இந்தியா

தன்னார்வ அமைப்புகளை முறைப்படுத்த சட்டம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

DIN

நாடு முழுவதும் உள்ள தன்னார்வ அமைப்புகளை முறைப்படுத்துவதற்கு சட்டம் கொண்டு வருவது குறித்து 8 வாரங்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் சந்திரசூட், எஸ்.கே.கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு விவரம்:
நாடு முழுவதும் உள்ள தன்னார்வ அமைப்புகளை முறைப்படுத்தவும், அந்த அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி, அவற்றின் செலவுக் கணக்குகள் ஆகியவற்றை சரிபார்க்கவும் தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை. எனவே, தன்னார்வ அமைப்புகளை முறைப்படுத்த சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு தங்களது நிலைப்பாட்டை 8 வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்புகள், நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், முறையாக வரவு-செலவுக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்வதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிûலையில், தன்னார்வ அமைப்புகளின் நிதி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
இதுதொடர்பாக, விசாரணை நடத்திய சிபிஐ, நாடு முழுவதும் இயங்கி வரும் 30 லட்சத்துக்கும் அதிகமான தன்னார்வ அமைப்புகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான அமைப்புகளே தங்களது வரவு-செலவு கணக்குகளை முறையாக சமர்ப்பித்துள்ளன என்று கடந்த 2015-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இதனிடையே, மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'மக்கள் செயல்பாட்டுக் குழு' (சிஏபிஏஆர்டி) என்ற அமைப்பும், உரிய முறையில் வரவு-செலவுக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்யாத 700-க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகளை, தவிர்க்க வேண்டிய பட்டியலில் வைத்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், பொதுமக்களின் பணம் விரயமாகக் கூடாது என்றும், முறைகேடுகளில் ஈடுபடுவோர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, நிதிமுறைகேடுகளில் ஈடுபட்ட பல்வேறு தன்னார்வ அமைப்புகளுக்கு எதிராக 159 வழக்குகள் பதிவு செய்ய பரிந்துரை செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. அதைத் தொடர்ந்தே, தன்னார்வ அமைப்புகளை முறைப்படுத்த சட்டம் கொண்டுவர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT