உடல்நலம் காக்கும் ஹோமியோபதி

இனம் புரியாத பயம்! பீதி!

டாக்டர் வெங்கடாசலம்

ஓர் மழை நாளில் அந்தி சாயும் நேரம் இளைஞர் ஒருவர் தாயுடன் வந்திருந்தார். வெளியில் சென்றிருந்த நான் சற்று தாமதமாகத் திரும்பினேன். அதுவரை காத்திருந்தவர்கள் என்னைப் பார்த்ததும் பரபரத்தனர். அனுபவத்திலும், அன்பிலும் பண்பிலும் மூத்த அந்தத் தாய் கையெடுத்துக் கும்பிட்டு அழத் துவங்கினார். அருகில் ஆழ்ந்த துயரத்தின் சாயலோடு அந்த இளைஞர், இருவரையும் அறைக்குள் அழைத்துச் சென்று அமரச் சொன்னேன். தாயை அமைத்திப்படுத்தினேன். என்ன பிரச்னை என்று கேட்டேன்.

அந்த இளைஞர் முதுகலைப் பட்டதாரி. எம்.பில். படித்துக் கொண்டிருக்கிறார். அவருக்குள் இனம்புரியாத ஒரு பய உணர்ச்சி அடிக்கடி ஏற்படுகிறது. இது அவருடைய முக்கியத் துயர்.

'எப்போதிருந்து இந்த பயம்?’

'என் ஃபிரண்ட் ஒருத்தன் திடீர்னு காய்ச்சலில் படுத்தான். பிறகு கை, கால் விளங்காம போச்சு. எவ்வளவோ செலவழிச்சும் அவனை காப்பாத்த முடியல. இறந்து போயிட்டான். அதிலிருந்து எனக்கு எந்த சாதாரண வியாதி வந்தாலும் பயமாக இருக்கு’ இடையில் அந்த தாயார் தழுதழுத்த குரலில் குறுக்கிண்ட்டார்.

'இவன் எங்களுக்கு ஒரே பிள்ளை. இவனோட அப்பா கூடப் பிறந்தவங்க யாருக்கும் ஆம்பிளை பிள்ளைகள் இல்லை. அதனால அவங்க ஏதாவது செய்வினை வச்சிட்டாங்களோன்னு என் ஈரக்குலையே நடுங்குது. எம் பிள்ளைய எப்படியாவது காப்பாத்துங்கய்யா.’

'நம்பிக்கையா இருங்க. கவலைப்பட வேண்டாம். நிச்சயம் உங்க மகனுக்கு நல்லபடியாக குணமாகும்’ என்றேன்.

இந்த ஆறுதல் வார்த்தைகளுக்காக அந்த அன்னை கலங்கிய கண்களால் நன்றி சொன்னார்.

அந்த இளைஞரிடம் மேலும் விசாரித்தேன். ‘உங்களுக்கு வேறு என்ன மாதிரியான பயங்கள் இருக்கு?’

‘கயிறைப் பார்த்தால் பாம்பு போலத் தோன்றி பயம் ஏற்படுகிறது. வீட்டுக்குள் கொடியில் அசையும் துணிகள் கூட பாம்புகளாய் தெரியும். கனவிலும் பாம்புகள் வந்து போகின்றன. ரோட்டு ஓரமாய் நடந்து போகும்போது பஸ் மோதி அல்லது நான் மயங்கி விழுந்து அடிபட்டு செத்துப் போய் விடுவேனோ என்ற பயமும் வருகின்றது.’

அவருடன் உரையாடிய போது மேலும் சில குறிகள் கிடைத்தன. அவருக்கு குளிர்பானங்களும், இனிப்பு வகைகளும் பிடிக்கும். ஆனாலும் வயிற்று தொந்திரவுகளும் ஏற்படும். தேர்வுகளை நினைத்தாலே பயம் ஏற்படும். அவர் ஒவ்வொரு குறியாக சொல்லிக் கொண்டே வந்தபோது கைகள் நடுங்கி கொண்டு இருந்ததைக் கவனித்து விசாரித்தேன். படபடத்து விரல்களை நீட்டி சில நாட்களாக கை நடுக்கம் அதிகம் இருப்பதாகச் சொன்னார்.

கனவில் பாம்புகள் என்ற குறிக்கு ஐந்து முதல் தர மருந்துகள் இருந்தாலும் அதில் முதல் மருந்து ‘அர்ஜெண்டம் நைட்ரிகம்’. இம்மருந்தின் பல குறிகள் இவருக்கு பொருந்தி இருந்ததால் 1000 வீரியத்தில் ஒரு வேளை மருந்தும் தொடர் மாத்திரைகளும் கொடுத்தனுப்பினேன். 22 நாட்கள் கழித்து மீண்டும் வந்தார். முகத்தில் தெளிவும், மலர்ச்சியும் காணப்பட்டது. கைகளில் நடுக்கம் இல்லை. பய உணர்ச்சி பெரும்பாலும் குறைந்து விட்டதாகக் கூறினார். ஆனாலும், முன்பு போல தீவிரமாக இல்லாவிட்டாலும் ஓரிரு முறை லேசான பயம் வந்து போவதாகக் கூறினார். மீண்டும் ‘அர்ஜெண்டம் நைட்ரிகம்’ 1000 வீரியத்தில் ஒரு வேளையும் தொடர் மாத்திரைகளும் கொடுத்தனுப்பினேன். சில நாள் கழித்து சகஜ நிலைக்கு தான் வந்துவிட்டதாக திருப்தியோடு தெரிவித்தார்.

சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரியும் சுமார் 35 வயது ஆண். ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர். சாத்தூருக்கும் சிவகாசிக்கும் இடையில் உள்ள கீழ ஒட்டம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த தாழ்த்தப்பட்டவர்களின் கிராமத்தில் பலருடன் இரண்டறக் கலந்து பழகியிருக்கிறேன். பல நாட்கள் அங்கு உண்டு உறங்கித் தங்கியிருக்கிறேன். அந்த மக்களின் அன்பும் உபசரிக்கும் பண்புகளும் மறக்க முடியாதவை. எனது மருத்துவமனை புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்ட ஆரம்ப நாட்களில் 5 ஆண்டுகளுக்கு முந்தைய ஓர் நாள் மாலை 3 மணியளவில் அவர் மனைவியுடன் வந்தார். நான் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டதாகவும் மாலை 5 மணிக்கு வருமாறும் பணிப்பெண்கள் கூறியுள்ளனர். அவர் கண்ணீருடன் கும்பிட்டு வேண்டியிருக்கிறார். அவரின் மனைவியும் டாக்டருக்கு இவரை நல்லாத் தெரியும்; இவரு பேரைச் சொல்லுங்க என்று சொல்லியிருக்கிறார். பணிப் பெண்கள் விவரத்தை கூறியதும், அவரைக் காண வந்தேன்.

என்னைக் கண்டதும் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக பெருகி வழிந்தது. ஊமை போல சைகையில் ஏதோ சொல்ல முயன்றார். சிறுகுரல் கூட அவரது வாயிலிருந்து வரவில்லை. அவரது மனைவிடம் விசாரித்தேன். 'மதியம் ஒன்றரை மணிக்கு வழக்கம் போல சாப்பிட வந்தார். ரொம்பப் பசிக்குது என்றார். அவரை உட்காரச் சொல்லு விட்டு தட்டில் சோறு எடுத்துக் கொண்டு வந்து பார்த்தால், அவரால் பேச முடியவில்லை. தொண்டையை பிடித்துக் கொண்டு தரையில் உருண்டு புரண்டு அழுதார். சத்தமும் வரவில்லைல். நானும் பயந்து விட்டேன்’ என்றார்.

பீதியில் இருந்த நோயாளிக்கு முதலில் ACONITE அளித்தேன். அவரது துயரம் தணியவில்லை. தனக்கு என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ளவும் முடியவில்லை. அவரால் ஜீரணிக்கவும் முடியவில்லை. குழந்தையாய் கேவிக் கேவி அழுதார். அடுத்து Causticum உயர்வீரியத்தில் ஒரு வேளை கொடுத்துவிட்டு, Brain - CT ஆய்வு செய்து வருமாறு அனுப்பினேன். இரண்டாம் நாள் மதியம் வந்தார். சிடி ஆய்வு அறிக்கை Bulpar Palsy என்று சுட்டிக் காட்டியது. ARNICA 10M மருந்தினை நீரில் கலந்து (உறங்கும் நேரம் தவிர) ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை 10 மி.லி. வீதம் தொடர்ந்து அருந்துமாறு அறிவுறுத்தி அனுப்பினேன்.

மூன்றாம் நாள் காலை அவரும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுமாய் சுமார் இருபது பேர்கள் வந்திருந்தனர். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி. இன்று காலை எழுந்ததும் அவர் வழக்கம் போல பேசினார். நன்றாகப் பேசினார். என்று அவரது மனைவி நன்றி பெருக்கோடு கூற, அவர் மீண்டும் கண்களில் நீர் வழிய கும்பிட்ட படி 'சார் என் வாழ்க்கையே முடிஞ்சிருச்சின்னு நினைச்சேன். கடவுள் மாதிரி காப்பாத்திட்டீங்க, ரொம்ப நன்றி’ என்று நா தழுதழுக்க கூறினார். சுவரில் மாட்டியிருந்த ஹோமியோபதியின் தந்தை மாமேதை டாக்டர் ஹானிமனைக் காட்டி, 'நாம் எலோரும் அவருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்’ என்றேன்.

இந்தச் சிகிச்சைக்குப் பின் அவரை எப்போதாவது தற்செயலாகக் காண நேர்ந்தால், இருவருக்குமே மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த கிராமத்தைச் சேர்ந்த பலரும் எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வருகின்றனர் என்பது கூடுதல் செய்தி.

ஹோமியோ மருத்துவத்தின் அணுகுமுறைகளை, உன்னதங்களை ஊரறிய, உலகறியச் செய்ய வேண்டும். ஹோமியோபதி என்பது மூடு மந்திரங்களும், ரகசியங்களும் நிறைந்த செப்பிடு வித்தையல்ல. இது மகத்தான மருத்துவ விஞ்ஞானம். இதைக் கையாளுவது ஓர் அசாதாரணமான கலை. சாதனைகள் நிறைந்த அனுபவமிக்க மருத்துவர்கள் தமது மருத்துவ அனுபவங்களை பகிர்ந்து கொள்வது இளம் மருத்துவப் பயிற்சியாளர்களுக்கு மட்டுமல்ல மக்கள் அனைவருக்குமே பயன்படும்.

Dr.S.வெங்கடாசலம்
மாற்றுமருத்துவ நிபுணர்
சாத்தூர்
செல் - 9443145700
Mail - alltmed@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT