வினோபா பாவேயின் "பூமிதான இயக்கத்தில்' நாடு முழுவதும் தானமாகப் பெறப்பட்ட 47 லட்சம் ஏக்கர் நிலங்களில், 23 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஏழைகளுக்கு விநியோகிக்கப்படாமல் உள்ளது தெரியவந்துள்ளது.
நிலம் இல்லா ஏழைகளுக்கு அந்த நிலங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏ ஆஷிஷ் தேஷ்முக் கடிதம் எழுதியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதி வினோபா பாவே, "பூமிதான இயக்கத்தை' 1951-ஆம் ஆண்டு ஏப்ரல்
18-ஆம் தேதி தொடங்கினார்.
நிலமற்ற ஏழைகளுக்கான இந்த இயக்கத்துக்காக, நாடு முழுவதும் ஏராளமான விவசாயிகளும், செல்வந்தர்களும் தங்களது நிலங்களை தானமாக வழங்கினர்.
இந்நிலையில், அந்த இயக்கத்தின் 64-ஆம் ஆண்டு விழாவையொட்டி, பிரதமருக்கு பாஜக எம்எல்ஏ ஆஷிஷ் தேஷ்முக் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
பூமிதான இயக்கத்தின்கீழ் நாடு முழுவதும் 47 லட்சம் ஏக்கர் நிலங்கள் தானமாகக் கிடைத்தன.
இதையடுத்து நில உச்ச வரம்புச் சட்டத்தை 1970-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது.
அந்தச் சட்டத்தின்கீழ், பூமிதான இயக்கத்துக்கு கிடைத்த 47 லட்சம் ஏக்கர் நிலங்களில் 25.64 லட்சம் ஏக்கர் நிலங்களை மத்திய அரசு கையகப்படுத்தியது.
கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 24 லட்சம் ஏக்கர் நிலங்கள் விநியோகம் செய்யப்பட்டுவிட்டன.
மீதமுள்ள 23 லட்சம் ஏக்கர் நிலங்கள் இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அந்த நிலங்களை ஏழைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கியுள்ள நிலையில், பூமிதான இயக்கத்தில் கிடைத்த நிலங்களை, நிலம் இல்லா ஏழைகளுக்கு வழங்கினால் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் என்று அந்தக் கடிதத்தில் ஆஷிஷ் தேஷ்முக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.