பாகிஸ்தானின் பெஷாவரில் பள்ளிக்குள் புகுந்து 132 மாணவர்கள் உள்பட 148 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் தலிபான்கள் இயக்கமான
தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதல் உலகையே அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. யார் இந்த பாகிஸ்தான் தலிபான்கள்
"இனி நல்ல தலிபான்கள், கெட்ட தலிபான்கள் என வேறுபடுத்திப் பார்க்கப் போவதில்லை'- பெஷாவரில் ராணுவப் பள்ளிக்குள் புகுந்து 132 மாணவர்களை பாகிஸ்தான் தலிபான் பயங்கரவாதிகள் கொன்று குவித்த பின்னர், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறிய வார்த்தைகள் இவை. பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதத்தை ஒழிக்க இனி ராணுவ நடவடிக்கை மட்டுமே தீர்வு என்றும் அவர் சொன்னார்.
பாகிஸ்தான் தலிபான்கள்
பாகிஸ்தானின் வடக்கு, தெற்கு வஜிரிஸ்தான் மாகாணத்தில் உள்ள பஸ்தூன் மலைப் பகுதியைத் தளமாகக் கொண்டு செயல்படுகிறது இந்த இயக்கம். பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கு தலைமை அமைப்புபோலச் செயல்பட்டு வந்த இந்த இயக்கம், அதிகாரபூர்வமாக 2007ஆம் ஆண்டு பைதுல்லா மெசூத் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.
அதற்கு முன்னர், இந்தப் பயங்கரவாதக் குழுவினர், ஆப்கனில் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் சண்டையிட்டு வந்த ஆப்கன் தலிபான் அமைப்பினருடன் இணைந்து அங்கு தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். 2001இல் அமெரிக்க கூட்டுப்படையின் தாக்குதலில் தலிபான்கள் வீழ்ச்சியடைந்தபோது, அந்த இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் உள்பட ஏராளமானோர் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள வஜிரிஸ்தானுக்குள் நுழைந்தனர். பின்னர், தலிபான்கள், அல்-காய்தா இயக்கத்தினரின் முக்கியத் தலைவர்களுக்குப் புகலிடமாகவே வஜிரிஸ்தானின் பஸ்தூன் மலைப் பகுதி திகழ்ந்தது.
இந்தப் பின்னணியில்தான் 2007இல் பாகிஸ்தான் தலிபான் அமைப்பு பைதுல்லா மெசூத்தால் தொடங்கப்பட்டது. 2009, ஆகஸ்டில் இவர் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு, ஹகிமுல்லா மெசூத் என்பவர் இந்த இயக்கத்துக்குத் தலைமைப் பொறுப்பேற்றார். இவரும் 2013இல் அமெரிக்க விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதன்பிறகு, முல்லா
ஃபசுலுல்லா தலைமையில் தற்போது செயல்பட்டு வருகிறது. இவரையும் விமானத் தாக்குதல் மூலம் கொல்ல பாகிஸ்தான் ராணுவமும், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரும் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானுக்குள்ளேயே தாக்குதல் ஏன்?
அமெரிக்கா தலைமையிலான, உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டணியில் பாகிஸ்தான் இணைந்ததால், அதற்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக, பாகிஸ்தான் தலிபான் இயக்கம் கூறினாலும், நாடு முழுவதும் இஸ்லாமிய சட்ட ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும், ஆப்கனில் நேட்டோ கூட்டுப் படைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு தாக்குதல்களை நடத்த வேண்டும் என்பதும் அதன் நோக்கம்.
2012ஆம் ஆண்டு பள்ளிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த யூசஃப்சாய் மலாலா மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருந்துதான் பாகிஸ்தான் தலிபான் இயக்கம் அதிகமாக அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்னரே பல கொடூரத் தாக்குதல்களை அது நிகழ்த்தியுள்ளது. 2009ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள சிஐஏ அலுவலகத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல், நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் குண்டு வெடிப்பு முயற்சி என பாகிஸ்தானை தாண்டியும் அந்த இயக்கம் தனது பயங்கரத்தைத் தொடர்ந்தது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ கொல்லப்பட்ட சம்பவத்திலும், இந்த இயக்கத்துக்குத் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.
பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகத் தாக்குதலை நடத்தி வரும் அதேவேளையில், இடையிடையே அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி
சண்டை நிறுத்தத்தையும் இந்த இயக்கம் ஏற்படுத்தும். அப்படி ஒரு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்துதான், கடந்த ஜூன் மாதம் கராச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டு தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதற்குப் பதிலடியாக, வஜிரிஸ்தானின் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்த ராணுவ நடவடிக்கைக்கு பழிக்குப்
பழியாகத்தான் இப்போது, பெஷாவர் ராணுவப் பள்ளித் தாக்குதலை தலிபான்கள் நடத்தியுள்ளனர்.
தலிபான்களுக்கு எதிராக ஒற்றுமை?
பெஷாவர் தாக்குதலில் ஒன்றுமறியா பிஞ்சுகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் தலிபான்களுக்கு எதிரான ஓர் ஒன்றுபட்ட நிலையையும் பாகிஸ்தானில் ஏற்படுத்தியிருக்கிறது. முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான இம்ரான்கான் அரசுக்கு எதிரான கிளர்ச்சியைக் கைவிட்டது, தலிபான்களை ஒழிக்கும் நடவடிக்கைக்கு ஆப்கனின் ஆலோசனையை பாகிஸ்தான் கோருவது, பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கான தடையை பிரதமர் நவாஸ் விலக்கியிருப்பது என சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால், அது பாகிஸ்தான் அரசின் உறுதியான செயல்பாட்டில்தான் தெரியவரும். மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய லக்விக்கு ஜாமீன் அளித்திருப்பது போன்ற, இந்தியாவுக்கு எதிரான தனிப்பட்ட பகையை மனதில்கொண்டு செயல்பட்டால், தலிபான்கள் பாகிஸ்தானுக்கு கெட்டவர்களாகவே தொடருவர்.
அதிகப் பயன் தராத இலக்கு
"தலிபான் தலைவர்களைக் குறிவைத்துக் கொல்வதால், அந்த இயக்கத்துக்கு அதிகப் பின்னடைவு ஏற்படுவதில்லை. ஒரு தலைவரை இழந்தால் உடனடியாக அடுத்த தலைவரை அந்த இயக்கம் தேர்ந்தெடுத்துக்கொண்டு, தாக்குதலில் தொய்வில்லாமல் பார்த்துக் கொள்கிறது' என, கடந்த 2009ஆம் ஆண்டு அப்போதைய சிஐஏ இயக்குநர் லியோன் பனெட்டா அமெரிக்க அரசுக்கு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அண்மையில் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டது. ஆப்கானிஸ்தான் தலிபான்கள் தொடர்பான இந்தக் கணிப்பு, பாகிஸ்தான் தலிபான்களுக்கும் பொருந்தும். 2007இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கத்துக்கு இதுவரை 3 பேர் தலைவர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். இடையில், எத்தனையோ பிரிவினைச் சண்டைகள் நிகழ்ந்தபோதும், பாகிஸ்தான் தலிபான்கள் இயக்கம் தனது தாக்குதலை நிறுத்தியதாகத் தெரியவில்லை.
கொடூரத் தாக்குதல்கள்
பாகிஸ்தான் தலிபான் இயக்கம் பல்வேறு கொடூரத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதில் பேரதிர்ச்சியையும், பெரும் உயிரிழப்பையும் ஏற்படுத்திய சில முக்கிய சம்பவங்கள்:
1)2008, செப்டம்பரில் இஸ்லாமாபாதில் உள்ள மரியாட் ஹோட்டலில் குண்டு வெடிப்பு; 53 பேர் பலி
2)2009இல் பெஷாவரியில் பியர்ல் கான்டினென்டல் ஹோட்டல் குண்டு வெடிப்பு.
32012இல் யூசஃப்சாய் மலாலா மீது துப்பாக்கிச்சூடு.
4)2013, செப்டம்பரில் பெஷாவரில் உள்ள ஆல் செயின் தேவாலயத்தில் தற்கொலைப்படைத் தாக்குதல்; 120 பேர் பலி.
5) 2014, ஜூனில் கராச்சி விமான நிலையத் தாக்குதல்; 13 பேர் பலி.
6) 2014, டிசம்பர் 16இல் பெஷாவரில் ராணுவப் பள்ளி மீது தாக்குதல்; 132 மாணவர்கள் உள்பட 148 பேர் பலி.
பெஷாவர் பள்ளித் தாக்குதல்
இஸ்லாமாபாத் மரியாட் ஹோட்டல் தாக்குதல்
கராச்சி விமான நிலையத் தாக்குதல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.