ஆந்திரத்தில் சனிக்கிழமை (செப்.10) முழு அடைப்புப் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆந்திர பிரிவினை மசோதாவில் குறிப்பிட்டிருந்தபடி ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று மாநிலங்களவையில் அறிவித்திருந்தார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று பாஜக உறுதியளித்திருந்தது.
இந்நிலையில், தில்லியில் வியாழக்கிழமை மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி, வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்று முடிவெடுக்கப்பட்டது.
மாறாக, அந்த மாநிலத்துக்கு சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மத்திய அரசின் முடிவைக் கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆந்திரத்தில் சனிக்கிழமை ஒரு நாள் முழு அடைப்புப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
இதனால், சனிக்கிழமை ஆந்திரம் முழுவதும், கடைகள், பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் மூடப்படும், பேருந்துப் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு, ஆளும் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு அளிக்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.