நாட்டின் பெருமை ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வழிகாட்டி செயற்கைக்கோள்கள்! இந்தாண்டு இறுதியில் செல்லிடப்பேசிகளில் எஸ்.பி.எஸ். வசதி
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 ஏ முதல் ஜி வரையிலான 7 செயற்கைக்கோள்களும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் தொடர்ந்து
நாட்டின் பிரத்யேக செயற்கைக்கோள் வழிகாட்டியாக அறிமுகப்படுத்தப்படவுள்ள எஸ்.பி.எஸ்.
(Standard Positioning System), செல்லிடப்பேசியில் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 ஏ முதல் ஜி வரையிலான 7 செயற்கைக்கோள்களும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் தொடர்ந்து விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. பிரத்யேக வழிகாட்டி செயற்கைக்கோள்களான இவற்றின் வாயிலாக, அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்த தன்னிறைவை அடைந்துள்ளது.
நாளொன்றுக்கு 18 மணி நேரம் இயங்கும்: இவை நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் வேலை செய்யும் திறன் கொண்டது. விரைவில் 24 மணி நேரமும் தகவல்களை தரத் தொடங்கிவிடும்,
இந்தச் செயற்கைகோள்கள் 1,500 கி.மீ. சதுர பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாகக் கண்காணித்து தகவல்களை அனுப்பும். மேலும் தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும். ஆக மொத்தம் இந்தச் செயற்கோள்கள் இந்தியாவுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வழிகாட்டியாகும்.
கண்காணிப்பு: நாடு முழுவதும், பாகிஸ்தான், இலங்கை நாடுகளின் கடல், சாலை நிலப்பரப்புகளையும் கண்காணிக்க முடியும். பின்னர், இந்தியா முழுமைக்குமான செயற்கைக்கோள் வழிகாட்டி இந்த ஆண்டு இறுதிக்குள் உருவாக்கப்பட்டு விடும் என்று இஸ்ரோ மூத்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார்.
மென்பொருள் தேவை: ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-இன் 7 செயற்கைக்கோள்களும் முழுமையாகத் தகவல்களை வழங்கத் தொடங்கியதும் அந்தச் சேவையை செல்லிடப்பேசியில் பயன்படுத்த மென்பொருள் உருவாக்க வேண்டும்.
இதற்காக இந்தியா மற்றும் உலகளாவிய செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளை பெங்களூரில் அண்மையில் அழைத்து இஸ்ரோ ஆலோசித்தது. அப்போது, அமெரிக்காவின் ஜி.பி.எஸ் சேவைக்கு அடுத்த இந்தியாவின் எஸ்.பி.எஸ். சேவையை செல்லிடப்பேசி இயங்குதளங்களில் பொருத்தும் வகையில் மென்பொருளை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டது.
மேலும், எஸ்.பி.எஸ். வழிகாட்டியை இந்தியாவின் கூகுள் தேடுதளத்திலும் பயன்படுத்த அந்த நிறுவனத்தின் இந்தியத் தலைமையகத்திலும் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதனால், அமெரிக்காவின் ஜி.பி.எஸ். (Global Positioning System) வழிகாட்டியை நாம் பயன்படுத்தாமல், நம் நாட்டின் பிரத்யேக எஸ்.பி.எஸ். வழிக்காட்டியை பொது மக்கள் பயன்படுத்தும் சூழ்நிலை விரைவில் உருவாகும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
செல்லிடப்பேசியில் எஸ்.பி.எஸ். வழிகாட்டி-நோக்கம் என்ன? நாட்டின் தகவல்கள் வழிகாட்டிகளை அமெரிக்கா ஜிபிஎஸ் மூலம் தருவதை நிறுத்தும் நோக்கத்துடன்தான், எஸ்.பி.எஸ், வழிகாட்டி மென்பொருள் உருவாக்கப்படுகிறது.
மீனவர்களின் எல்லைப் பிரச்னையை தீர்க்கலாம்: பாகிஸ்தான், இலங்கைக் கடற்கரை பகுதிகளை இந்தச் செயற்கைகோள்கள் முழுவதுமாக கண்காணிக்கின்றன. எனவே, எஸ்.பி.எஸ். வசதி முழுமையான செயல்பாட்டுக்கு வந்ததும், மீனவர்களின் படகுகளில் ரிசீவர்கள் பொருத்தப்படும். இந்திய எல்லையில் மீனவர்கள் இருக்கிறார்களா அல்லது இலங்கை எல்லையில் இருக்கிறார்களா எனச் சுட்டிக் காட்டிவிடும். இதே எச்சரிக்கை கடலோர காவல் படைக்கும் தெரியவரும். இதன் மூலம் மீன் பிடித்தல் எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.