேஸிவ் ஸ்மோக்கிங் வகையறாவின் கீழ் மோசமான பாதிப்புக்கு உள்ளாக்கப் பட 90 சதவிகித வாய்ப்புகள் உள்ளன என புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவர்கள் தெள்ளத் தெளிவாக பல்லாண்டுகளாகப் எச்சரிக்கைப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். புற்றுநோய் மட்டுமல்ல, புகைபிடிப்பவர்களுக்கும் அவரது அருகாமையில் தொடர்ந்து இருப்பவர்களுக்கும் கார்டியோ வாஸ்குலர் என்று சொல்லப்படக் கூடிய இதய நோய்கள் தாக்கவும் அதிக வாய்ப்புகள் உண்டு என்கிறார்கள்.

இந்த போராட்டத்தை அஸ்ஸாமில் முன்னெடுக்க தன்னார்வ நிறுவனம் கூறும் காரணம், அஸ்ஸாமின் அடல்ட் பாப்புலேஷனில் பாதிக்கும் மேற்பட்டோர் புகையிலை அடிமைகள். அவர்களால் புகையிலையை வெறுக்கும் மக்களும் கூட பேஸிவ் ஸ்மோக்கிங் முறையில் பாதிக்கப் படுகிறார்கள். புகைபிடிக்கும் பழக்கமுள்ள ஒரு நபர் புகை பிடிக்கும் பழக்கமே இல்லாத 30 நபர்களின் ஆரோக்யக் கேட்டுக்கு அவரை அறியாமலே காரணமாகிறார். இந்த அவலம் முறியடிக்கப் பட வேண்டும் என்ற நோக்கில் தான் பொதுமக்களை புகையிலைக்கு எதிராகப் போராட அழைப்பு விடுத்திருக்கிறோம் என அந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் குறிப்பிடுகிறது.

தமிழ்நாட்டிலும் புகைபழக்கத்துக்கு அடிமையானவர்களின் சதவிகிதம் கணிசமாக உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

சிகரெட் பழக்கத்தை ஒழிக்க எலக்ட்ரானிக் சிகரெட் எல்லாம் கொண்டு வந்து பார்த்தார்கள். புகைபழக்கமுள்ள நண்பர் ஒருவர் முகநூலில் அதெல்லாம் சுத்த வேஸ்ட் என்கிறார்.

'திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ எனும் சொல்வழக்குக்கு ஏற்ப புகையிலை மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமென்றால் சம்மந்தப்பட்ட நபரே புகையிலையின் தீங்குணர்ந்து அதை நிறுத்தினால் ஒழிய சட்டத்தின் மூலம் அதை ஒழிக்க முடியுமென்று தோன்றவில்லை என்கிறார் மற்றொரு நண்பர்.

சரி இப்போது புகைப்பழக்கத்தை கைவிடுவதைப் பற்றி மறைந்த தென்கச்சி சுவாமிநாதன் தனது ‘இன்று ஒரு தகவல்’ புத்தகத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்றும் பார்த்து விடலாம்.

  • சில நாட்களுக்கு புகைப் பிடிக்கும் நண்பர்களின் பழக்கத்திலிருந்து விலகி இருக்கலாம், அதன் மூலமாக புகைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் குறைந்து ஒருநாள் முற்றிலுமாக அந்த எண்ணம் ஒழிய வாய்ப்பிருக்கிறது.
  • புகைப்பழக்கத்தை எதிர்த்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட வேண்டும். அது பிறருக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது. மீண்டு அந்த கெட்ட பழக்கத்தை தொடங்கி விடக்கூடாது என்ற உள்ள உறுதியை அது உங்களுக்கு ஏற்படுத்தக் கூடும்.
  • தினமும் இரண்டு தடவை குளிக்க வேண்டும், முதலில் வெதுவெதுப்பான நீர், பிறகு குளிர்ந்த நீர். இப்படி மாற்றி மாற்றிக் குளிக்கனும்.
  • தினமும் உடற்பயிற்சிகள் செய்யனும்.
  • தினமும் பிராணாயாமங்கிற மூச்சுப் பயிற்சியை மறக்காமல் செய்ய வேண்டும்.
  • சாப்பாடு மிதமாக இருக்க வேண்டும். மூன்று வேளையும் சாப்பாட்டில் காய்கறிகள் பழங்கள், கீரைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும், மொத்தமாகச் சாப்பிட்டுப் பழகாமல் சிறிது சிறிதாக உண்டு பழகி ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பராமரிக்கனும். இது நரம்புகளை அமைதிப்படுத்தும்.
  • நீண்ட நேரம் பசியோடு இருக்கக் கூடாது. புகைப்பழக்கத்தை நிறுத்த முயற்சித்துக் கொண்டிருக்கும் போது எடை குறைப்பு முயற்சிகளில் எல்லாம் ஈடுபடக் கூடாது.
  • காஃபீ, டீ, ஆல்கஹால், போதை வஸ்துக்கள் கலந்த உணவுப் பொருட்களை தவிர்த்து விட வேண்டும். கடுகு, மிளகு போன்ற காரமான உணவுப் பொருட்களையும் தவிர்த்து விட வேண்டும். ஏனென்றால் புகைப்பழக்கத்தை இவையெல்லாம் தூண்டக் கூடும்.
  • உணவில் உப்பைக் குறைக்க வேண்டும், குறைந்த பட்சம் நாளொன்றுக்கு 10 குவளை தண்ணீராவது குடிக்க வேண்டும். வெறும் நீர் புகைப்பிடிக்கும் ஆர்வத்தைத் தணிக்கும்.
  • கையிலே புகையிலை, சிகரெட் எது இருந்தாலும் உடனடியாக தூக்கியெறிந்து விட வேண்டும். இல்லாவிட்டால் அது அடிக்கடி புகைப்பிடிக்கும் ஆவலைத் தூண்டிக் கொண்டே இருக்கும்.
  • இறை நம்பிக்கை உள்ளவர்கள் புகைப்பிடிக்கும் ஆர்வம் வரும் போதெல்லாம் கடவுளைப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விடலாம்.
  • உங்களுக்கு மிகவும் பிடித்தவர்களிடமெல்லாம், நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்தி விட்டதாகச் சொல்லி விடுங்கள். பிறகு அவர்கள் முன்னால் புகைபிடிக்க தயக்கம் வரலாம்.

மேலே சொன்ன இந்த 10 வழிமுறைகளையும் தென்கச்சி தனது இன்று ஒரு தகவல் நூலில் பகிர்ந்திருக்கிறார்.

உலக புகையிலை இல்லா தினமான இந்த நன்னாளில் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் வேறு எப்போது பகிர்ந்து கொள்வது?!

இதனால் எவரேனும் ஒருவருக்கு பலனுண்டு என்றாலும் அது தென்கச்சியின் வார்த்தைகளுக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, அவரவர் சொந்த வெற்றியும் கூடத்தான்.

Image courtesy: NDTV.COM

*THANKS TO THENKACHI KO SWAMINATHAN'S INRU ORU THAGAVAL BOOK FOR TIPS.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT