முல்லைப் பெரியாறு அணைக்கு கூடுதல் பாதுகாப்பு
முல்லைப் பெரியாறு அணைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேரள உள்துறை அமைச்சர்
முல்லைப் பெரியாறு அணைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்தார்.
தில்லிக்கு இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை வந்த அவர், காலையில் மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங்கை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோனியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அதன்பிறகு, கேரள பவன் திரும்பிய ரமேஷ் சென்னிதலா, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக "தினமணி' நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:
மக்களின் பாதுகாப்பு முக்கியம்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்குத் தேவைப்படும் தண்ணீரைத் தருவதற்கு கேரளம் தயாராகவே உள்ளது. தமிழர்களை சகோதர, சகோதரிகளாக கேரள மக்கள் கருதுகின்றனர். இரு மாநிலங்களுக்கும் இடையிலான உறவு வரலாறு, பாரம்பரிய ரீதியிலானது. கேரளம், தமிழகம் ஆகிய இரு மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இரு மாநிலத்தவர்களும் வசிக்கின்றனர்.
கேரளத்துக்கு தமிழகத்தில் இருந்து அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வருகின்றன. அப்படியிருக்கும் போது, தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்குவதில் கேரள அரசு எவ்வாறு அலட்சியம் காட்டும்? தமிழர்களின் நலன்களைப் பேணும் அதேசமயம், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு, அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஐந்து மாவட்ட மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றின் மீது கேரள அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.
"சிஐஎஸ்எஃப் பாதுகாப்பை ஏற்கமாட்டோம்': முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள வரும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு கேரள அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இந்த நிலையில், அணைக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசு கோருகிறது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது.
கேரள எல்லைக்குள்பட்ட முல்லைப் பெரியாறு அணைக்கு பாதுகாப்பு வழங்குவது எங்கள் மாநில அரசின் கடமை. அங்கு மத்தியப் படை பாதுகாப்பு வழங்கப்படுவதை கேரளம் ஒரு போதும் ஏற்காது.
கூடுதல் பாதுகாப்பு: அணைப் பகுதியில் ஏற்கெனவே இருந்த கேரள மாநில காவல் துறையினரின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அணைப் பகுதிக்கென பிரத்யேமாக காவல் நிலையம் அமைக்கும் திட்டத்தையும் கேரளம் பரிசீலித்து வருகிறது.
இரு மாநிலங்கள் இடையிலான நீர்த் தேவை, பங்கீடு போன்றவற்றில் எழும் பிரச்னைகளை சுமுகமாக பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்க்க வேண்டும். இந்த விஷயத்தை தமிழக அரசோ, தமிழக அரசியல் கட்சிகளோ அரசியலுக்காகப் பயன்படுத்தாமல் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
புதிய அணைத் திட்டம் ஏன்?: முல்லைப் பெரியாறு அணையால் ஏதும் ஆபத்து ஏற்பட்டால் கேரளத்தில் உள்ள ஐந்து மாவட்டங்கள் நீரில் அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டுதான், புதிய அணைத் திட்டத்தை கேரள அரசு செயல்படுத்த விரும்புகிறது. அந்த அணையின் நீரால் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்கள் நீர்ப்பாசன வசதி பெறும் என்பதையும் கேரளம் நன்றாகவே உணர்ந்துள்ளது. இதைத் தமிழக அரசும் புரிந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்தில் இருந்து அத்தியாவசிய உணவுப் பொருள்களைக் கடத்தி வருவோரை கேரள காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து கைது செய்கின்றனர். இந்த விஷயத்தில் தமிழகக் காவல் துறை தரப்பின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம் என்றார் ரமேஷ் சென்னிதலா.