இந்தியா

தில்லியில் பொது வாகனங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

தினமணி

பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்கள் பட்டியலில் உலகளவில் 4-ஆவது இடத்தில் தில்லி உள்ளது என்று தாம்சன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் என்ற சர்வதேச செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் "யூகவ்' என்ற ஆய்வு அமைப்புடன் இணைந்து அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆணுக்கு பெண் சரிநிகராகப் பரிணமிக்கும் இந்தக் காலகட்டத்திலும், பெண்களுக்கு சமூக வாழ்வில் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத நிலையில்தான் உலகம் இருக்கிறது. குறிப்பாக பொது வாகனங்களான பேருந்து, ரயில்களில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதில், கொலம்பியா நாட்டில் உள்ள பொகாட்டா நகரம் முதலாவதாக உள்ளது. இந்த நகரில் பேருந்து, ரயில்களில் செல்லும் 10-ல் 6 பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் பயணம் செய்ய வேண்டிய நிலையே காணப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, மெக்சிகோ நகரம், பெரு நாட்டில் உள்ள லிமா நகரம் ஆகியவை உள்ளன. நான்காவது இடத்தில் தில்லி உள்ளது. தில்லியில் 2012-ஆம் ஆண்டு பேருந்தில் பயணம் செய்த துணை மருத்துவ மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தலைநகரில் நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.

தில்லியை தொடர்ந்து, இந்தோனேஷியாவின் ஜகார்தா, ஆர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ், மலேசியாவின் கோலாலம்பூர், தாய்லாந்தின் பாங்காக், ரஷியாவின் மாஸ்கோ, பிலிப்பின்ஸ் நாட்டின் மணிலா, பிரான்ஸ் தலைநகர் பாரிஸ், தென் கொரியாவின் சியோல், பிரிட்டனின் லண்டன், சீன தலைநகர் பீஜிங், ஜப்பானின் டோக்கியோ ஆகிய நகரங்களில் பொது வாகனங்களில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியாத நிலைமை நிலவுகிறது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது, உலகளவில் பெண்களுக்கு பேருந்து, ரயில் போன்றவற்றில் மிகச் சிறந்த பாதுகாப்பு வசதியை அளிக்கும் நகராக நியூயார்க் விளங்குவது தெரிய வந்துள்ளது. ஆன்லைன் மூலம், பேருந்துகள் மற்றும் ரயில்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா கண்காணிப்பு, போலீஸாரின் தொடர் ரோந்து நடவடிக்கைகள், தொலைத்தொடர்பு வசதிகள் போன்றவை இதற்குக் காரணம் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

கெய்ரோ, தாகா, பாக்தாத், கின்ஷாஸா, டெஹ்ரான் போன்ற நகரங்களில் உள்நாட்டு மோதல்கள் சம்பவம் நடந்து வருவதால் அவற்றில் மேற்கண்ட ஆய்வை நடத்த முடியவில்லை என்றும் அறிக்கையில் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வையொட்டி மொத்தம் 6,555 பெண் பயணிகள், பாதுகாப்புத் துறை நிபுணர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோரிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக் காற்றுடன் கனமழை: பசுமைக் குடில்கள் சேதம்

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

கிருஷ்ணகிரியில் இடியுடன் மழை: மின் விநியோகம் பாதிப்பு

திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா்ப் பந்தல்கள் திறப்பு

வீடு புகுந்து ஆசிரியரை கத்தியால் குத்தி 8 பவுன் நகை பறிப்பு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT