முகப்பு
இந்தியா

தில்லி குடியரசு தின அணிவகுப்பில் 3 ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்படும் தமிழகம்

தில்லியில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் குடியரசு தின விழாவின் அணிவகுப்பில் இடம்பெறும் மாநிலங்களின் அலங்கார வாகனத் தொகுப்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:10 AM
பகிர்:

தில்லியில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் குடியரசு தின விழாவின் அணிவகுப்பில் இடம்பெறும் மாநிலங்களின் அலங்கார வாகனத் தொகுப்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தேசியத் தலைநகர் தில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் மாநில கலாசாரம், சாதனைகளை விளக்கும் வகையில் இடம்பெறும் வாகனங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்பது அந்த மாநிலத்துக்கு மிகப் பெரிய கௌரவமாகக் கருதப்படுகிறது.

அந்த வகையில், மாநில அரசுகள் வழங்கும் மையக் கருத்தை அடிப்படையாக வைத்து அணிவகுப்பில் பங்கேற்கும் அரசுகளை மத்திய குழு ஒன்று தேர்வு செய்கிறது.

இந்த ஆண்டு, தமிழகத்தின் பாரம்பரியத்தை விளக்கும் "கிராமியக் கோயில் திருவிழா' கருத்தை மையமாகக் கொண்ட மாதிரி அலங்கார ஊர்தி பரிசீலனைக்காக அனுப்பப்பட்டது. ஆனால், அதை பல்வேறு காரணங்களைக் கூறி மத்திய குழு நிராகரித்து விட்டது.

இது குறித்து அந்தத் தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களில் ஒருவரான ஏ.ஆர். ராமநாதனிடம் கேட்டதற்கு, ""தமிழகத்தின் அலங்கார வாகனம் அணிவகுப்பில் இடம்பெறாததற்கு என்னால் பதில் அளிக்க முடியாது. சம்பந்தப்பட்ட துறையின் மத்திய அமைச்சர்தான் பதில் அளிக்க வேண்டும்'' என்றார்.

மூன்று ஆண்டுகளாக நிராகரிப்பு: இதையடுத்து, இந்த விவகாரத்தை விசாரித்தபோதுதான், கடந்த சில ஆண்டுகளாக தில்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசு காட்டிய ஆர்வமும் அதை மத்தியக் குழு தொடர்ந்து நிராகரித்து வந்ததும் தெரியவந்தது.

இத்தனைக்கும், 2010-ம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மாநிலத்துக்கான மூன்றாவது பரிசை தமிழகம் பெற்றது. அதன் பிறகு 2011-ம் ஆண்டில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தும் தமிழகத்தின் மையக் கருத்தை தேர்வுக் குழு நிராகரித்து விட்டதாகத் தெரிகிறது. இந்த அனுபவத்தால் 2012-ம் ஆண்டில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசு தரப்பில் ஆர்வம் காட்டப்படவில்லை.

இந்த ஆண்டு, தென் மாநிலங்கள் வரிசையில் கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் மட்டும்தான் அவற்றின் அலங்கார வாகனங்களுடன் அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளன.

தமிழகத்துக்காவது மூன்று முறைதான் அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்துக்கு, அதுவும் காங்கிரஸ் ஆளும் அந்த மாநிலத்தின் அலங்கார வாகனம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த ஆண்டும் அணிவகுப்பில் இடம் பெறவில்லை.

இதற்கு காரணம் மத்திய தேர்வுக் குழுவின் பாரபட்சமான அணுகுமுறைதான் என்று அந்த மாநில அரசு அதிகாரிகள் வெளிப்படையாகவே குற்றம்சாட்டுகின்றனர்.

வேதனை அளிக்கிறது: குடியரசு தின அணிவகுப்பின்போது ராணுவ கவச வாகனங்களைத் தொடர்ந்து, மாநிலங்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார வாகனங்கள் செல்வது வழக்கம்.

இதில் பங்கேற்க விரும்பும் மாநிலங்கள், குறைந்தது மூன்று தலைப்புகளில் மையக் கருத்தைத் தயாரித்து அதன் அறிக்கையை தேர்வுக் குழுவுக்கு வழங்க வேண்டும். அதை பரிசீலிக்கும் தேர்வுக் குழு அறிக்கை மீது திருப்தி தெரிவித்தால் அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி கிடைக்கும். இல்லையேல், அந்தக் குழு தெரிவிக்கும் யோசனைகளை உள்ளடக்கி திருத்தப்பட்ட மையக் கருத்தை மாதிரி வாகனங்களுடன் காண்பித்தால் அதை அந்தக் குழு ஏற்றுக் கொண்டு அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி வழங்கும்.

ஆனால், இந்த முயற்சியில் தமிழகம் பல முறை திருத்தங்களுடன் தேர்வுக் குழுவிடம் படையெடுத்தும் அதன் உறுப்பினர்களின் கடைக்கண் பார்வை தமிழக வாகனம் மீது படாததுதான் வேதனை என்கிறது தமிழக அரசு அதிகாரிகள் தரப்பு.

நான்கு முறை பேச்சுவார்த்தை: இந்த நிலையில் தமிழகம் தொடர்ந்து குடியரசு தின அணிவகுப்பில் புறக்கணிக்கப்படுவது குறித்து தமிழக அரசு உயரதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, ""இந்த ஆண்டு தமிழகத்தின் சார்பில் கிராமக் கோயில் திருவிழாக்கள் என்ற தலைப்பில் மையக் கருத்து அளிக்கப்பட்டது. அந்தத் தலைப்பில் அலங்கார வாகனத்தின் மாதிரியை தமிழக அரசின் பொருள்காட்சிக்கு வடிவமைக்கும் சிறந்த வடிவமைப்பாளர் மூலம் உருவாக்கினோம்.

ஆனால், பார்வையிட்ட தேர்வுக் குழுவினர் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று முறை கூறிய திருத்தங்களை முழுமையாக நிறைவேற்றிக் காண்பித்தோம். அப்போதும் அந்தக் குழு தமிழக அலங்கார வாகனத்துக்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டது.

இது தொடர்பாக தமிழக செய்தித் துறை செயலர் தலைமையில் மாநில அதிகாரிகள் குழுவினர் மத்திய தேர்வுக் குழுவிடம் நான்கு முறை பேச்சு நடத்தியது. ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியது'' என்றனர்.

இந்த ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் மொத்தம் 23 அலங்கார வாகனங்கள் பங்கேற்கின்றன. அதில் 13 மாநிலங்கள், 10 அமைச்சகங்களின் அணிவகுப்பு வாகனங்களாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.