ரயில்வே ஒழுங்காற்று ஆணையம்: ஆலோசனைகளை வரவேற்கிறது ரயில்வே
இந்திய ரயில்வே துறைக்கு ஆலோசனைகளை வழங்கும் வகையில் அமைக்கப்படவிருக்கும் ரயில்வே ஒழுங்காற்று ஆணையம் குறித்த ஆலோசனைகள் வரவேற்படுகிறது.
இந்திய ரயில்வே துறைக்கு ஆலோசனைகளை வழங்கும் வகையில் அமைக்கப்படவிருக்கும் ரயில்வே ஒழுங்காற்று ஆணையம் குறித்த ஆலோசனைகள் வரவேற்படுகிறது என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.
தில்லியில் இன்று நடைபெற்ற பிகி (FICCI) கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சுரேஷ் பிரபு, ரயில்வே ஒழுங்காற்று ஆணையம் (Railway Regulatory Authority of India) அமைப்பதற்கான வரைவுகள் தற்போது தயாராக உள்ளன. ரயில்வே துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு விரைவில் அது வைக்கப்பட்டு அவர்களின் ஆலோசனைகள் கேட்கப்படும் என்றார்.
மேலும் அவர் பேசியதாவது:
Advertisement
முழுமையான வரைவுகள் தயாரிக்கப்பட்ட பின்னர் அது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். சுதந்திரமான அமைப்பாக செயல்படும் ரயில்வே ஒழுங்காற்று ஆணையம், பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்களை தீர்மானிக்கும்.
ரயில்வே துறையின் முக்கியமானப் பிரிவுகளில் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததால், கடந்த ஆட்சியில் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களை இயக்குவதில் சிரமங்கள் ஏற்பட்டன.
ஏழாது ஊதியக் குழு அறிக்கை அமல்படுத்தப்பட்டால், அது ரயில்வே நிதிநிலையில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். இது ரயில்வே செயல்பாட்டையும் பாதிக்கும்.
கடந்த ஆண்டு ரயில்வே தொலைநோக்குத் திட்டம் வெளியிடப்பட்டது. ரயில்வேயில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 8.5 லட்சம் கோடி முதலீடு செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
புதிய ரயில்பாதைகளை அமைப்பதை காட்டிலும், ஏற்கெனவே உள்ள பாதைகளை, இரட்டிப்பான பாதைககளாக மாற்றுவதில் கவனம் செலுத்தப்படும். மேலும், நல்ல தரமான உணவு, ரயில் பெட்டிகளில் புதிய வசதி, மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பயணிகளுக்கான வசதிகளும் வழங்கப்படும்.
ரயில்வேயில் நட்பு ரீதியான வணிகமுறை தேவைப்படுகிறது. பயணிகளை ஒரு நிலையத்தில் ஏற்றி மறு நிலையத்தில் இறக்கிவிடுதலை காட்டிலும், அனைத்து போக்குவரத்து துறைகளுடனும் இணந்து ஒருங்கிணைந்த போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.