முகப்பு
இந்தியா

இன்று காவிரி மேற்பார்வைக் குழு கூட்டம்

தமிழகத்துக்கு இந்த மாதத்துக்கான காவிரி நீர் பங்கீடு அளவை முடிவு செய்ய காவிரி மேற்பார்வைக் குழுவின் கூட்டம் புதன்கிழமை (ஜூன் 12) தில்லியில் கூடுகிறது.

Updated On : 12 ஜூன் 2013, 4:28 am IST
பகிர்:

தமிழகத்துக்கு இந்த மாதத்துக்கான காவிரி நீர் பங்கீடு அளவை முடிவு செய்ய காவிரி மேற்பார்வைக் குழுவின் கூட்டம் புதன்கிழமை (ஜூன் 12) தில்லியில் கூடுகிறது.

இக்கூட்டத்தில் காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவின்படி, தமிழகத்துக்கு இந்த மாதம் 10 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய நீர்வளத் துறையின் செயலரும், மேற்பார்வைக் குழுவின் தலைவருமான எஸ்.கே. சர்காரின் தலைமையில் புதன்கிழமை மாலை 3 மணியளவில் தில்லி ஸ்ராம் சக்தி பவனில் இக்கூட்டம் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

இதில் தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப் பணித் துறைச் செயலர் சாய் குமார், கர்நாடக தலைமைச் செயலர் எஸ்.வி. ரங்கநாத், கேரள தலைமைச் செயலர் பாரத் பூஷண், புதுச்சேரி தலைமைச் செயலர் சேட்டன் பி. சங்கி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இக்கூட்டத்தில், "தமிழகத்தின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையைத் திறந்துவிட வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது.

ஆகையால், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்கான நீரை உடனடியாக கர்நாடகம் திறந்துவிட வேண்டும்' என்று தமிழகத்தின் சார்பில் வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகத்தில் தென் மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஒரிரு நாள்களாக மழை பெய்து வருகிறது. ஆகையால், கர்நாடக அணைகளிள் உள்ள நீர்மட்டத்தின் அளவைக் கணக்கிட்டு, அது குறித்த தகவலை இக்கூட்டத்தில் மத்திய நீர் ஆணையம் தெரிவிக்கும் என்று தெரிகிறது. அதை அடிப்படையாக வைத்து தமிழகத்துக்கான நீர் அளவை காவிரி மேற்பார்வைக் குழுவின் தலைவர் எஸ்.கே. சர்கார் முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவின் முதல் கூட்டம் ஜூன் 1-ஆம் தேதி நடைபெற்றது.

அப்போது, கர்நாடகத்தில் பருவ மழை தொடங்காத காரணத்தால் தமிழகத்துக்குத் தண்ணீர் தர இயலாது என்று கர்நாடக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது.

அதையடுத்து, எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் அந்தக் கூட்டம் ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.