செய்திகள்

எங்க வீட்டில் இருக்கும் கிரே கிளி எல்லாரையும் பெயர் சொல்லித்தான் கூப்பிடும்! கால்நடை மருத்துவர் டாக்டர் ராணி மரியா தாமஸ் பேட்டி!

தினமணி

முன்பெல்லாம் ஓரளவுக்கு வசதியுள்ளவர்கள் வீட்டில் பூனை, நாய், புறா, கிளி போன்றவற்றை செல்லப் பிராணிகளாக வளர்த்து வந்தனர். ஆனால், தற்போது வெளிநாட்டில் இருந்து தருவிக்கும் கவர்ச்சிகரமான மிருகங்கள் மற்றும் பறவைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகளவில் ஃபேஷனாகி வருகிறது. அந்த வகையில், தன்னுடைய வீட்டுத் தோட்டத்தை "சாராஸ் எக்சாடிக்' என்ற பெயரில் பறவைகளின் சரணாலயமாக மாற்றி அமைத்துள்ளார் கால்நடை மருத்துவரான டாக்டர் ராணி மரியா தாமஸ். இதுகுறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

"என்னோட சொந்த ஊர் ஆலப்புழா. நான் தற்போது கால்நடை மருத்துவத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு வயநாட்டில் படித்துக் கொண்டு இருக்கிறேன். கேரளாவைப் பொருத்தவரையில் ஒவ்வொரு வீடும் சின்னதாகவோ அல்லது பெரியதாகவோ தோட்டத்துடன் கூடிய இயற்கையுடன் ஒன்றி இருக்கும்.

பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணிகளும் வளர்ப்பார்கள். அந்த வகையில், என் அப்பாவுக்கும் செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் பூனை, நாய், புறா, கிளி எல்லாம் வளர்த்து வந்தார். வீட்டிலுள்ள தோட்டத்தில் இவை எல்லாம் சுதந்திரமாகச் சுற்றி வரும். இதனால், எனது சிறுவயதில் பொழுதுபோக்கே அவற்றுடன்தான். இதனால் எனக்கும் செல்லப்பிராணிகள் மீது இயற்கையாகவே ஒரு பந்தம் ஏற்பட்டுவிட்டது.

கால்நடை மருத்துவம் படித்தால் அவற்றின் உடல் நலத்தில் கவனம் செலுத்த முடியும் என்பதற்காகவே கால் நடை மருத்துவம் பயின்றேன். அதன் பிறகு, பறவைகள் குறித்த சிறப்பு பட்டப்படிப்பு படித்தேன். இதன் மூலம் ஒவ்வொரு பறவைகள் மற்றும் அதன் குணாதிசயங்கள் பற்றி ஆய்வும் செய்ய தொடங்கினேன்.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு பச்சைக் கிளிகளை வீட்டில் வைத்து வளர்க்கத் தடை வந்தது. ஆனால், வெளிநாட்டு கிளிகள், மிருகங்களை வளர்க்கத் தடையில்லை. அதே சமயம், அவற்றை வீட்டில் வைத்து பராமரிக்க முறையான உரிமம் பெற வேண்டும்.

இதனால், அப்பா வெளிநாட்டு கவர்ச்சிகரமான விலங்குகள் மற்றும் பறவைகளை வளர்க்க ஆரம்பித்தார். முதலில் ஒரு ஜோடி அயல்நாட்டு கிளியான பிரிஞ்சர்ஸ் வகை கிளியை வாங்கினார். அது நாளடைவில் பெருகியது. இப்போது எங்களிடம் 100 வகையான கிளிகள், பிரேசில் குரங்குகள், இக்வானா, மீன்கள் மற்றும் நாய்களும் உள்ளன.

பொதுவாக பச்சைக் கிளிகள் நாம் சொல்வதை அப்படியே திரும்பி சொல்லக் கூடியவை. அதுவே, அயல்நாட்டு கிளிகள் நாம் பேசுவதை கூர்ந்து கவனித்து உடனே துல்லியமாக திரும்ப சொல்லும். மக்காவ், அமேசான் மற்றும் கிரே கிளிகள் நன்றாகவே பேசக்கூடியவை. எங்க வீட்டில் இருக்கும் கிரே கிளி எல்லாரையும் பெயர் சொல்லித்தான் கூப்பிடும். வீட்டில் இருக்கும் மக்காவ் கிளியின் பெயர் காஃபி, நாயின் பெயர் ஜிஞ்சர்... இவற்றை இது பெயர் சொல்லித்தான் அழைக்கும். என்னை, அம்மாவை, அப்பாவைக்கூட பெயர் சொல்லித்தான் அழைக்கும். இசையைக் கேட்டால் நன்றாக நடனமாடும், சேட்டைகளுக்கும் பஞ்சமில்லை.

பறவைகளுக்கு ஆங்கிலம், தமிழ், ஹிந்தின்னு மொழிகளை பிரித்துப் பார்த்து, வித்தியாசப்படத் தெரியாது. அவைகளுக்கு நாம் பேசுவது ஒரு வகையான சத்தம் மட்டுமே! அதனால் தான் நாம் எந்த மொழியில் பேசினாலும் அவை திரும்பி அப்படியே உச்சரிக்கிறது.

பொதுவாக வெளிநாட்டு மிருகங்களையோ, பறவைகளையோ வாங்கிச் செல்வது பெரிய விஷயமல்ல, அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும். அதன் குணாதிசயங்களைப் பற்றி நன்கு தெரிந்து இருக்க வேண்டும். உதாரணத்திற்கு சில பறவைகள் கோபம் வந்தால், கத்தி கூச்சலிடும். அந்த சமயத்தில் அதை கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அதுபோன்று நமது செல்லப்பிராணிகளின் நடத்தையில் சிறிது மாற்றம் தென்பட்டாலும் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகுவது நல்லது.

நான் விடுமுறையில் ஊருக்கு வரும் போது எல்லாம், அங்கு செல்லப்பிராணிகள் வைத்திருக்கும் அக்கம் பக்கத்து விவசாயிகளின் பலரது வீடு அல்லது தோட்டத்திற்கு சென்று அவற்றைப் பார்வையிடுவது வழக்கம். அவைகளுக்கு உடல் நலத்தில் பிரச்னை ஏற்பட்டால் சிகிச்சையும் அளிக்கிறேன்.

சாராஸ் சரணாலயத்தை யார் வேண்டுமானாலும் வந்து பார்வையிடலாம். குறிப்பாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள். இவர்கள் ஒவ்வொரு கிளிகள் மற்றும் அதன் குணாதிசயங்கள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். அது தான் எங்களின் விருப்பமும் கூட'' என்றார்.
 - ஸ்ரீதேவி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT